மாணவி மரணம் தொடர்பாக 32 வகையான வதந்திகள்.. கண்காணிப்பு வளையத்தில் யூடியூப் சேனல்கள்.. எஸ்.பி அதிரடி!
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாணவி மரணம் மற்றும் வன்முறை தொடர்பாக 32 வகையான வதந்திகள் பரப்பப்பட்டதாகவும், அவற்றை பரப்பிய யூடியூப் சேனல்கள் கண்டறியப்பட் வருவதாகவும் கள்ளக்குறிச்சி எஸ்.பி பகலவன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவி மர்ம மரணம் தொடர்பாகவும், அதைத் தொடர்ந்து நிகழ்ந்த வன்முறை தொடர்பாகவும் சமூக வலைதளங்களில் போலியான தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில், சின்ன சேலம் பள்ளி மாணவி மரணம் குறித்து யூடியூப் சேனல்களில் வதந்திகள் பரப்பப்பட்டது என்றும் அந்த சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்பி பகலவன் தெரிவித்துள்ளார்.

தீவிர கண்காணிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் தொடர்பாக பல்வேறு போலியான தகவல்கள் பரவி வருவதால், அது சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் என்பதால் ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்-அப், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

சமூக வலைதளங்கள் வாயிலாக
இதுவரை வன்முறையில் ஈடுப்பட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட வன்முறைக்கு, வாட்ஸ்அப் மூலம் போராட்டக்காரர்கள் ஒன்று திரண்டதே காரணம் என தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

வதந்திகள்
கலவரத்திற்குப் பின்னரும், மாணவி மரணம் தொடர்பாக பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அவை உண்மைத்தன்மை சோதிக்கப்படாதவை. மாணவியின் தந்தை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், அவரை போலீசார் காப்பாற்றியதாகவும் ஒரு தகவல் வெகுவாகப் பரவியது. அது போலியான தகவல் என போலீசார் விளக்கம் அளித்தனர்.

கள்ளக்குறிச்சி எஸ்பி
வதந்திகளை பரப்பிய சமூக வலைதள பக்கங்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சைபர் கிரைம் பிரிவு மும்முரமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய எஸ்.பி பகலவன் தலைமையிலான போலீசார் இதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

32 யூடியூப் சேனல்கள்
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கள்ளக்குறிச்சி எஸ்.பி பகலவன், "மாணவி உயிரிழப்பு தொடர்பாக வதந்திகள், போலியான தகவல்கள் சமூக வலைதளங்கள் வாயிலாகப் பரப்பப்பட்டுள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 32 வகையான போலிச் செய்திகள் பரபப்பட்டுள்ளன. அவற்றைப் பரப்பிய யூடியூப் சேனல்கள், சமூக வலைதளப் பக்கங்களை கண்காணிக்கும் பணி தொடங்கியுள்ளது.
Recommended Video

முடக்கப்படும்
எத்தனை வலைதளப் பக்கங்கள், யூடியூப் சேனல்கள் பொய்யான செய்திகளை பரப்பியுள்ளார்கள் என்பது குறித்து கணக்கெடுத்த பின்னர், வதந்தி பரப்பிய வலைதளப் பக்கங்களை முடக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். " எனத் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி எஸ்.பியின் எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications