டாஸ்மாக் கடையில் குண்டுவீச்சு: பலியான ஊழியர் குடும்பத்திற்கு ரூ.7லட்சம்; மனைவிக்கு அரசுப் பணி
சென்னை: சேலம் மாவட்டம் புதுப்பாளையத்தில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்த விற்பனையாளர் செல்வம் குடும்பத்திற்கு 7 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்கவும் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை

புதுப்பாளையம் மதுக்கடையில், இரவு பணியை முடித்துவிட்டு, விற்பனை தொகையை கணக்கிட்டு கொண்டிருந்த போது, சிலர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததால் விற்பனையாளர் செல்வம் உயிரிழந்தார். கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
உயிரிழந்த விற்பனையாளர் செல்வம் குடும்பத்திற்கு 7 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும், மேலும், குடும்ப நல நிதி, தொழிலாளர் வைப்புத் தொகையுடன் இணைந்த காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றின் பணப் பயன்கள் மற்றும் இதர பணப் பலன்களையும் உடனடியாக அவரது குடும்பத்திற்கு வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
செல்வத்தின் குடும்பத்தின் ஏழ்மை சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, அவரது மனைவிக்கு சத்துணவு மையத்தில் பணி வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
மதுவிலக்கு கோரி போராட்டம் நடத்திய போராட்டகாரர்கள் புதன்கிழமையன்று நள்ளிரவு புதுப்பாளையம் டாஸ்மாக் கடைமீது பெட்ரோல் குண்டுவீசினர். இதில் ஊழியர் செல்வம் உயிரிழந்தார். அவருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கோரி நேற்று சேலம் மாவட்டம் முழுவதும் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications