நாட்டை விட்டே ஓடிப்போகிறேன் என்று சொன்ன கமலுக்கு தமிழக அரசை விமர்சிக்க தகுதியில்லை: செங்கோட்டையன்
இந்தியாவை விட்டே போகிறேன் என்ற கமல் தமிழ்நாட்டை பற்றி பேச தகுதியில்லை என்று, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுக அரசை விமர்சனம் செய்ய நடிகர் கமலுக்கு தகுதியில்லை என்று கூறியுள்ளார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.
ஜல்லிக்கட்டு விவகாரம் ஆரம்பித்தது முதல் தமிழக அரசுக்கு எதிராக தைரியமாக கருத்துக்களை முன் வைத்து வருகிறார் கமல் ஹாசன். இந்நிலையில், அவரது வாயை மூடுவதற்காக, அதிமுக அனுதாபி மூலம், வன்முறையை தூண்டுவதாக போலீசில் புகார் கொடுக்க வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தந்தி டிவியில் ஒளிபரப்பான, கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சியில் கமல் குறித்த கேள்விக்கு, செங்கோட்டையன் கூறியதாவது: சில பேர் எங்கள் மீது கல்லை எறிந்து, கடுமையான சொற்களை பயன்படுத்துகிறபோது, கமல் போன்றோர் இப்படி சொற்களை வெளிப்படுத்தியது எங்களுக்கு வேதனை தருகிறது.
விஸ்வரூபம் பிரச்சினை வந்தபோது இந்திய நாட்டின் மக்களை பற்றி பேசினார். நான் இருப்பதா வேண்டாமா என்று சொன்னாரே. இந்தியாவை விட்டே போகிறேன் என்றாரே. தமிழ்நாட்டை பற்றி பேச அவருக்கு என்ன தகுதியுள்ளது.
என்னைக்குமே எங்களுக்கு அவர் ஆதரவு அளித்ததில்லை. அதிமுகவுக்கு ஆதரவு அளித்த ஒருவர் சொல்லியிருந்தால் நாங்கள் ஏற்றிருக்க கூடும் என்றார்.
சித்தார்த், சூர்யா போன்ற நடிகர்களும், தமிழக அரசை விமர்சனம் செய்துள்ளார்களே என்ற கேள்விக்கு, சாமானிய மக்கள் வேறு. திரைப்படத்தில் இருப்பவர்கள் சொல்வது வேறு. அதிமுகவிற்கு வாக்களித்தவர்களிடம் கேட்டுவிட்டு அவர்கள் கருத்தை சொல்லவில்லை. திரைப்பட தயாரிப்பாளர்கள், நண்பர்களிடம் கேட்டுவிட்டு ஒரு கருத்தை சொல்லியுள்ளார்கள் என்றார் செங்கோட்டையன்.












Click it and Unblock the Notifications