"எனக்காக மாமாவுடன் பிரச்சினை வேண்டாம் தாத்தா"! பாமக இளைஞரணி தலைவர் பதவியை ஏற்க முகுந்தன் மறுப்பு?
திண்டிவனம்: பாமகவில் எந்த பதவியும் வேண்டாம் என்றும் அடிப்படை உறுப்பினராக மட்டும் தொடர ராமதாஸ் பேரன் முகுந்தன் பரசுராமன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாமகவின் தலைவராக இருந்த ஜி.கே.மணியின் மகன் ஜி.கே.எம். தமிழ்க்குமரனுக்கு இளைஞரணி சங்கத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு அன்புமணியிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியதாக தகவல்கள் வெளியாகின.

மேலும் லைக்காவில் தமிழ்க் குமரன் பணியாற்றுவதால் அதில் கவனம் செலுத்த தனது கட்சி பதவியை ராஜினாமா செய்தாராம். இதையடுத்து அந்த பதவி தற்போது காலியாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் அந்த பதவியை பிடிக்க பலரிடையே போட்டா போட்டி இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்றைய தினம் புதுவையில் பாமக பொதுக் குழு கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் வைத்து பாமக இளைஞரணி சங்கத் தலைவர் பதவிக்கு முகுந்தன் பரசுராமனை நியமிப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.
அப்போது அன்புமணி அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பாமகவில் இணைந்து 4 மாதங்களாகும் நிலையில் முகுந்தனுக்கு அத்தனை பெரிய பதவியை கொடுப்பதா, இது குடும்ப கட்சியா, அந்த பதவிக்கு பாமகவில் தகுதியான நபர்கள் வேறு யாருமே இல்லையா என கோபத்துடன் கேள்வி எழுப்பினார்.
அப்போது ராமதாஸ், "இது என் கட்சி, இங்கு நான் சொல்வதை கேட்பவர்கள் கட்சியில் இருக்கலாம். முடியாதவர்கள் யாராக இருந்தாலும் வெளியேறலாம்" என எச்சரிக்கை செய்தார். அப்போது அன்புமணி, தான் பனையூரில் கட்சி ஆபிஸ் திறந்துள்ளதாகவும் தன்னை சந்திக்க விரும்புவோர் அங்கு வரலாம் என்றும் அறிவித்துவிட்டு மைக்கை தூக்கி போட்டார்.
இந்த சம்பவத்தால் பாமக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். முகுந்தன் யாரென்றால் ராமதாஸின் மகள் வழி பேரன். அதாவது அன்புமணியின் அக்கா காந்திமதியின் மகனாம். இந்த நிலையில் தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட மோதலில் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இதற்காக தைலாபுரம் தோட்டத்திற்கு அன்புமணி உள்ளிட்ட நிர்வாகிகள் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் முகுந்தன் பரசுராமன் தனது குடும்பத்தினருடன் தைலாபுரம் தோட்டத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. பாமக தலைவரான அன்புமணியே தனக்கு எதிராக உள்ளதால் இளைஞரணி தலைவர் பதவி வேண்டாம் என தனது தாத்தாவிடம் அவர் தெரிவித்துள்ளாராம்.
மேலும் ஏற்கெனவே தான் வகித்து வரும் ஊடக பேரவை இளைஞர் அணி தலைவர் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு கட்சியின் அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருக்க போவதாக கூறியுள்ளாராம். தன்னால் தேவையில்லாமல் தந்தைக்கும் மகனுக்கும் எதற்கு பிரச்சினை என முகுந்தன் நினைத்து தானே அந்த பதவியை ஏற்காமல் விலக முடிவு செய்துள்ளாராம்.












Click it and Unblock the Notifications