மயிலாடுதுறையே ஹேப்பி.. காவிரி கரையில் துலா உற்சவம்.. அரசு ஊழியர்களுக்கு குஷி.. உள்ளூர் விடுமுறை வேற
மயிலாடுதுறை: இன்று நடைபெறும் துலா உற்சவத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பருவமழை துவங்கியிருக்கும் நிலையில், கனத்த மழை கொட்டி வருகிறது. மேலும், தென்மேற்கு வங்கக்கடலின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் மயிலாடுதுறையிலும் கனமழை வெளுத்து கட்டுகிறது.. இதனால், மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு வருகிறது.

மீண்டும் விடுமுறை: நேற்று முன்தினமும் அதாவது 13ம் தேதி, கனமழை காரணமாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு நாள் மட்டும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில், இன்று புகழ்பெற்ற துலா உற்சவம் நடைபெறுவதால், மாவட்டத்துக்கு மீண்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..
ஐப்பசி மாதத்தின் கடைசி நாள் கடைமுகம் என்பார்கள்.. இந்த ஐப்பசி மாதத்தில்தான், அனைத்து புண்ணிய நதிகளும் புனிதத்தை அள்ளி வழங்கும் என்றும், ஐப்பசி மாதத்தில், காவிரி நீராடினால் புண்ணியம் ஏற்படும் என்றும் நம்பப்படுகிறது.. மயிலாடுதுறையின் காவிரித்துறையின் பெயர் துலாக்கட்டம் என்றும் போற்றப்படுவதால், இந்த பெருந் திருவிழாவின் பெயர் துலா உற்சவம் என்றே அழைக்கப்படுகிறது.
காவிரி ஆறு: மயிலாடுதுறை மாவட்டம் துலாக்கட்டத்தில் காவிரி ஆற்றின் கரைகளில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் துலா உற்சவம் நடைபெறும். இந்த துலா உற்சவத்தில் பல்வேறு மாவட்டங்ககளிலிருந்து மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி கரைகளில் புனித நீராடி செல்வது வழக்கமாகும்.
அதன்படி இந்த வருடத்துக்கான ஐப்பசி மாதம் துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி உற்சவம் இன்று அதாவது 15ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே, இன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது
அரசு அலுவலகம்: இன்றைய தினம் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 23-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என்று மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார். ஆனால், இந்த விடுமுறை தினத்தில் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருப்பது மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications