மடத்தின் ரூ.1500 கோடி சொத்துகளை அபகரிக்க திட்டம்! சூரியனார் கோயில் ஆதீனத்தின் மனைவி மீது புகார்
மயிலாடுதுறை: கும்பகோணத்தை அடுத்த சூரியனார் கோயிலின் ஆதீனம் மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகள், திருமணம் செய்துள்ள பெங்களூர் ஹேமாஸ்ரீ என்பவர் மடத்தின் ரூ 1500 கோடி சொத்துகளை அபகரிக்க முயற்சி செய்ய திட்டமிட்டுள்ளதாக சூரியனார் கோயில் காரிய ஆதீனம் சுவாமிநாத சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற நவக்கிரக ஸ்தலமாக விளங்குகிறது சூரியனார் கோயில். இந்த ஆதீனத்தின் 28ஆவது மடாதிபதியாக இருப்பவர் மகாலிங்க சுவாமி. இவருக்கு வயது 54.

இவரை ஏராளமான பக்தர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். அடிக்கடி ஆதீனத்திற்கு வந்து மகாலிங்க சுவாமிகளிடம் பக்தர்கள் ஆசி பெறுவார்கள். இந்த நிலையில் பெண் பக்தையை சூரியனார் கோவில் ஆதீன மடாதிபதி மகாலிங்க சுவாமி திடீரென திருமணம் செய்து கொண்டார்.
பெங்களூரை சேர்ந்த 47 வயதான ஹேமா ஸ்ரீ என்பவரைத்தான் அவர் திருமணம் செய்து கொண்டார். இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். ஹேமா ஸ்ரீ, எல்லாரையும் போல் மகாலிங்க சுவாமிகளை பார்த்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளார். இது போல் அடிக்கடி ஹேமா ஸ்ரீ, கோயிலுக்கு வந்து ஆசி வாங்கிய போது இருவருக்கும் இடையே நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து மனதால் விரும்பிய இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து மகாலிங்க சுவாமி, பெங்களூர் சென்று அங்கு ஹேமாஸ்ரீயை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி பதிவு திருமணம் நடந்துள்ளது.
எனினும் இதுகுறித்து வெளியில் யாருக்கும் தெரியவில்லை. ரகசியமாகவே இருந்தது. இந்த நிலையில்தான் இவர்களுடைய திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மடாதிபதி மகாலிங்க சுவாமி சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஆதீன மடாதிபதியாக திருமணம் ஆனவர்களும் இருந்துள்ளனர். நான் யாரிடமும் எதையும் மறைக்க விரும்பவில்லை.
நான் திருமணம் செய்துள்ள ஹேமா ஸ்ரீ மடத்துக்கு பக்தையாக வந்தவர். இனியும் அவர் பக்தையாக தொடர்வார் என்று கூறியுள்ளார். இதன் மூலம் அவர் பெண் பக்தரை திருமணம் செய்து கொண்டது உறுதியாகிவிட்டது. பொதுவாக மடாதிபதியாக இருப்பவர்கள் இல்லற வாழ்க்கையில் இருந்து விலகியே இருப்பார்கள்.
திருமணமாகியிருந்தாலும் மனைவியை பிரிந்து மடாதிபதியாக இருப்பார்கள். ஆனால் தற்போது சூரியனார் கோயில் மடாதிபதி, ஆதீனமாக இருந்து கொண்டே பக்தையை திருமணம் செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இவர்களது திருமணம் குறித்து சூரியனார் கோயில் காரிய ஆதீனம் சுவாமிநாத சுவாமிகள் கூறுகையில், துறவறத்தில் உள்ளவர்கள் இல்லறம் நோக்கிச் செல்வது ஏற்புடையதல்ல, பெங்களூர் பெண் மீது திருவிடைமருதூர் டிஎஸ்பியிடம் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளோம்.
பெங்களூரை சேர்ந்த ஹேமா ஸ்ரீ சூரியனார் கோவில் ஆதீன மடத்தின் ரூ 1500 கோடி சொத்துகளை அபகரிக்க முயற்சி செய்துள்ளார். இதை கைப்பற்றவே மகாலிங்க சுவாமிகளை திருமணம் செய்து கொண்டார் என்றும் சுவாமிநாத சுவாமிகள் குற்றம்சாட்டி உள்ளார்.












Click it and Unblock the Notifications