ஜெயலலிதாவின் மகள் என கூறும் அம்ருத்தா குறித்து எனக்கு தெரியாது: டிடிவி தினகரன்
ஜெயலலிதாவின் மகள் என கூறும் பெங்களூர் அம்ருதாவின் பின்னணி குறித்து எனக்கு ஏதும் தெரியாது என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
திருச்சி: ஜெயலலிதாவின் மகள் என கூறும் பெங்களூர் அம்ருதாவின் பின்னணி குறித்து தனக்கு ஏதும் தெரியாது என்றும் உச்சநீதிமன்றமே அவரது மனுவை தள்ளுபடி செய்துவிட்ட நிலையில் அந்த கேள்வியை ஏன் கேட்கிறீர்கள் என்றும் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா (36). இவர் நேற்று உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தார். அதில் தான் ஜெயலலிதாவின் மகள் என்றும் இதை தனது வளர்ப்பு பெற்றோரான ஜெயலலிதாவின் தங்கையும் அவரது கணவரும் இறக்கும் தருவாயில் கடந்த மார்ச் மாதம் தெரிவித்ததனர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் ஜெயலலிதாவின் உடலை தோண்டியெடுத்து டிஎன்ஏ சோதனை செய்தால் உண்மை தெரிந்து விடும் என்றும் அவர் கூறியிருந்தார். அடிப்படை ஆதாரங்கள் இல்லாததால் அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. எனினும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர அம்ருதாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதனிடையே இன்று திருச்சியில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை. அதிமுகதான் எங்கள் இயக்கம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எங்களுக்கும் திமுகவுக்கும் மட்டுமே போட்டியிருக்கும்.
வருமான வரித்துறை சோதனை என்பது ஆர்.கே.நகர் தேர்தல் முடியும் வரை நடக்கும். எங்கள் அணி சார்பில் தனிக்கொடியை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. இரட்டை இலை வழக்கின் தீர்ப்பில் கொடி, கட்சி அலுவலகம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இரட்டை இலை வழக்கில் மேல் முறையீடு செய்யப்படும். விரைவில் இந்த ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். ஜெயலலிதாவின் மகள் என கூறும் அம்ருதா குறித்து எனக்கு எதுவும் தெரியாது. உச்சநீதிமன்றமே அவரது மனுவை தள்ளுபடி செய்துவிட்ட நிலையில் இதுகுறித்து ஏன் கேள்வி எழுப்புகிறீர்கள் என்றார் தினகரன்.












Click it and Unblock the Notifications