பயணிகள் மீது சுமார் ரூ 1,150 கோடி நிதிச்சுமை: ரயில் கட்டண உயர்வுக்கு ஜெயலலிதா கண்டனம்
சென்னை: புதிய கட்டண உயர்வினால் பயணிகள் மீது சுமார் ரூ1,150 கோடி நிதிச்சுமை சுமத்தப் பட்டிருப்பதாகவும், அதனால் கட்டண உயர்வை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என தன் கண்டனத்தை முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
ரயில்வே அமைச்சகம் எரிபொருள் விலை சீரமைப்பு கட்டண முறை அடிப்படையில் ரயில் கட்டணத்தை 2 சதவீதம் உயர்த்துகிறது. மத்திய மற்றும் மேற்கு ரயில்வே சார்பில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் முதல் வகுப்பு பயண கட்டணம் ரூ.5 முதல் 20 வரையிலும் உயருகிறது. இந்த கட்டண உயர்வு நாளை முதல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ரயில் பயணிகள் கட்டணம் கடைசியாக கடந்த ஜனவரி மாதம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது....

கண்டனம்....
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியையும், சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வையும் சுட்டிக்காட்டி, பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு என மாதந்தோறும் அறிவித்து, அதன் விளைவாக ஏற்பட்டுள்ள விலைவாசி ஏற்றம், பொருளாதார சீரழிவு, பணவீக்கம் ஆகியவற்றினால் மக்கள் தாங்க முடியாத இன்னல்களுக்கு ஆளாகி இருக்கின்ற இந்தச் சூழ்நிலையில், ரயில் பயணிகள் கட்டணம் மற்றும் சரக்குக் கட்டணங்களை மத்திய அரசு உயர்த்தியிருப்பதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஊழல் இழப்புகள்....
‘2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல்', ‘நிலக்கரி ஊழல்', ‘பாதுகாப்புத் துறை ஊழல்‘, ‘காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தியதில் ஊழல்' என பல்வேறு ஊழல்கள் மூலம் இந்திய நாட்டிற்கு ஏற்பட்ட பல லட்சம் கோடி ரூபாய் இழப்பை தடுத்திருந்தாலே, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை தவிர்த்திருக்கலாம்.

சுறுசுறுப்புப் பருவக் கட்டணம்....
நாட்டின் பொருளாதாரமும் சீரடைய வழி பிறந்திருக்கும். இதனைச் செய்யாமல், ‘சுறுசுறுப்பு பருவக் கட்டணம்' என்ற பெயரில் ரயில்வே சரக்குக் கட்டண உயர்வினை அறிவித்த சில நாட்களுக்குள்ளாகவே, ரயில்வே பயணிகள் கட்டண உயர்வை 2 விழுக்காடு அளவுக்கும், சரக்குக் கட்டண உயர்வை 1.7 விழுக்காடு அளவுக்கும் உயர்த்தி மத்திய அரசு அறிவித்து இருப்பதைப் பார்க்கும் போது, ‘கடுகு போன இடம் ஆராய்வார், பூசணிக்காய் போன இடம் தெரியாது' என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.

கட்டண உயர்வு வாபஸ்....
2012-ஆம் ஆண்டு ரயில்வே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது, பயணிகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது. பின்னர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக, இந்தக் கட்டண உயர்வினை மத்திய அரசு திரும்பப் பெற்றது.

மீண்டும் உயர்த்தப்பட்டது....
இதனை மக்களவையில் அறிவித்த அப்போதைய ரயில்வே அமைச்சர், ஏற்கெனவே நிதிச் சுமையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இந்தக் கட்டண உயர்வை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். எனினும், 2013-ஆம் ஆண்டு, ரயில்வே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே, 22.1.2013 முதல் ரயில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட்டது.

விஷம் போல் ஏறுமுகம்....
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ள சூழ்நிலையில், விலைவாசி விஷம் போல் ஏறிக்கொண்டிருக்கின்ற சூழ்நிலையில்; பணவீக்கம் ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கின்ற சூழ்நிலையில்; மக்கள் மீது மத்திய அரசால் பல்வேறு சுமைகள் சுமத்தப்பட்டு இருக்கின்ற இந்தச் சூழ்நிலையில்; தற்போது ரயில் கட்டணங்களை மீண்டும் மத்திய அரசு உயர்த்தி இருப்பது எந்தவிதத்தில் நியாயம்?

எரிபொருள் விலை உயர்வு....
ரயில்கள் இயங்குவதற்குத் தேவையான எரிபொருள் விலை உயர்வின் அடிப்படையில், தற்போது ரயில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதையும், சரக்கு மற்றும் பயணிகள் கட்டணம் எரிபொருள் விலைக்கேற்ப ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படும் என்ற நிலையையும் ஏற்றுக்கொள்ள இயலாது.

துரோகம்....
ஆறு மாதத்திற்கு ஒருமுறை உயர்த்தப்பட்டு வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வினை மாதம் ஒருமுறை உயர்த்த வழிவகுத்த மத்திய அரசு, தற்போது, சில ஆண்டுகளுக்கு ஒருமுறை என்றிருந்த ரயில்வே பயணிகள் கட்டணம் மற்றும் சரக்குக் கட்டணத்தையும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை உயர்த்த வழிவகுத்துள்ளது சாதாரண மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.

பயணிகள் பாதிப்பு....
தற்போதைய ரயில்வே கட்டண உயர்வின் மூலம், அடுத்த ஆறு மாதங்களுக்கு சுமார் 1,150 கோடி ரூபாய் நிதிச் சுமை மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

கடும் கண்டனம்....
மத்திய அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, ஏழை, எளிய மக்களை பாதிக்கும் பயணிகள் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்' என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications