
உரிய நேரத்தில் உதவாத அரசு... மீனவரின் மகள்களின் படிப்புச் செலவை ஏற்ற கலெக்டர் கஜலட்சுமி
காஞ்சிபுரம்: சுனாமியால் பாதிக்கப்பட்டு தொழில் செய்ய முடியாமல் முடங்கிப் போன மீனவரின் இரு மகள்களின் கல்விச் செலவை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி ஏற்று அவர்களுக்குப் பேருதவி புரிந்துள்ளார். அரசு உதவி செய்ய முன்வராத நிலையில் கலெக்டர் தானாக முன்வந்து தனது தனிப்பட்ட பணத்தைக் கொண்டு இவர்களுக்கு உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அந்த மீனவர் குடும்பத்துக்குத் தேவையானதை அரசின் மூலமாக செய்து தருவதாகவும் உறுதி அளித்துள்ளார் கலெக்டர் கஜலட்சுமி.

தமிழகத்தில் கடந்த 2004ம் ஆண்டு சுனாமி தாக்குதல் ஏற்பட்டது. அப்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டக் கடலோரப் பகுதிகளும் பாதிக்கப்பட்டன. காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரம், கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டன. அங்கு 300க்கும் மேற்பட்டோர் ஆழிப்பேரலையில் சிக்கினர். இவர்களில் 73 பேர் உடல் மட்டுமே மீட்கப்பட்டன. மற்றவர்கள் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.
கானத்தூரை அடுத்த கானத்து ரெட்டிகுப்பத்தில் சுனாமி அலையில் சிக்கி மணலில் புதைந்த மீனவர் சண்முக வேலை மீட்பு குழுவினர் உயிரோடு மீட்டனர். ஆனால் அவரது உடல் உறுப்புகள் செயல் இழந்து இருந்தது. அவருக்கு அரசின் உதவிகள் ரூ. 25,000 மற்றும் வீட்டு மனைப்பட்டா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சண்முகவேலுக்கு அரசின் உதவிகள் கிடைக்கவில்லை. உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டதால் அவரால் பழையபடி மீன்பிடி தொழில் செய்ய முடியவில்லை. இதனால் மனைவி மற்றும் 3 மகள், ஒரு மகனுடன் மிகவும் கஷ்டப்பட்டார். படிப்பு செலவுக்கே திண்டாடும் நிலை உருவானது.
இதுகுறித்து காஞ்சீபுரம் கலெக்டர் கஜலட்சுமியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. சண்முகவேலின் நிலையை அறிந்த கலெக்டர் கஜலட்சுமி அவருக்கு அரசின் உதவிகள் கிடைக்காமல் போனதை அறிந்து தனிப்பட்ட முறையில் உதவிட முடிவு செய்தார். சண்முகவேலின் மூத்த மகளுக்கு அரசு வேலை கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். மேலும் 2வது மகள் மஞ்சுளாவின் பட்டப் படிப்பு மற்றும் 3வது மகள் யுவஸ்ரீயின் கல்விச் செலவு ரூ.55 ஆயிரத்தை தான் ஏற்பதாக தெரிவித்தார். மேலும் சண்முகவேலுக்கு வீட்டு மனைப் பட்டா விரைந்து கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் அவர் உறுதியளித்தார்.
இதுகுறித்து கலெக்டர் கஜலட்சுமி கூறுகையில், சுனாமியால் பாதிக்கப்பட்ட சண்முகவேலுக்கு மனிதாபிமான முறையில் அவரது மகள்களின் கல்வி செலவை ஏற்றுள்ளேன். மேலும் மூத்த மகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. சண்முகவேல் தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறார். வருவாய்த்துறையினர் மூலம் ஆய்வு செய்து அவருக்கு அதே பகுதியில் வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கிரேட்!