சென்னை போலீஸ் போட்டுள்ள வழக்கை வரவேற்கிறேன் - பிரான்ஸ் தமிழச்சி
சென்னை: முதல்வர் ஜெயலலிதா குறித்து தவறான தகவல் பரப்பியதாக சென்னை போலீஸ் பதிவு செய்துள்ள வழக்கை வரவேற்பதாக பிரான்ஸ் தமிழச்சி தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு வார காலமாக அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா நலத்துடன் இருப்பதாகவும், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பகிரங்கமான கருத்துக்களை பிரான்சில் வாழும் தமிழச்சி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஏற்கனவே சுவாதி, ராம்குமார் விவகாரத்தில் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை பிரான்ஸ் தமிழச்சி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதால் முதல்வர் குறித்து அவர் பதிவிட்டிருந்த கருத்துக்கள் தீயாய் பரவியது.
இதுகுறித்து அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராமச்சந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை போலீஸ் பதிவு செய்துள்ள வழக்கை வரவேற்பதாக பிரான்ஸ் தமிழச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாவது: சென்னை போலீஸ் என் மீது வழக்குப் பதிவு. வரவேற்கிறேன். ப்ரெஞ்ச் போலிஸ் விசாரணைக்கு காத்திருப்பேன். உண்மைகள் வெளிவர எனக்கு கிடைத்த வாய்ப்பாக இந்த சந்தர்பத்தை கருதுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications