காவிரி பிரச்சனைக்கான அனைத்துக் கட்சி கூட்ட இடத்தை பார்க்க கோடநாட்டுக்கு ஜெ.பயணம்- கருணாநிதி சாடல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடநாட்டில் இருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா காவிரி பிரச்சனைக்காக அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தும் இடத்தை தேர்வு செய்ய சென்றுள்ளாரோ என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி சாடியுள்ளார்.

கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கை:

கேள்வி: நிலுவைத் தொகையை வழங்கக் கோரி கரும்பு விவசாயிகள் வைக்கும் கோரிக்கை எப்போதுதான் நிறைவேறும்?

பதில்: 2016ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு நிச்சயம் இப்படிப்பட்ட கோரிக்கைகள் நல்ல முறையில் நிறைவேறும்.

உப்பூர் அனல்மின் நிலையம்

கேள்வி: அ.தி.மு.க. ஆட்சியில் மின் நிலையங்களை நிறுவுவதற்கான டெண்டர் கோரினால், யாரும் விண்ணப்பிக்க முன் வருவதில்லை என்று கூறப்படுகிறதே?

பதில் :- உண்மைதான்! அ.தி.மு.க. ஆட்சி 2011இல் அமைந்தவுடன் படித்த நிதி நிலை அறிக்கையில் 9,600 கோடி ரூபாய்ச் செலவில் 1,600 மெகாவாட் உப்பூர் அனல் மின் திட்டத்தைத் தொடங்கப் போவதாக படித்தார்கள். 29-3-2012 அன்று ஜெயலலிதா பேரவையில் 110வது விதியின் கீழ் படித்த அறிக்கையில் 1,600 மெகாவாட் திறன் கொண்ட உப்பூர் அனல் மின் திட்டத்திற்கான முன்சாத்தியக் கூறு அறிக்கை மற்றும் திட்ட வரைபடம் ஆகியவை இறுதி செய்யப்பட்டு விட்டன என்று அறிவித்தார்.

திட்டம் அறிவித்து நான்காண்டுகளுக்குப் பிறகு தமிழக மின் வாரியம், உப்பூர் அனல் மின் நிலையம் அமைப்பதற்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளிகள் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பெறப்படும் என்று கடந்த ஜூலை மாதத்தில் அறிவித்தது.

ஒப்பந்தப்புள்ளி சமர்பிக்க மூன்று மாதங்கள் கால அவகாசம் அளித்தும் எந்த நிறுவனங்களும் ஒப்பந்தப்புள்ளி கோர முன் வராததால், கால அவகாசத்தை இந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வரை நீடித்தது.

இரண்டு முறை ஒப்பந்தப் புள்ளி பெறுவதற்கான கடைசி தேதியை நீட்டித்தும் நிறுவனங்கள் தயக்கம் காட்டுவதற்கு தமிழக அரசின் தலையீடு அதிகமாக இருப்பது தான் காரணம் என்று கூறப்படுகிறது.

எனினும் உப்பூர் அனல் மின் நிலையம் அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி 19-10-2015 வரை பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடைசியாக உப்பூர் மின் நிலையத்திற்கு, மத்திய அரசின் "பெல்" மற்றும் "தூசன்" நிறுவனங்களும், வடசென்னை மின் நிலையத்திற்கு "பெல்" நிறுவனமும் மட்டும் தான் ஒப்பந்தப்புள்ளி தாக்கல் செய்துள்ளதாம். டெண்டரில் பங்கேற்க ஏன் பல நிறுவனங்கள் வரவில்லை என்று விசாரித்த போது, "மின் வாரியப் பணிகளை டெண்டர் எடுக்க, திட்ட மதிப்பு தவிர்த்து, தனி நபர்களுக்காக செலவு செய்ய வேண்டியுள்ளது, அதனால் முதலீட்டாளர்கள் வரத் தயங்குகின்றனர்" என்று கூறுகிறார்கள். 2011ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டத்திற்கே இந்தக் கதி என்றால், 2014ஆம் ஆண்டிலும், 2015ஆம் ஆண்டிலும் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் எல்லாம் வெறும் வாய்ச் சவடால்தானா என்ற கேள்வி எழத்தானே செய்யும்!

