இடஒதுக்கீட்டை லஞ்சத்துடன் ஒப்பிட்ட குஜராத் நீதிபதி மீது “இம்பீச்மெண்ட்” மனு சரியானதுதான் - கி.வீரமணி
சென்னை: குஜராத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கக் கூடிய ஜே.பி.பர்திவாலா என்பவர் இடஒதுக்கீட்டை லஞ்ச ஊழலுடன் சம அளவில் ஒப்பிட்டுப் பேசியதால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 58 பேர் கையொப்பமிட்டு அவரை இம்பீச்மென்ட் செய்வதற்கான மனுவினை மக்களவைத் தலைவரிடம் கொடுத்துள்ளனர். இது சரியான ஒரு நடவடிக்கைதான். இதுபோல் சமூக நீதியில் கை வைத்தால் இந்தநிலைதான் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதுதொடர்பான அவர் அறிக்கையில், "சமூகநீதி என்பது இந்திய அரசியல் சட்டத்தின் முகப்புரை தொடங்கி,அடிப்படை உரிமைகளில் முக்கியமானதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக் கோட்பாட்டினை செயல்படுத்தும் முறையாகும்.இந்த அரசியல் சட்டத்தின்மீது தான் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக உறுதிமொழி கூறி பதவியேற்கின்றனர்.

இந்திய அரசியல் சட்டத்தின் மூன்றாவது அட்டவணையின்படி மத்திய அமைச்சர்களில் தொடங்கி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள் ஏற்கும் உறுதிமொழியில், "இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு நான் உண்மையான நம்பிக்கையும் விசுவாசமும் கொண்டும், நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை இவைகளைக் காக்கும் வண்ணமும் எனது கடமைகளை ஆற்றுவேன்" என்று கூறிய பிறகே பதவியேற்கின்றனர்.
இந்த நிலையில், சமூகநீதியின் வெளிப்பாடான இடஒதுக்கீடு பற்றி குஜராத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக உள்ள ஜே.பி. பர்திவாலா என்பவர், மிக மோசமான வகையில் பேசியுள்ளார்.
அவர் பேசியது முற்றிலும் பொறுப்பற்ற, கடமை தவறிய அதிகப் பிரசங்கித்தனம் என்பதை உணர்த்தும் வகையில், 16 ஆம் தேதி அன்று 58 எம்.பி.க்கள் கையொப்பமிட்டு, நாடாளுமன்ற சபாநாயகரிடம் அவரைக் குற்றம் சுமத்தி, அவருடைய இந்த கேலிப் பேச்சு ஒழுக்கக் கேடான நடத்தை என்று கூறி, அவர்மீது நடவடிக்கை எடுத்து அரசமைப்புச் சட்ட விதிப்படியான "இம்பீச்மெண்ட்" குற்றம் சுமத்தி பதவி இழக்கப்பட வேண்டியவர் என்று மனு அளித்துள்ளனர்.
இது பொறுப்பற்ற பேச்சு மட்டுமல்ல, அரசமைப்புச் சட்ட அறிவு அந்த நீதிபதிக்கு எவ்வளவு என்பதையே கேள்விக் குறியாக்கி காட்டும் ஒன்றாக அமைந்துள்ளது.சமூக நீதிக்காற்று, மண்டல் காற்று எப்படி சுழன்று அடிக்கிறது என்பதை உலகுக்கே பறைசாற்றும் பாராட்டத்தக்க பதிலடி தான் இந்த இம்பீச்மெண்ட் நடவடிக்கை.இது மற்றவர்களுக்கும் சரியான நேரத்தில் விடப்பட்ட எச்சரிக்கைப் பாடம்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications