பிரதோஷம்.. சம்பிரதாயமாக அதிமுக வேட்பாளர் நேர்காணல் நடத்திய ஜெ.
சென்னை: சட்டசபை தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி தந்த திட்டங்களை திடீரென ஒவ்வொன்றாக தொடங்கி வைத்தார் ஜெயலலிதா. அதேபோல்தான் திடீரென ஒரே நாளில் தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் நேர்காணலையும் அதிரடியாக ஜெயலலிதா நடத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபைக்கு மே 16-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே அதிமுக, திமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்களைப் பெற்றன. பின்னர் திமுக, தேமுதிகவில் மும்முரமாக நேர்காணல் நடத்தப்பட்டது. தேமுதிகவில் நேர்காணல் முடிவடைந்துவிட்டது.

திமுகவின் நேர்காணல் இன்று முடிவடைகிறது. அதிமுகவைப் பொறுத்தவரையில் மொத்தம் 26,174 பேர் விருப்ப மனுக்களைக் கொடுத்திருந்தனர். இதில் ஜெயலலிதா போட்டியிட வேண்டும் என்பதற்காக 7,936 பேர் மனு கொடுத்திருந்தனர். ஆனால் விருப்ப மனு கொடுத்தோரிடம் எப்போது நேர்காணல் என்பது மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் திடீரென அதிமுக தலைமை கழகத்தில் இருந்து நேற்று ஒரு அறிவிப்பும் போட்டோவும் வெளியிடப்பட்டது.
அதில், "தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் மே 16-ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு, அதிமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டி யிட வாய்ப்பு வேண்டி விருப்ப மனு செய்திருந்தவர்களுக்கான நேர்காணல், அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா முன்னிலையில் நடைபெற்றது" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதிமுகவில் போட்டியிட விரும்புவோரிடம் தேர்தலில் போட்டியிட 26,000 பேர் மனு கொடுத்திருந்த நிலையில் அதெப்படி ஒரே நேர்காணலில் நடத்தி முடிக்க முடியும் என்ற ஆச்சரியம் அனைவருக்கும் எழவே செய்தது.
ஆனால் அதிமுக தரப்போ, இத்தனை ஆயிரம் பேரிடமும் ஒரே நாளில் நடத்த முடியாதுதான்; அதனால் மாவட்ட செயலாளர்கள், உளவுத்துறை மற்றும் தனியார் உளவு நிறுவனம் கொடுத்த அறிக்கைகள் அடிப்படையில் ஒரு தொகுதிக்கு 3 பேர் பட்டியல் ஒன்று தயார் செய்யப்பட்டு அவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டதாக கூறுகின்றனர்.

அதே நேரத்தில் நேற்று பிரதோஷம் என்பதால் சம்பிரதாயமாக நேர்காணல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இன்று மகா சிவராத்திரி, நாளை அமாவாசை என்பதால் இன்றும் கூட நேர்காணல் நடக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படி பெயருக்கு 3 நாட்கள் நேர்காணல் என அறிவித்துவிட்டு முதல் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட ஜெ. திட்டமிட்டுள்ளதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் அதிமுகவில் கோலோச்சி வந்த ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் எவரும் இந்த நேர்காணலின் போது ஜெயலலிதாவுடன் இருக்கவில்லை. மாறாக நேர்காணலின்போது அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோர்தான் உடன் இருந்தனர்.
அதாவது 5 ஆண்டுகளுக்கு முன் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட அம்மா குடிநீர் திட்டம் உள்ளிட்டவற்றை திடீரென ஆட்சி முடிகிற நேரத்தில் அறிவித்ததைப் போலவே சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேர்காணல்களையும் நடத்தி முடித்திருக்கிறார் ஜெயலலிதா என்றுதான் சொல்ல வேண்டும்.












Click it and Unblock the Notifications