வெறும் 4 நாள் தான்! ஆம்பூரில் மழைக்கு தாங்காத கழிவுநீர் கால்வாய் சுவர்! நீரில் அடித்து சென்ற கொடுமை
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் புதிதாக அமைக்கப்பட்ட கால்வாய் சுவர் மழைக்கு தாக்குப்பிடிக்காமல் வெறும் 4 நாளிலேயே அடித்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மக்கள் ஒப்பந்ததாரர் மீது கோபமடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
இதனால் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் கழிவுநீர் கால்வாய் புனரமைப்பு, புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆம்பூர் நகராட்சியில் பணி
இதற்கு திருப்பத்தூர் மாவட்டமும் விதிவிலக்கல்ல. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட திமுக நகர மன்ற துணைத் தலைவர் ஆறுமுகம் என்பவரின் (14 வது) வார்டு பகுதியில் நகராட்சி உள்கட்டமைப்பு திட்டத்தின் மூலம் சுமார் 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலைகள் மற்றும் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கால்வாய் பணி நிறைவு
கால்வாய் அமைக்கும் பணியை ஒரு மாத காலமாக சின்ன கொம்மேஸ்வரம் பகுதியை சேர்ந்த அமமுக பிரமுகர் அசோக் என்பவர் தனது சகோதரர் தீனதயாளன் பெயரில் ஒப்பந்தம் போட்டு மேற்கொண்டார். விறுவிறுப்பாக பணிகள் நடந்தன. கடந்த 4 நாட்களுக்கு முன்பு கழிவு நீர் கால்வாய்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று திடீரென ஆம்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.

அடித்து செல்லப்பட்ட கால்வாய்
இந்த மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட கழிவு நீர் கால்வாய்கள் மழை நீரில் அடித்து செல்லப்பட்டது. ஏற்கனவே கழிவு நீர் கால்வாய்கள் மற்றும் சாலை அமைக்கும் பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக அப்பகுதி மக்கள் வீடுகளுக்குள் சென்றுவர முடியாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது புதியதாக அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய்களும் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் வீடுகளுக்குள் செல்ல வழி இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

உதவி பொறியாளரிடம் வாக்குவாதம்
தகவலறிந்து சம்பவ இடத்தை பார்வையிட வந்த நகராட்சி உதவி பொறியாளர் சண்முகத்திடம் அப்பகுதி மக்கள் கால்வாய் தரமற்ற முறையில் விடப்பட்டுள்ளதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தற்போது பெய்த சாதாரண மழைக்கு தாங்காத அளவில் தரமற்ற முறையில் கால்வாய் மற்றும் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளதாகவும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications