For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பீகார் முடிவுகள்: இருந்து தமிழகத்துக்கான சரியான பேருந்தை அடையாளம் காணுங்கள்... கி. வீரமணி அட்வைஸ்!!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகளைத் தொடர் இருந்து தமிழகத்துக்கான சரியான பேருந்தை அடையாளம் காண வேண்டும் என்று எதிர்க்கட்சிகளுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:

பிகாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், பலருக்கும் பல வகைப் பாடங்களைப் போதிக்கின்ற தேர்தல் முடிவுகளாகும்; பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேறிய நிதிஷ்குமார்பற்றி பிஜேபி தொடர்ந்து அவதூறு பரப்பியே வந்தது!

K Veeramani advices to TN opposition parties

அவரால் முதலமைச்சராக நியமிக்கப்பட்ட ஜித்தன்ராம் மாஞ்சி என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவரை நிதிஷுக்கே துரோகம் இழைக்கும்படிச் செய்து, அவரை மறைமுகமாகத் தூண்டிவிட்டு, அவரை ஒரு தனிக்கட்சி அமைக்கச் சொல்லி அவரை ‘விபீஷ்ணர்' ஆக்கி, தன் வசம் சேர்த்துக் கொண்டது பா.ஜ.க. என்ற உயர்ஜாதி நலப் பாதுகாப்புக் கட்சி.

பிரதமர் மோடி ரூபாய் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடி உதவிடுவதாகவும், திட்டங்கள்மூலம் பிகாரை உயர்த்திடச் செய்வோம் என்றும் வாக்குறுதிகளை வாரிவாரி இறைத்துப் பிரச்சாரம் செய்தார்.

இத்தேர்தலில் பா.ஜ.க. செலவழித்த பணமும், சேகரித்த ஆர்.எஸ்.எஸ். ஆள் பலமும், பத்திரிக்கை ஊடகங்களின் அபரிமிதமான ஒரு சார்பு நிலை (தேர்தல் முடிவு அறிவிப்பு வெளியாகும்போதுகூட இந்த புத்தி அவர்களுக்குப் போகவில்லை!) Money Power, Muscle Power, Media Power, ஆகியவற்றை, லாலு பிரசாத் - நிதிஷ்குமார் - காங்கிரஸ் கட்சித் தலைமை எல்லாம் சேர்ந்து அதல, பாதாளத்தில் தள்ளி வீழ்த்தி விட்டன!

ஆரிய நரித்தந்திரமான - பிரித்தாளும் வகையில் ஊழல்காரர் லாலுவுடன் சேர்ந்தார் நிதிஷ் என்று கூறி, பிரித்தாளும் தந்திரத்தைச் செய்தது ஆர்.எஸ்.எஸ்.

வகுப்புவாரி சமூக நீதியை ஒழிக்க ஆர்.எஸ்.எஸ். தீட்டிய திட்டத்திற்கு முன்னோட்டத்தை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் என்ற பார்ப்பனர் செய்து பார்த்தார். அது விபரீத விளைவுகளை ஏற்படுத்தி விட்டது; பெரியார் இப்போது பீகாரிலும் ஆட்சி செய்கிறார்!

லாலு பகிரங்கமாகப் போர்ப் பிரகடனம் போல் பேசினார். ‘இது ஒடுக்கப்பட்டோருக்கும் உயர் ஜாதியினருக்கும் ஏற்பட்டுள்ள போர், வெறும் தேர்தல் அல்ல. மற்றொரு மண்டல் புரட்சி ஏற்படத்தான் போகிறது' என்றார்.

"லாலு பிரசாத்துக்கு ‘சைத்தான்' பிடித்திருக்கிறது!"

"யாதவர்களின் பசுவை இழிவு செய்து விட்டார் லாலு"

"நிதிஷ் டி.என்.ஏ. மரபு அணு மோசம்"

"நிதிஷ் ஆட்சி ஒரு காட்டுத் தர்பார்' (Jungle Raj) என்று ஒரு பிரதமர், அவர் வகிக்கும் பதவிக்குச் சற்றும் பொருத்தமில்லாத வகையில் தனிப்பட்ட விமர்சனங்களில் ஈடுபட்டார்.

அமித் ஷா என்ற அவரது ஏவுகணை ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசி, நிதிஷ் வெற்றி பெற்றால் பாகிஸ்தானில் பட்டாசு வெடித்துக் கொணடாடுவர் என்றார், நாக்கில் நரம்பின்றி, வாக்கில் வரம்பின்றி வசை மாரி பொழிந்ததன் விளைவு பா.ஜ.க. ஏற்கனவே இருந்ததையும் இழந்தது! 178 - ஆளுங்கட்சிக்கு; பா.ஜ.க. கூட்டணிக்கு 58 இடங்கள்!

மோடியின் செல்வாக்கு தேய்பிறை என்பது டெல்லி மாநில சட்டமன்றத் தேர்தலின் போதே தெரிந்து விட்டது; கெஜ்ரிவாலின் ‘துடைப்பம்' பா.ஜக..வை கூட்டிப் பெருக்கி மூலையில் முடக்கி (மூன்று சீட்டுகளில்) உட்கார வைத்து விட்டது!

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அப்போது இருந்த அரசின்மீது, காங்கிரஸ் மீது ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாடு தானே தவிர மோடிக்காக அல்ல.

சில இணையதள இளைஞர்கள் மாற்றத்தை எதிர் பார்த்து அப்போது வாக்களித்து இப்போது ஏமாற்றத் திற்குள்ளாகியுள்ளனர்!

சகிப்புத் தன்மையற்ற, மதச்சார்பின்மையை அகலக் குழி தோண்டிப் புதைக்கும் வண்ணம் ஆளுக்கு ஆள் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. குட்டித் தலைவர்களின் அதீதமான அடவாடிப் பேச்சு ஹிந்துத்துவ வெறிப் பேச்சுகள் - மாட்டைக் காப்பாற்ற மனிதர்களைக் கொல்லும் காட்டுமிராண்டிகால உணர்ச்சிகள், பகுத்தறிவாளர்களைக் கொல்லுதல், பகிரங்கமாக பா.ஜ.க.வின் ஒரு உள்ளூர் தலைவர் ஓர் மாநில முதல்வரின் தலையை வெட்டுவேன் என்று பேசிடுவது, அதை ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. தலைமையோ இதுவரை கண்டித்ததாகவோ, அவரை கட்சியைவிட்டு நீக்கி வைத்ததாகவோ கூடத் தெரிய வில்லையே!

சிறுபான்மை, ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை -எல்லோரையும் மிரட்டி அச்சுறுத்திடும் பாசிசப் போக்கு பச்சையாகப் படம் எடுத்து ஆடி வருவதற்கு எதிரான புயல் உருவாகிறது என்று புல்லர்களுக்கு உணர்த்திடுவதுதான் பீகாரில் லாலு - நிதிஷ் - காங்கிரஸ் கூட்டணி பெற்ற வெற்றிகள்!

இதில் பிளவு ஏற்படாதா என்று இன்னமும் ஆசைப் படும் அற்பத்தனத்திற்கு, இந்த தோல்வி முகங்களின் கூடாரத்தில் பஞ்சமே இல்லை.

இதன் மூலம் பிரதமர் மோடி, கட்சியின் தலைவர் அமித்ஷா, அருண்ஜேட்லி என்ற மூவர் கூட்டணியின் வித்தைகள் செலாவணி ஆகாது என்று ஆகிவிட்டது. இப்படி நாம் கூறவில்லை. அவர்களின் வட்டாரத்திலிருந்தே அருண்ஷோரி கூறுகிறார்: யஷ்யந்த் சின்கா கூறுகிறார்! சத்ருக்கன் சின்கா சீறுகிறார்!

சரியான நேரத்தில் சரியான மகாகூட்டணியை, ஜனநாயகம், மதச்சார்பின்மை - சமூகநீதி காத்திட மூவரும் எதிர் அணியில் அமைத்தனர்!

ஏழை, எளிய பீகார் மக்கள் பணத்திற்குத் தங்கள் வாக்குகளை விற்றுவிடவில்லை; மானங் காத்தனர்! மகத்தான வெற்றியைத் தந்தனர்!

