For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நத்தம் விஸ்வநாதன், தளவாய் சுந்தரம் உட்பட 15 மா.செ.க்கள் பதவி பறிப்பு - ஜெ. அதிரடி!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த நத்தம் விஸ்வநாதன், தளவாய் சுந்தரம் ஆகியோரின் மாவட்ட செயலாளர் பதவிகளை பறித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா. திண்டுக்கல் மாவட்ட செயலாளராக இருந்த நத்தம் விஸ்வநாதனுக்கு பதிலாக திண்டுக்கல் மேயர் மருதராஜ் மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து தளவாய் சுந்தரம் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அவருக்கு பதிலாக ஏ.விஜயகுமார் எம்.பி., மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Jayalalitha removes Natham Viswanathan,Thalavai Sundaram party post

இதே போன்று நெல்லை புறநகர் மாவட்ட செயலாளராக இருந்த முருகையாபாண்டியன் எம்.எல்.ஏ. மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நாராயண பெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக இருந்த தர்மருக்கு பதிலாக அமைச்சர் மணிகண்டன் ராமநாதபுரம் அதிமுக மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நத்தம் விஸ்வநாதன்

அதிமுகவில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர் நத்தம் விஸ்வநாதன். ஆளுங்கட்சியாக இருந்தால் மின்சாரத்துறை அமைச்சராகவும், கட்சியில் ஐவரணியில் முக்கிய நபராகவும் வலம் வந்தார். திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பதவியும் இவர் வசமே இருந்தது.

ஐவரணியில் இருந்து கல்தா

சட்டசபை தேர்தல் நேரத்தில் நத்தம் விஸ்வநாதன் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன இதனையடுத்து ஐவரணியில் இருந்து அவருக்கு கல்தா கொடுக்கப்பட்டது. தேர்தலில் நத்தம் தொகுதிக்கு பதிலாக ஆத்தூர் தொகுதியில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது.

சட்டசபை தேர்தலில் தோல்வி

ஆத்தூர் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஐ.பெரியசாமியிடம் தோல்வியை தழுவினார் நத்தம் விஸ்வநாதன். இதேபோல திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் ஆத்தூர், நத்தம், பழனி, ஒட்டன் சத்திரம் என நான்கு தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது.

மா.செ.பதவியில் இருந்து நீக்கம்

தேர்தல் தோல்வி எதிரொலியால் வேட்பாளர்களுக்கு குழிபறித்த நிர்வாகிகளை கட்டம் கட்டும் செயலில் அதிமுக பொதுச்செயலாளர் ஈடுபட்டுள்ளார். முதற்கட்டமாக சில மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நத்தம் விஸ்வநாதன் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் அதிரடி

2011 சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 6 தொகுதிகளில் 2 தொகுதிகளை அ.தி.மு.க. கைபற்றியது. கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற மாவட்டச் செயலாளர் பச்சைமால் வனத்துறை அமைச்சரானார்.

பச்சைமாலுக்கு சோதனை

குமரி மாவட்டம் தேரூர் இரட்டைக் கொலையில் பச்சைமாலிடம் நெருக்கமாக இருந்த மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சகாயம் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். உடனே ஜெயலலிதா, சகாயத்தை கட்சியில் இருந்து நீக்கினார்.
பச்சைமால் பற்றிய புகார்கள் அதிகரிக்கவே மாவட்டச் செயலாளராக நாகர்கோவில் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனை ஜெயலலிதா நியமித்தார்.

நாஞ்சில் முருகேசன்

நாஞ்சில் முருகேசன் மீதும் புகார்கள் கார்டன் கதவை தட்ட அடுத்த ஒரு வாரத்தில் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து அவர் தூக்கப்பட்டார். மேலும் வனத்துறையில் இருந்து தொழிலாளர் நலத்துறைக்கு பச்சைமாலும் மாற்றப்பட்டார்.
அதன்பின், வக்ஃபு வாரிய தலைவரான தமிழ்மகன் உசேன் மாவட்ட பொறுப்பாளரானார்.

கிழக்கு மேற்காக பிரிப்பு

ஒருங்கிணைந்த குமரி மாவட்டத்தை கிழக்கு, மேற்காக பிரித்து, கிழக்கிற்கு குருந்தண்கோடு ஒன்றியச் செயலாளரான சிவசெல்வராஜனையும், மேற்கிற்கு மேல்புறம் ஒன்றியச் செயலாளர் ஜான் தங்கத்தையும் மாவட்டச் செயலாளராக்கினார் ஜெயலலிதா.

லோக்சபா தேர்தலில் தோல்வி

2014 நாடாளுமன்ற தேர்தலில், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. தேர்தல் தோல்வியின் எதிரொலியாக, பச்சைமால் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். சிவசெல்வராஜனும், ஜான் தங்கமும் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து தூக்கப்பட்டனர்.

தளவாய் சுந்தரம்

ஓ.பி.எஸ் ஆதரவோடு தளவாய் சுந்தரம் கிழக்கு மாவட்டத்திற்கும், ஜெங்கின்ஸ் மேற்கு மாவட்டத்திற்கும் செயலாளர் ஆனார்கள். மீண்டும் ஒருங்கிணைந்த குமரி மாவட்டமாக மாற்றி அமைக்கப்பட்டு, தளவாய் சுந்தரத்தை மாவட்டச் செயலாளராக அறிவித்தார் ஜெயலலிதா. இந்நிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், 6 தொகுதிகளையும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியே கைபற்றி, அ.தி.மு.க.வை மொத்தமாக காலி செய்து விட்டது.

தளவாய் சுந்தரம் மா.செ. பதவி பறிப்பு

மா.செவாக இருந்த தளவாய் சுந்தரமும் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அ.தி.மு.க. தலைமை கடும் கோபத்தில் இருப்பதால், மாவட்டச் செயலாளர் மாற்றம் நிச்சயம் உண்டு என்று கூறப்பட்ட நிலையில் தளவாய் சுந்தரத்தை அதிரடியாக மாற்றி அவருக்கு பதிலாக ராஜ்யசபா எம்.பி விஜயகுமார் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மணல் அதிபருக்கு நெருக்கம்

ஏற்கனவே ஏ.விஜயகுமார் ராஜ்யசபா எம்.பி., வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது குமரி மாவட்டத்தில் இருந்து புகார்கள் பறந்தன. இவர் மணல் அதிபருக்கு நெருக்கமானவர் என்று கூறப்பட்டது. தற்போது மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதால் கோஷ்டி புகைச்சல் களை கட்டும் என்று கூறப்படுகிறது.

சென்னை, திருவண்ணாமலை நிர்வாகிகள் மாற்றம்

தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலாளராக கலைராஜனும், வடசென்னை தெற்கு மாவட்டச் செயலாளராக பாலகங்காவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து முக்கூர் என்.சுப்பிரமணியன் நீக்கப்பட்டு, தூசி கே.மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு - கரூர் - தேனி

தோப்பு என்.டி.வெங்கடாச்சலத்திடமிருந்த ஈரோடு புறநகர் மாவட்டச் செயலாளர் பதவி, தற்போது அமைச்சர் கே.சி.கருப்பணனிடம் வழங்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டச் செயலாளராக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்டச் செயலாளர் பொறுப்பு தங்கத்தமிழ்ச்செல்வனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

English summary
AIADMK supremo Jayalalithaa today sacked former Ministers Natham Viswanathan, And Thalavai Sundaram from their party posts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X