For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீதி துறையின் கருணைப் பார்வைக்கு ஏங்கும் டிடிவி தினகரன்!

Google Oneindia Tamil News

- ஆர்.மணி

சென்னை: தமிழக சட்ட மன்றத்தின் அஇஅதிமுக வின் 18 எம்எல்ஏ க்கள் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு, புதிய பாதையில் பயணிக்க துவங்கியிருக்கிறது.

தமிழக ஆளுநரை கடந்த 22.08.2017 ல் 18 அஇஅதிமுக எம்எல்ஏ க்கள் சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறினர். இதனை தனித் தனி கடிதங்களாகவும் ஆளுநரிடம் கொடுத்தனர். இவர்கள் அனைவரும் டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள். இதன் காரணமாக, இது கட்சி தாவல் தடை சட்டத்தின் படி குற்றம் என்று கூறி, அஇஅதிமுக தலைமை கொறடா சபாநாயகரிடம் கொடுத்த புகாரின் பேரில் செப்டம்பர் 18, 2017 ல் இந்த 18 பேரையும் எம்எல்ஏ பதவிகளில் இருந்து தகுதி நீக்கம் செய்தார் சபாநாயகர்.

பாதிக்கப்பட்ட 18 பேரும் சென்னை உயர்நீதி மன்றத்துக்கு சென்றனர். சபாநாயகரின் உத்திரவை ரத்து செய்து தங்களை மீண்டும் எம்எல்ஏக்களாக அமர்த்த வேண்டும் என்று கேட்டனர். 18 எம்எல்ஏ க்களும் தொடுத்த வழக்கில் ஜூன் 14 ம் தேதி சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது. துரதிர்ஷ்டவசமாக, இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகளும் தனித்தனியாக தீர்ப்புகளை, அதுவும் முரண்பட்ட தீர்ப்புகளை Split Verdict வழங்கினர். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பளித்தார். ஆனால் சக நீதிபதியான நீதிபதி சுந்தர் தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பளித்தார். வழக்கமாக உச்ச நீதிமன்றத்தில், இரு நீதிபதிகள் அமர்வு, இவ்வாறு Split Verdict கொடுத்தால், அந்த வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்படும். ஆனால் உயர்நீதி மன்றத்தில் இரண்டு நீதிபதிகள் அமர்வு Split Verdict கொடுத்தால், வழக்கு ஒற்றை நீதிபதிக்கு செல்லும். அதே போல தற்போது இந்த வழக்கு பெண் நீதிபதி விமலா வுக்கு ஒதுக்கப் பட்டிருக்கிறது.

விமலா விசாரணை எப்போது

விமலா விசாரணை எப்போது

நீதிபதி விமலா எப்போது இந்த விசாரணையை தொடங்கப் போகிறார் என்று இதுவரையில் தெரியவில்லை. வழக்கமாக இது போன்ற வழக்குகள் புதியதாக மீண்டும் ஒரு தனி நீதிபதி முன்பு வந்தால், வாத, பிரதிவாதங்கள் புதியதாக நடக்கும். சில வழக்குகளில் தனி நீதிபதி, ஏற்கனவே இரு வேறு தீர்ப்புகளை கொடுத்த நீதிபதிகளின் முழு தீர்ப்பையும் படித்து பார்த்து விட்டு விசாரணையே இல்லாமல் கூட தன்னுடைய தீர்ப்பை கொடுப்பார். ஆனால் இந்த வழக்கு மிகவும் முக்கியமான வழக்கு என்பதால் நிச்சயம் புதியதாகத் தான் விசாரணை நடக்கும். ‘'ஆம். உண்மைதான். இது மிகவும் முக்கியமான வழக்கு. தற்போதய தமிழக அரசுக்கு, மாநிலத்தை ஆளும் சட்டமன்ற மெஜாரிட்டி இருக்கிறதா இல்லையா என்ற கேள்வி எழுந்திருக்கும் சூழ்நிலையில், எடப்பாடி பழனிசாமி அரசின் ஆயுளே கேள்விக்கு உள்ளாகி இருக்கும் சூழ்நிலையில் கண்டிப்பாக தனி நீதிபதி புதியதாகத் தான் வழக்கு விசாரணையை மேற்கொள்ளுவார். இரண்டு தரப்பும் மீண்டும் புதியதாக தங்களுடையை வாதங்களை தொடங்குவார்கள். அந்த வாத, பிரதிவாதங்கள் முடிந்த பின்னர் தனி நீதிபதி தீர்ப்பளிப்பார்'' என்கிறார் வழக்கறிஞர் அ.சடகோபன்.

 முதல்வரின் பேச்சு

முதல்வரின் பேச்சு

இதனிடையே ஜூன் 16 ம் தேதி சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 18 எம்எல்ஏ க்களும் திரும்பி வந்தால் அவர்களை இரு கரம் நீட்டி வரவேற்க தயாராக இருப்பதாக பேசினார். அவர்களுக்கு அமைச்சர் பதவிகள் தர முடியாது என்றும், காரணம் இதில் சட்ட சிக்கல்கள் இருப்பதாகவும் முதலமைச்சர் கூறினார். முதலமைச்சரின் இந்த கருத்து விவரம் அறிந்தவர்கள் மத்தியில் உருவாக்கிய எண்ணம் என்னவென்றால், இந்த 18 எம்எல்ஏ க்களும் தங்களுடைய மனுக்களை, அதாவது அவர்களை எம்எல்ஏ பதவிகளிலிருந்து தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்திரவுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டால், அவர்களை மீண்டும் எம்எல்ஏ க்களாக சபாநாயகர் ஏற்றுக் கொள்ளுவார் என்பதுதான்.

முற்றிலும் சாத்தியமற்றது

முற்றிலும் சாத்தியமற்றது

ஆனால் இது முற்றிலும் சாத்தியமற்றது என்பது ஜூன் 18 ம் தேதி எல்லோருக்கும் வெட்ட வெளிச்சமாக தெரிந்து விட்டது. காரணம் என்னவென்றால், விவரம் அறிந்த மூத்த வழக்கறிஞர்கள், அனுபவம் மிக்க அரசியல் வாதிகள், இந்த 18 பேரையும் மீண்டும் எம்எல்ஏ க்களாக ஏற்றுக் கொள்ளும் அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை என்று திட்டவட்டமாக கூறி விட்டனர். 'இந்த சூழ்நிலையில் ஒரு போதும் சபாநாயகர் சம்மந்தப்பட்ட 18 எம்எல்ஏ க்களை மீண்டும் எம்எல்ஏ க்களாக அங்கீகரிக்க முடியாது. இந்திய அரசியல் சாசனத்தின் ஷரத்து 191 (2) ன் படி ஒரு முறை ஒரு எம்எல்ஏ வை சபாநாயகர் பதவி நீக்கம் செய்து விட்டால், மீண்டும் அந்த குறிப்பிட்ட சபாநாயகரே நினைத்தால் கூட அவர்களது எம்எல்ஏ பதவிக்கு உயிர் கொடுக்க முடியாது. இது வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போன்றது. திரும்பவம் அந்த அம்பு வில்லுக்கு வந்த சேராது. உயர்நீதி மன்றமோ அல்லது உச்ச நீதி மன்றமோ, சபாநாயகரின் உத்திரவு செல்லாது என்று கூறி, சபாநாயகரின் உத்திரவை ரத்து செய்தால் மட்டுமே இந்த 18 எம்எல்ஏ க்களும் மீண்டும் எம்எல்ஏ க்களாக ஆக முடியும். இது தெளிவாக இதே போன்ற பல வழக்குகளில் உச்சநீதி மன்றத்தால் தெளிவுபடுத்தப்பட்டு விட்டது'' என்று கூறுகிறார் மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயன்.

18 பேருக்கும் வாய்ப்பில்லை

18 பேருக்கும் வாய்ப்பில்லை

அது மட்டுமல்ல, இந்த சட்டமன்றத்தின் ஆயுட்காலம் 2021 மே மாதம் வரையில் இருக்கிறது. இது 15 வது சட்டமன்றம். இந்த சட்டமன்றத்தின் ஆயுட்காலமான 2021 மே மாதம் வரையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எந்த எம்எல்ஏ வும் தேர்தலில் போட்டி போட முடியாது. ‘ஆம். இதுதான் சட்டத்தின் நிலைப்பாடு. அதாவது சம்மந்தப்பட்ட 18 எம்எல்ஏ க்களின் பதவி நீக்கம் செல்லாது என்று உயர்நீதி மன்றமோ அல்லது உச்ச நீதிமன்றமோ தீர்ப்பு வழங்கினால் மட்டுமே இந்த 18 பேரும், 15 வது சட்டமன்றத்தின் ஆயுட் காலத்துக்குள் நடக்கும் இடைத் தேர்தல்களில் போட்டி போட முடியும். அதுவரையில் அவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் அவர்கள் போட்டிருக்கும் மனுக்களை வாபஸ் வாங்கினாலும் கூட தேர்தலில் போட்டியிட முடியாது. 15 வது சட்டமன்றத்தின் ஆயுள் முடிந்து, 16 வது சட்டமன்றத்திற்கான தேர்தல்கள் வந்தால் மட்டுமே இந்த 18 பேரும் தேர்தலில் போட்டியிட முடியும்'' என்று மேலும் கூறுகிறார் வழக்கறிஞர் விஜயன்.

காத்திருப்பு தொடர்கிறது

காத்திருப்பு தொடர்கிறது

இன்று தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகர் எடுத்த நடவடிக்கைக்காக, அதாவது, 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ததற்கான வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் இருந்து கொண்டிருக்கிறது. இதனிடையே ஆந்திராவை சேர்ந்த ஒரு எம்எல்ஏ உச்ச நீதிமன்றத்தில் ஒரு முக்கியமான மனுவை தாக்கல் செய்திருக்கிறார். ‘'சட்டமன்றங்களின் சபாநாயகர்களுக்கோ அல்லது நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளின், லோக் சபா மற்றும் ராஜ்ய சபா, வின் சபாநாயகர்களுக்கோ ஒரு காரியத்தை இப்படித் தான் செய்ய வேண்டும் என்று கட்டளையிடும் அதிகாரம், அதுவும் ஒரு காலநிர்ணயம் செய்து உத்திரவிடும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு, அதாவது, உயர்நீதி மன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்துக்கு இருக்கிறதா என்று கேட்டு ஒரு வழக்கினை தொடர்ந்திருக்கிறார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வின் முன் விசாரணைக்கு காத்திருக்கிறது. எப்போது விசாரணை தொடங்கும் என்று இதுவரையில் தெரியவில்லை.

எது எப்படியோ நீதி தேவனின் கருணைப் பார்வைக்காக இன்று டிடிவி தினகரன் மட்டுமல்ல, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கூடத் தான் காத்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் நிதர்சனம்.

English summary
How disqualification of MLAs issue rocks Tamil Nadu politics
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X