பாகிஸ்தானில் பட்டாசு வெடித்ததோ இல்லையோ, பாரெங்கும் பட்டாசு வெடிக்கிறது!

‘வெற்றி வந்தால் தனக்கு; தோல்வி வந்தால் யாருக்கோ' என்பது ஆளும் தலைமைக்கு அழகாகாது!

அவர்கள் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளது வரவேற்கத்தக்கது!

ஆனால், சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மாற்றங்கள் தேவை - நாட்டுக்கு அல்ல அவரது கட்சிக்கு, தலைமைக்கு, போக்குக்கு, பொறுப்பற்ற பலரது பேச்சுகளின் உளறல்களுக்கு.

பா.ஜ.க. பாடம் பெறத் தவறினால் இதனினும் கடும் விலையை வருங்கால அரசியலில் அதிகமாகத் தர வேண்டியிருக்கும் என்பது பாறையில் செதுக்கப்பட்ட எழுத்துகள் போன்றது!

பிகார் வெற்றியிலிருந்து தமிழ்நாட்டுக் கட்சிகள் குறிப்பாக எதிர்க்கட்சிகள் பாடம் பெற வேண்டும். தமிழ்நாட்டு எதிர்க்கட்சிகள் - லாலு - நிதிஷ் - காங்கிரஸ் கூட்டணி காரணமாகவே இவ்வெற்றி சாத்தியம் என்ற அரிச்சுவடியை அறிய வேண்டாமா?

(1) பொது எதிரி யார் - என்பதை முதலில் அவர்கள் அடையாளம் காண வேண்டும். இதுவரை கண்டதாகத் தெரியவில்லை! தெரியும் என்றால், அவருக்கு உதவவே நாங்கள் வலுவான கூட்டணி அமைக்காமல் இப்படி ‘அரசியல் செப்பிடு வித்தை' காட்டுகிறோம் என்றுதான் ஆகிவிடும்!

2) கம்யூனிஸ்ட் கட்சிகள் பீகாரின் தேர்தல் முடிவிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

எது ஆபத்து? எது மிகப் பெரிய ஆபத்து?

ஊழலா? மதவெறியா? என்றால் மதவெறிதான் என்று கூறிய அவர்களின் கூற்று ஏனோ "செலக்ட் அம்னீஷி யாவுக்கு' ஆளாகியுள்ளது!

ஒவ்வொருவரும் தங்களது லட்சியம் பொது எதிரியை ஒழிப்பதா? தங்களையே முதல் அமைச்சர் ஆகும் கனவில் மிதக்க விடுவதா? என்பதுபற்றிச் சிந்திக்க வேண்டும்.

எல்லோரும் பல்லக்கில் ஏறி அமர ஆசைப்படலாம்; ஆனால் பல்லக்கு தூக்க வேண்டாமா? இது ஒரு உவமைதான்!

தன் முனைப்பை, விருப்பு, வெறுப்புகளைக் கைவிட்டு விட்டு, எந்த ஆயுதம் கூர்மையானது? என்று கண்டு, அந்த ஆயுதத்தைக் கையில் ஏந்தாமல், அட்டைக் கத்தி தெருக் கூத்து ராஜாக்களைப் போல வேடம் கட்டி ஆடினால், கூத்து சுவைக்கலாம்; பொது நோக்கம் ஜனநாயகம், மதச் சார்பின்மை, சமூகநீதி ஆகிய முப்பெரும் லட்சியங்களை ஒருபோதும் அரியணை ஏற்றும் ஆட்சியைத் தர முடியாமல், ஆட்சிக்குப் பதில் காட்சிதான் காண முடியும். எனவே தமிழக எதிர்க் கட்சித் தலைவர்களே நீங்கள் பீகாரைப் பாராட்டுமுன் பாடம் பெறுவது நல்லது.

காலம் கனிந்து விட்டது. சரியான பேருந்து எது என்று கண்டறிந்து பயணம் செய்க! பயன் பெறுக!!

English summary
DK leader K Veermani said that TN political parties should learn a lesson from Bihar Verdict.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X