கோடநாட்டில் அனைத்து கட்சி கூட்டம்...

கேள்வி: காவிரியில் தண்ணீர் விட மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக என்ன செய்யலாம் என்பதைப் பற்றி முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளையும் பிரதமரிடம் அழைத்துச் சென்று கோரிக்கை வைக்க வேண்டுமென்று டாக்டர் ராமதாஸ், ஜி.கே. வாசன் போன்ற தலைவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்களே?

பதில் : முதலமைச்சர் ஜெயலலிதா இதைப் பற்றி யோசிக்கவும், அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கோடநாட்டில் எந்த இடத்திலே வைத்துக் கொள்ளலாம் என்பதற்கான இடத்தை நேரில் பார்வையிடவும்தான் தற்போது கோடநாட்டிற்குச் சென்றுள்ளாரோ என்னவோ? எனவே விரைவில் அதற்கான அறிவிப்பு வரலாம்.

ஆம்னி கொள்ளை

கேள்வி: பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகளை அரசு சார்பில் விடாத காரணத்தால், தனியார் நடத்தும் ஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளை என்று செய்தி வந்துள்ளதே?

பதில் :- தனியார் நடத்தும் ஆம்னி பேருந்துகளில் அவ்வாறு கட்டணக் கொள்ளை நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத்தான் சிறப்பு பேருந்துகளை இயக்கவில்லையோ என்னவோ? கேட்டால், இந்த ஆட்சியில் இதிலே மட்டுமா கொள்ளை என்பார்கள்!

எம்.ஜி.ஆரும் அதிமுகவும்

கேள்வி: அ.தி.மு.க.வின் 44வது ஆண்டு தொடக்க விழாவிற்கு கட்சித் தொண்டர்களுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் எம்.ஜி.ஆர். பற்றி வானளாவப் புகழ்ந்திருக்கிறாரே?

பதில் : பொதுத் தேர்தல் நெருங்குகிறது அல்லவா? அப்படித்தான் எம்.ஜி.ஆரைப் புகழ ஆரம்பித்து விடுவார். ஒவ்வொரு ஆண்டும் கட்சி தொடங்கிய நாளன்று, கட்சியின் தலைமை அலுவல கத்திற்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்த ஜெயலலிதா, இந்த ஆண்டு அதையும் புறக்கணித்து விட்டு கோடநாடு சென்றதோடு, எம்.ஜி.ஆரைப் பாராட்டி மடலும் எழுதியுள்ளார். ஆனால் எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்த போது, அவரைப் பற்றி இதே ஜெயலலிதா என்னவெல்லாம் எழுதினார் என்பதும், இந்த ஜெயலலிதா பற்றி எம்.ஜி.ஆர். என்ன கருத்துகளை வெளியிட்டார் என்பதும் பல முறை ஏடுகளிலே வெளி வந்துள்ளன. எம்.ஜி.ஆரைப் பற்றி ஜெயலலிதா எழுதியதையும், ஜெயலலிதாவைப் பற்றி எம்.ஜி.ஆர். சொன்னதையும் மறந்துவிட முடியுமா? கோடநாட்டில் இருந்தவாறே கட்சி தொடக்க நாள் நிகழ்ச்சி ஒன்றில் அங்கேயே கலந்து கொண்ட ஜெயலலிதா விழா மேடையில் ஏழரை நிமிடங்கள் இருந்தாராம்! கூட்டத்தினரிடையே ஒரு வார்த்தை கூட பேசவில்லையாம். கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவிலே கூட முக்கியமானவர்கள் பலர் கலந்து கொள்ள வில்லையாம்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+