கள்ளக்குறிச்சி அருகே.. 40 கிராமங்களில் கேட்ட பயங்கர சத்தம்.. வானில் தெரிந்த ஜெட்.. போலீஸ் வார்னிங்!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் வானாபுரம் பகுதியில் பயங்கர வெடி சத்தம் கேட்டதால் அப்பகுதியில் உள்ள மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். போலீசாருக்கு இதுபற்றிய தகவல் கொடுக்கப்பட்டது. விமான விபத்து ஏதேனும் நடந்ததா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வானாபுரம் சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள 40 க்கும் மேற்பட்ட கிராமங்களில் நண்பகலில் பயங்கர சத்தம் கேட்டது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் நில அதிர்வு ஏதேனும் ஏற்பட்டதா? அல்லது கல்குவாரியில் இருந்து சத்தம் வந்ததா? என விசாரிக்க தொடங்கினர். இதுபற்றிய தகவல் அப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதற்கு மத்தியில் வெடிசத்தம் கேட்பதற்கு முன்பாக வானத்தில் இரண்டு சிறிய ரக ஜெட் பறந்ததாகவும் அதன்பிறகே இந்த சத்தம் கேட்டதாகவும் ஒரு தகவல் பரவத் தொடங்கியது.

இது குறித்து போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். போலீசாரும் விரைந்து வந்து விமான விபத்து எதுவும் நடந்ததா? அல்லது சத்தத்திற்கு வேறு எதுவும் காரணமா? என பல கோணங்களில் விசாரிக்க தொடங்கினர். அதன்படி, மய்யனூர் காட்டுப்பகுதியில் டிரோன் வீடியோ மூலம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு நடத்தினர். தீ அணைப்புத்துறையினர், வருவாய் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
அவர்களும் இது தொடர்பாக தேடுதல் வேட்டையை தொடங்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. எனினும், அப்பகுதி சுற்று வட்டாரத்தில் கேட்டதாக சொல்லப்படும் திடீர் சத்தத்திற்கு என்ன காரணம் என்று இதுவரை கண்டறியப்படவில்லை. இதனிடையே, வானாபுரம் பகுதியில் வெடி சத்தம் கேட்ட விவகாரம் தொடர்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை என்று மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மய்யனூர் காட்டுப்பகுதியில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறியதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வீடியோ வேகமாக பரவியது. 2021 ஆம் ஆண்டு ஊட்டியில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தின் வீடியோவை வைத்து இப்படி வதந்தி பரப்பபடுவதாக எச்சரித்த போலீசார், வதந்தி பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
இதற்கிடையே, மய்யனூர் காட்டுப்பகுதியில் உள்ள கருடமலை மேல் அமைந்து இருக்கும் பழமை வாய்த வைகுண்டர் பெருமாள் கோவிலில் சத்தம் கேட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கூட்டாக சென்று பார்த்தனர். இதில் கோவில் கதவு திறக்கப்பட்டு உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விசாரித்ததில் உண்டியலில் இருந்த 3 ஆயிரம் ரூபாயை திருடர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. வானாபுரம் பகுதியில் அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்கள் அப்பகுதி மக்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications