நள்ளிரவில் நுழைந்த ஐடி அதிகாரிகள்.. விடிய விடிய ரெய்டு! திருப்பத்தூரில் கட்டுகட்டாக பணம் பறிமுதல்
திருப்பத்தூர்: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், வருமானவரித் துறை அதிகாரிகள் திருப்பத்தூரில் நள்ளிரவில் ரெய்டு நடத்தி உள்ளனர். இதில் கட்டுகட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முறையான வருமான வரியைத் தாக்கல் செய்யாத நிறுவனங்கள், வரி ஏய்ப்பு செய்வோரைக் குறிவைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாகச் சோதனை நடத்தி வருகிறார்கள்.

பொதுவாக அரசியல்வாதிகள் குறிவைத்து மட்டுமின்றி வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்களைக் குறிவைத்தும் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படும். உரிய வருமான வரியைத் தாக்கல் செய்துள்ளனரா.. வரிஏய்ப்பில் ஈடுபட்டு உள்ளார்களா என்பதைச் சோதனை செய்வார்கள்.
சோதனை: அப்படித்தான் திருப்பத்தூரில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். கிடைத்த ரகசியத் தகவல் அடிப்படையில், காலையில் கார் மூலம் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் திருப்பத்தூரில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். அங்கே நவீன் என்பவரது வீட்டில் நடந்த சோதனையில் ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டுக்கட்டாக ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே இந்த ரெய்டு தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. அதாவது திருப்பத்தூரில் தூய நெஞ்சக் கல்லூரி எதிரே உள்ள காந்திபேட்டை பகுதியில் வசிக்கும் வசிக்கும் சுமி ஸ்டுடியோ உரிமையாளர் நவீன்குமார் (42) என்பவர் வீட்டில் தான் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். நள்ளிரவில் ஆரம்பித்த ரெய்டு விடிய விடிய நடந்துள்ளது.
இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடக்கும் நிலையில், பணப்பட்டுவாடாவைத் தடுக்க அங்கே வருமானவரித் துறையினர் முகாமிட்டுள்ளனர். திருப்பத்தூர் சுற்றுலா மாளிகையில் மட்டும் சுமார் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் முகாமிட்டு உள்ள நிலையில் நவீன்குமார் வீட்டில் ரெய்டு நடந்துள்ளது.
அங்கே எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது.. அது யாருடைய பணம் என்பது போன்ற தகவல்கள் ரகசியமாக உள்ளது. அதிகப் பணப் பரிவர்த்தனை செய்ததின் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் இயங்கும் மைக்ரோ பைனான்ஸிலும் இவருக்குத் தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இவருக்குத் தொடர்பு உள்ளதாகவும் முதல் பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருப்பினும், இதை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதன் பின்னரே எதற்காக இந்த ரெய்டு நடத்தப்பட்டது என்பது தெரிய வரும்.
தொடரும் ரெய்டு: கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சென்னையில் ஓட்டேரி உள்ளிட்ட 5 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப் பல லட்சம் மதிப்பிலான ரொக்கம் பதுக்கி வைக்கப்பட்டதாகக் கிடைத்த தகவல் அடிப்படையில் அதிகாரிகள் அந்த சோதனையை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தல் இந்த முறை தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. தேர்தலில் பொதுமக்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்படுவதைத் தடுக்க இந்த முறை தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இதுபோல சந்தேகம் இருக்கும் இடங்களில் ரெய்டு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications