நைசாக பேசி வீட்டிற்கு அழைத்து சென்ற கயவன்.. வாணியம்பாடியில் 4 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
இது குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறிய நிலையில், சிறுமியின் உறவினர் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை சரமாரியாக தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துதான் வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. இவ்வாறு இருக்கையில் அதில் பெரும்பாலான குற்றங்கள் இந்தியாவில்தான் நிகழ்த்தப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2021ம் ஆண்டில் நாடு முழுவதும் 33,348 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது நாளொன்றுக்கு சராசரியாக 91 வழக்குகள். ஒரு மணி நேரத்திற்கு மூன்று வழக்குகள்.

திருப்பத்தூரில்
இது வெறும் பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்த புள்ளிவிவரங்கள்தான். குழந்தைகளுக்கு எதிராக பல்வேறு கோணங்களில் வன்முறைகள் நிகழ்த்தப்படுகின்றன. அந்த எண்ணிக்கை இதைவிட அதிகம். இவ்வாறு இருக்கையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் மேலும் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியின் நேதாஜி நகரில் வசித்து வருபவர் லியாகத். இதே பகுதியில் 4 வயது சிறுமியிடம் இவர் நன்றாக பேசி வந்துள்ளார்.

சிறுமி மாயம்
இவ்வாறு இருக்கையில், நேற்று தன்னுடைய வீட்டிற்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பாத நிலையில் பெற்றோர் ஒருபுறம் சிறுமியை தேடியுள்ளனர். சிறுமி விளையாடும் இடங்களிலும், அக்கம் பக்கத்தினர் வீட்டிலும் சிறுமி இல்லாததால் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால் சிறிது நேரத்தில் சிறுமி தானாக வீடு வந்துள்ளார். சிறுமி வீடு திரும்பியதையடுத்து பெற்றோர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

கொடுமை
ஆனால், வழக்கத்திற்கு மாறாக சிறுமி சோர்வாக இருந்துள்ளார். இது குறித்து சிறுமியிடம் பெற்றோர் விசாரித்துள்ளனர். மழலை மொழியில் சிறுமி தனக்கு நேர்ந்ததை விவரித்துள்ளார். இதனையடுத்து ஆத்திரமடைந்த உறவினர்கள் லியாகத்தை வீடு புகுந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் லியாகத்திற்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியதையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கைது
விரைந்து வந்த காவலர்கள் லியாகத்தை கைது செய்து அழைத்து சென்றனர். சம்பவம் குறித்து கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது. பெண்கள் குறித்து சரியான புரிதல் இல்லாததும், பெண்களை போகப்பொருளாக தொடர்ந்து சித்தரிப்பதும்தான் இதுபோன்ற கொடூர சம்பவத்திற்கு காரணமாகின்றன என உளவியல் மருத்துவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications