For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குண்டுவெடிப்பு: தமிழகத்திலே அரசு இருக்கிறதா, முதல்வர் இருக்கிறாரா?.. கருணாநிதி கடும் கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை சென்ட்ரலில் இன்று காலை நடைபெற்ற குண்டுவெடிப்பிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசின் பொறுப்பற்ற தன்மையே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், குண்டு வெடித்து, சிலர் இறந்து விட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்திருப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த விபத்தில் மறைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தோர் விரைவில் நலம் பெற என்னுடைய விழைவினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Karunanidhi condemns Chennai blast; blames ADMK govt

தமிழகத்திலே சட்டம், ஒழுங்கு கேட்பாரற்ற நிலையிலே இருப்பதாகவும், அதுபற்றி அக்கறையோடு முறையாக நடவடிக்கைகள் எதுவும் எடுப்பதில்லை என்றும் நான் பல நாட்களாக தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தேன். ஆனாலும் அ.தி.மு.க. அரசினர் அதைக் காதில் போட்டுக் கொள்ளவும் இல்லை; கவனம் செலுத்தவுமில்லை.

தற்போது கூட இரண்டு நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தான் தீவிரவாதி, ஐ.எஸ்.ஐ. உளவாளி, ஜாகீர் உசேன் என்பவரைத் தமிழகக் காவல் துறை கைது செய்துள்ளது. காவல் துறையினர் என்ன தான் திறமையாகப் பணியாற்றிய போதிலும், அவ்வப்போது ஆய்வு செய்து, அவர்களை வழி நடத்தி உரிய அறிவுரைகளை வழங்கிட வேண்டிய அந்தத் துறையின் பொறுப்பினை ஏற்றுள்ள முதலமைச்சர்
நெருக்கடியான நேரத்திலே கூட தலைநகரிலே இல்லாத காரணத்தால், அந்தத் தீவிரவாதி கைது செய்யப்பட்ட பிறகும், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாகவும், துல்லியமாகவும் எடுக்கப்படாத காரணத்தால் தான், இன்று காலையில் சென்ட்ரல் புகைவண்டி நிலையத்தில் குண்டு வெடித்துள்ளது.

வெடிக்காத பைப் வெடி குண்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது அப்படிப்பட்ட நிர்வாகச் செயல்பாடுகள் இல்லாமல் காவல் துறையினர் எப்படி முடிவெடுப்பது என்று புரியாமல் திசை அறியாத நிலையில் இருப்பதாகவும் கூறப் படுகிறது.

ஜாகீர் உசேன் கைது செய்யப்பட்டதும், தீவிரவாத நடவடிக்கைகள் என்ன என்று உடனடியாக முறைப்படி முழுமையான விசாரணைகள் நடைபெற்றிருக்குமானால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றிருக்காமலே கூடத் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

தீவிரவாதிகள் மேலும் என்னென்ன திட்டமிட்டிருக்கிறார்கள் என்பது பற்றியும் நுண்ணறிவுப் பிரிவின் ஆலோசனையுடன் காவல் துறை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஆனால் காவல் துறைக்குப் பொறுப்பேற்றுள்ள தமிழக முதலமைச்சர் மீண்டும் கொடநாடு சென்று விட்டார். தமிழகத்தில் கடும் வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு என்று அனைத்து நாளேடு களிலும் செய்தி வந்து கொண்டிருக்கின்றது. மக்கள் ஆங்காங்கு காலிக் குடங்களோடு மறியல் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

தேர்தல் வரை மறைந்திருந்த மின்வெட்டு இன்னும் ஒரு சில நாட்களில் கடுமையாகி விடும் என்று சொல்கிறார்கள். இதற்கிடையே மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்தப் போவதாகவும் செய்திகள் வந்துள்ளன. ஆம்னி பேருந்துகளில் இன்று முதல் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாகவும் இன்று செய்தி வந்துள்ளது.

அ.தி.மு.க. அரசின் அனுமதி இல்லாமலா இந்தக் கட்டண உயர்வு நடைபெற்றிருக்கிறது? சட்டம், ஒழுங்கு கேட்கவே வேண்டிய தில்லை. கொள்ளைக்காரர்கள் ரயிலை நிறுத்தி பெண் பயணிகளிடம் நகைகளைக் கொள்ளை அடித்து விட்டுச் செல்கிறார்கள்.

கொலை நடக்காத நாட்களே இல்லை. தண்ணீரின்றி காய்ந்து போன நெற்பயிர்களை விவசாயிகளே தீ வைத்து அழித்து வரும் கொடுமை கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் நிலவி வருவதாக "தீக்கதிர்" நாளேடே புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருக்கிறது. பாசனத்திற்கான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் குறுவைப் பயிரிட வாய்ப்பில்லை என்றும் விவசாயிகள் வேதனை முகட்டுக்கே சென்று விட்டார்கள் என்றும் செய்திகள் வருகின்றன. இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட தமிழகத்திலே செயல்படும் ஒரு அரசு இருக்கிறதா? முதலமைச்சர் இருக்கிறாரா? அமைச்சர்கள் இருக்கிறார்களா? என்பது தான் வேதனையிலும் வேதனை" என்று கூறியுள்ளார்.

English summary
DMK Leader Karunanidhi says in his statement, “The main reason for bomb blast in Chennai is because of Tamil Nadu CM’s careless activity”.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X