For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உதவாதினி ஒரு தாமதம்.... சிறுவாணிக்கு தடையாணை பெற கருணாநிதி வலியுறுத்தல் #karunanidhi #siruvani

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: மேகதாது, சிறுவாணி பிரச்சனைகளில் இனியும் தாமதிக்காமல் உச்சநீதிமன்றத்தில் உடனே தடையாணை பெற வேண்டும் என்று தமிழக அரசை திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை:

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை ஒன்றைக் கட்டுவது பற்றி, மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையும், கேரள அரசும் எழுதிய பல கடிதங்களுக்கு தமிழக அரசிடமிருந்து எந்தவிதமான பதிலும் வராத நிலையில், அணை கட்டும் திட்டத்திற்குச் சுற்றுச் சூழல் ஆய்வு நடத்துவதற்கான அனுமதி வழங்கி, நதி நீர்ப் பள்ளத்தாக்கு மற்றும் புனல் மின் திட்டங்களுக்கான மத்திய நிபுணர்கள் குழு, பரிந்துரை செய்திருக்கிறது என்று 26-8-2016 அன்று வெளி வந்த அதிர்ச்சி தரத் தக்க செய்தியைப் பார்த்துவிட்டு, நானும் தமிழ்நாட்டில் உள்ள மற்ற எதிர்க் கட்சிகளின் தலைவர்களும் அவசர அவசரமாக அறிக்கைகள் விடுத்து, உறக்கத்தில் ஆழ்ந்திருந்த ஜெயலலிதா அரசுக்கு உசுப்பேற்றிடும் வகையில், எச்சரிக்கை செய்தோம்.

அனைத்துக் கட்சிகளின் சார்பில் அறிக்கைகளை வெளியிட்ட பிறகு, தமிழக அரசு தூக்கம் கலைந்து திடீரென விழித்துக் கொண்டு, தமிழக முதலமைச்சர் அவசர அவசரமாக ஆனால் வழக்கம் போல, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டும் திட்ட ஆய்வுக்கான அனுமதியினை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். மந்திரத்தால் மாங்காய் விழுந்து விடுமா? ஜெயலலிதாவின் கடிதத்தால் காரியம் நடந்து விடுமா?

குலைநடுக்கம்....

குலைநடுக்கம்....

சிறுவாணியில் அணை கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்தால் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் என்ற, கற்பனை செய்து பார்க்கக் கூடக் கடும் குலை நடுக்கத்தை ஏற்படுத்தும் பேரபாயகரமான நிலையை உத்தேசித்து, உடனடியாக மத்திய-மாநில அரசுகள் சிறுவாணியில் கேரள அரசு அணை கட்டுவதைத் தவிர்த்திடத் தேவையான நடவடிக்கைகளைத் தாமதமின்றி மேற்கொள்ள வேண்டுமென்பதை வலியுறுத்துவதற்காக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், நாளை அதாவது செப்டம்பர் 3ஆம் தேதியன்று, காலை 10 மணி அளவில் கோவை கொடீசியா மைதானத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களின் சார்பில் கழகப் பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில், மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. கழகத் தோழர்கள் அனைவரும் பல்லாயிரக் கணக்கில் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மிகச் சிறப்பாகக் கழகத்தின் குரலை எதிரொலிப்பார்கள் என்றும்; மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த பொது மக்கள் குறிப்பாக விவசாயப் பெருமக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர் இந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பேராதரவு நல்கிடுவர் என்றும்; மிகுந்த நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறேன்.

ஜெ.தான் காரணம்

ஜெ.தான் காரணம்

அண்டை மாநிலங்களுடன் நல்லுறவை நிலைநாட்டிட ஜெயலலிதா அரசு எள் முனையளவு முயற்சி கூட எடுக்காத காரணத்தால், ஆந்திரம் - கர்நாடகம் - கேரளம் ஆகிய மாநில அரசுகள் தமிழகத்தை வஞ்சிக்கத் தொடங்கி விட்டன. ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பணைகளைக் கட்டி முடித்து, சுற்றுலாப் படகுகள் விடவும் தொடங்கி விட்டது. அதன் காரணமாக வேலுhர், திருவண்ணா மலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களின் குடிநீர் ஆதாரமும், பாசன வசதியும் கேள்விக் குறியாகி விட்டது. பாலாறு பிரச்சினையில் ஜெயலலிதா, இந்தியப் பிரதமருக்கும், ஆந்திர முதல்வருக்கும் கடிதம் அனுப்பியதோடு சரி; காரியம் நடக்குமென்ற எதிர்பார்ப்பு பகல் கனவாகி விட்டது. ஒரு நதியின் மேல் பகுதிகளில் உள்ள மக்களை விட, கீழ்ப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு அந்த நதி நீரின் மீது சொந்தமும் உரிமையும் அதிகம் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள தத்துவம் என்ற அடிப்படையில், ஜெயலலிதா உச்ச நீதி மன்றம் சென்று ஆந்திர அரசின் தடுப்பணை முயற்சிகளுக்குத் தடையாணை பெற்றிடத் தவறிவிட்டார்.

வழக்கு தொடர்ந்த ஜெ

வழக்கு தொடர்ந்த ஜெ

அதைப் போலவே, கர்நாடக அரசு தமிழகத்திற்குத் தண்ணீர் தரத் தொடர்ந்து மறுத்து வருவதோடு; தமிழகத்தின் பலத்த எதிர்ப்பையும் புறக் கணித்து மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. ஆனால், ஜெயலலிதா பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதி விட்டு, வழக்கும் தொடுத்துள்ளார்.

தடையாணை வாங்கவில்லையே

தடையாணை வாங்கவில்லையே

அந்த வழக்கில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு இதுவரை தடையாணை பெற்றிடத் தவறியதன் காரணமாக, கர்நாடக அரசு மிகுந்த ஊக்கத்தோடு மேகதாதுவில் அணை கட்ட அவசரம் அவசரமாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

சிறுவாணியில் அணை

சிறுவாணியில் அணை

கேரள அரசு, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும் என்ற உச்ச நீதி மன்றத் தீர்ப்புக்கு எதிரான தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் தமிழக மக்களுக்குத் தொடர்ந்து நெருக்கடியையும் அமைதி யின்மையையும் ஏற்படுத்தி வருவதோடு; தற்போது சிறுவாணி ஆற்றில் அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது. அட்டபாடி பகுதியில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே அகழி மற்றும் சோலையூர் ஊராட்சியில் அணை கட்டு வதற்காக சுற்றுச் சூழல் சாதக பாதகங்களை ஆய்வு செய்ய தனியார் நிறுவனம் ஒன்றிடம் கேரள அரசு, பணிகளை ஒப்படைத்துள்ளதாகவும்; ஆயிரம் கோடி ரூபாய்ச் செலவில் 442 மீட்டர் நீளம், 51.5 மீட்டர் உயரத்தில் அணை கட்டி, 100 கிலோ மீட்டர் தூரம் கால்வாய் அமைத்து, 6,150 எக்டேர் நிலத்தில் விவசாயம் செய்யவும், அணை மூலம் 15.5 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும்; மேலும் அணை கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள இடத்தில் கட்டுமானப் பொருள்கள் சேகரித்துக் குவிக்கப்பட்டு வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரானது

நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரானது

சுற்றுச் சூழல் ஆய்வு நடந்து, முடிவுகள் தெரிவதற்கு முன்னரே, கேரள அரசு சிறுவாணியில் அணை கட்டும் முயற்சிகளைத் தீவிரமாக விரைவுபடுத்தி வருவது புலனாகிறது. "காவிரி நதியின் துணை நதியான சிறுவாணி ஆறு கேரளம், தமிழகம் ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே ஓடுகிறது. சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடியில் அணை கட்டுவது, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிரானதாகும்" என்று பிரதமருக்கு அனுப்பியிருக்கும் கடிதத்தில் ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார். பிறகென்ன? சிறுவாணி ஆற்றில் தமிழகத்திற்கு இருக்கும் உரிமையை நிலைநாட்ட உடனடியாக உச்ச நீதி மன்றத்தை நாட வேண்டியது தானே? கேரள அரசின் முயற்சிக்குத் தடையாணை பெறத் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது தானே!

அப்ப மட்டும் அக்கறையோ?

அப்ப மட்டும் அக்கறையோ?

தனது சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா எத்தனை முறை தடையாணை பெற்றார்? மக்கள் நலப் பணியாளர்கள் மறு நியமனப் பிரச்சினை யில் - சமச்சீர் கல்விப் பிரச்சினையில் - இன்னும் எத்தனையோ பிரச்சினைகளில் ஜெயலலிதாவின் தடையாணை பெறவில்லையா? எதிர் மறையான பிரச்சினைகளில் காட்டும் ஆர்வத்தை, தமிழக மக்களின் நலன் சார்ந்த நதிநீர் உரிமைப் பிரச்சினையில் காட்டிடத் தயக்கம் ஏன்?

பாலாறு கதிதான் சிறுவாணிக்கும்..

பாலாறு கதிதான் சிறுவாணிக்கும்..

தடையாணை பெறத் தயக்கம் காட்டினாலோ, தாமதம் செய்தாலோ, பாலாறு தடுப்பணைகள் பிரச்சினைக்கு ஏற்பட்ட கதி தான், மேகதாதுப் பிரச்சினையிலும் ஏற்படும்; சிறுவாணி அணைப் பிரச்சினையிலும் நேர்ந்திடும்.

உடனே தடையாணை பெறனும்

உடனே தடையாணை பெறனும்

எனவே உதவாதினி ஒரு தாமதம் என விழித்தெழுந்து, மேகதாது - சிறுவாணி அணைப் பிரச்சினைகளில் உச்ச நீதி மன்றத்தை உடனடியாக அணுகி, தடையாணை பெறத் தக்க நடவடிக்கைகள் அனைத்தையும் ஜெயலலிதா மேற்கொண்டு, தமிழக மக்களின் நலனையும் உரிமையையும் பாதுகாத்திட வேண்டுமென்றும்; இதற்கிடையே, சிறுவாணி அணை கட்டும் முயற்சிக்குச் சுற்றுச் சூழல் ஆய்வுக்குக் கொல்லைப் புற வழியாக அளிக்கப் பட்டிருக்கும் அனுமதியை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெறுவதற்கேற்ற படி ஜெயலலிதா மத்திய அரசுக்கு அரசியல் அழுத்தம் தர வேண்டுமென்றும்; வலியுறுத்துகிறேன்

English summary
DMK leader Karunanidhi has urged the state govt should get stay order on Siruvani issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X