நாளை 10, 11ம் வகுப்பு தேர்வு முடிவு.. இன்டெர்நெட், பவர்கட் பிரச்சனையா? 3 வழிகளில் ஈசியா பார்க்கலாம்
சென்னை: 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாக இருக்கும் சூழலில் மின் தடை, இணைய இணைப்பு, ரிசல்ட் வெளியிடும் இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் வேறு சில வழிகளின் மூலமும் உடனுக்குடன் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள முடியும்.
2022 - 2023 கல்வியாண்டில் 10, 11, 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றன. இந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதிய மாணவ மாணவிகளுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில்தான், தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் கடந்த 15 ஆம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், "மார்ச், ஏப்ரல் 2023 இல் நடைபெற்ற 2022 - 2023 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு (பிளஸ் 1) பொதுத்தேர்வு முடிவுகள் 19.05.2023 (வெள்ளிக்கிழமை) அன்று பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் டாக்டர், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தின் முதல் தளத்தில் வெளியிடப்பட உள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணிக்கும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 19 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும். www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளுக்கு சென்று பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்." என்று குறிப்பிடப்பட்டது.
கடந்த வாரம் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை மாணவ மாணவிகள் பார்க்க முற்பட்டபோது இணையதளம் பலருக்கு வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஏராளமானோர் 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் தாமதமாகவே முடிவுகளை பார்த்து உள்ளனர். சிலர் இணையதளத்தை நாடாமல் வேறு வழிகளில் முடிவுகளை பார்த்து இருக்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளையும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை செய்து இருக்கிறது. தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின் தடை வேறு ஏற்படுவதால், இணையதளத்தை நம்பாமல் கீழ்காணும் மாற்று வழிகளை பின்பற்றுவதன் மூலமாக கடைசி நேர பரபரப்பு இல்லாமல் எளிதில் தேர்வுகளை பார்க்கலாம்.

வழி 1 - பள்ளி மாணவ மாணவிகளுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
வழி 2 - முதல் வழியின் முடிவுகள் தாமதமாகும் என்று நினைத்தால் உடனே உங்கள் பள்ளிகளுக்கு செல்லுங்கள். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன்கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
வழி 3 - ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள முடியும்.












Click it and Unblock the Notifications