For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை... வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று மாலை பெய்த கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது ஆதனூர் ஊராட்சியில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று காலை முதல் விட்டு விட்டு பெய்த மழை இரவு வெளுத்து வாங்கியது. மாலையில் பலத்த மழையால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகள் நிரம்பி வழிகின்றன. செங்கல்பட்டை அடுத்துள்ள விஞ்சியம்பாக்கம் ஏரி நிரம்பியதால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ள நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

Heavy rain affects Kanchipuram, Thiruvallur district extensively

கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் ஊராட்சியில் உள்ள பெரிய ஏரி நிரம்பி உபரி நீர் திறந்துவிடப்பட்டதால் ஏ.வி.எம்.நகர், எம்.ஜி.நகர், கண்ணதாசன் நகர், லட்சுமிபுரம், டி.டி.சி நகர், கபாலி நகர், கொருங்கதாங்கல், உள்பட பல்வேறு நகர் பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் வேலைக்கு செல்ல முடியாமலும், அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமலும் ஒரு தீவில் இருப்பது போல் தவித்து வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘‘ஆதனூர் ஊராட்சியில் உள்ள பல்வேறு நகரில் தண்ணீர் சாலைகளில் தேங்கி உள்ளது. வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. மேலும் பன்றிகள் சுற்றித்திரிவதால் அங்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக இங்கு தேங்கி உள்ள தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளை தி.மு.க. முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பால், போர்வை, குடை ஆகியவற்றை வழங்கினார்.

இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று பெய்த கன மழையால் திருவள்ளூர், ஈக்காடு, அரண்வாயல், கடம்பத்தூர், பேரம்பாக்கம், திருத்தணி பகுதிகளில் பலத்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

பலத்த மழையால் பேரம்பாக்கம், சிற்றம்பாக்கம், கூவம், இருளஞ்சேரி, சத்தரை, புதுமாவிலங்கை போன்ற சுற்று வட்டார பகுதிகளில் நெற்பயிற்கள் நீரில் மூழ்கின. தண்ணீரில் மூழ்கிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

English summary
Heavy rain affects Kanchipuram, Thiruvallur Districts, Flood water enters into peoples premises.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X