வெறுப்பரசியலின் "ஆணிவேர்" உங்களுக்குதான் பாடம் தேவை-உ.பி. யோகிக்கு ஆதரவாக ஸ்டாலினுக்கு வானதி கண்டனம்
சென்னை: வெறுப்பரசியலின் ஆணிவேரே அறிவாலயம்தான்; இந்துக்கடவுள்களைக் கொச்சைப்படுத்தியவர்களைப் பதவியில் அமர்த்திக்கொண்டு, முருகனின் முதற்படைவீடான பரங்குன்ற மலையில் அசைவம் கொண்டு செல்லப்பட்டதைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்த உங்களுக்குத் தானே வெறுப்பரசியல் குறித்து பாடம் எடுக்க வேண்டும்? என்று திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக வானதி சீனிவாசன் கூறியிருப்பதாவது: இந்துக்களின் நம்பிக்கைகள் மீது தொடர்ந்து சொல்லெறிபவர்களோடு கூட்டணி வைத்துக்கொண்டு, இந்துக்கடவுள்களைக் கொச்சைப்படுத்தியவர்களைப் பதவியில் அமர்த்திக்கொண்டு, முருகனின் முதற்படைவீடான பரங்குன்ற மலையில் அசைவம் கொண்டு செல்லப்பட்டதைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்த உங்களுக்குத் தானே வெறுப்பரசியல் குறித்து பாடம் எடுக்க வேண்டும்?

உங்கள் அரசியல் வாழ்வைக் காத்துக் கொள்ள தமிழக மக்களை இனம், மொழி மற்றும் சமூக வேறுபாடுகளால் பிரித்தாள முயற்சிக்கும் உங்களுக்கு, அதை சுட்டிக்காட்டினால் எதற்கு இத்தனைக் கோபம் வருகிறது?
மேலும், ஊர் முழுக்க மூன்று மொழிக் கற்பிக்கும் தனியார் பள்ளிகளை நடத்திக் கொண்டு அரசுப் பள்ளிகளில் “இருமொழி தான் வேண்டும்” என்ற உங்கள் போலி பரப்புரையும், தமிழகத்தில் கழிவுகளைக் கொட்டும் கேரள அரசையும் குடிநீர் தர மறுக்கும் கர்நாடக அரசையும் இணைத்துக் கொண்டு தொகுதி மறுவரையறை என்ற பெயரில் நீங்கள் போட்ட நாடகமும், மக்களிடம் எடுபடாமல் படுதோல்வியடைந்துவிட்டது என்பதை உங்கள் அறிவாலய அரசே நன்கு உணரும்.
இந்த அதிர்ச்சிகளிலிருந்து மீள முடியாமல், “வக்ஃப் வாரிய திருத்த மசோதா”-விற்கு எதிரான தீர்மானம் என்று நீங்கள் கிளப்ப முயலும் புது புரளியும் கூடிய விரைவில் நீர்த்துப்போகும், நீங்கள் கட்டமைத்த திராவிட மாயைகளிலிருந்து தமிழகம் கூடிய விரைவில் மீளும்! இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
வானதியின் அறிக்கையின் பின்னணி என்ன?
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஏ.என்.ஐ.-க்கு அளித்த பேட்டியில், வாக்கு வங்கி அரசியலுக்காக மொழியை கையில் எடுத்திருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்; மொழியை ஒற்றுமைக்குதான் பயன்படுத்த வேண்டும்; வெறுப்பை விதைக்க அல்ல என விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், வெறுப்பு பற்றி எல்லாம் நீங்கள் பாடம் நடத்த வேண்டாம்.. நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்க இல்லை; வாக்ககு அரசியலுக்காகவும் செய்யவில்லை.. இந்தி மொழி திணிப்பைத்தான், மேலாதிக்கத்தைத்தான் எதிர்க்கிறோம் என கூறியிருந்தார். முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிக்கைக்கு பதில் தந்துள்ளார் வானதி சீனிவாசன்.












Click it and Unblock the Notifications