சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகளவாக பாளையங்கோட்டையில் 13 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதை முன்னிட்டு பெரும்பாலான பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்ற செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கடந்த 24 மணி நேரத்தில் அதிகளவாக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் 13 சென்டி மீட்டர் மழை கொட்டியுள்ளதாக அவர் கூறினார்.
சிதம்பரம், கேளம்பாக்கம், ஸ்ரீவைகுண்டத்தில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நாகப்பட்டினம், சேரன்மாதேவி வேதாரண்யத்தில் 7 செ.மீ மழை பெய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தரங்கம்பாடி, காரைக்காலில் 6 செமீ மழையும் பதிவாகியுள்ளது. பரங்கிப்பேட்டை, மகாபலிபுரம், ராதாபுரத்தில் 5 செ.மீ மழை பெய்துள்ளது. சென்னை டிஜிபி அலுவலகம் பூந்தமல்லி, மணிமுத்தாறு மற்றும் நுங்கம்பாக்கத்தில் 4 செமீ என்ற அளவிலும் மழை பதிவாகியுள்ளதாகவும் பாலச்சந்திரன் கூறினார்.
இதனிடையே இலங்கை அருகே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும்
தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!