• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

முதல்வருக்கு விருத்தகம் பாடுகிறது தமிழக சட்டசபை: கருணாநிதி காட்டம்!

By Mathi
|

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனைகளைப் பற்றி பேச அனுமதிக்காமல் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விருத்தகம் பாடுகிறார்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி காட்டமாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகச் சட்டப்பேரவையில் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் 21-7-2014 அன்று இரண்டு முறை வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். என்ன காரணம் தெரியுமா?

வாய்க்கு வந்தபடி பேச்சு

வாய்க்கு வந்தபடி பேச்சு

தொகுதி மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளைப் பற்றி, சட்டசபையில் எதிர்க்கட்சிகளை, குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களைப் பேசவே விடுவதில்லை. ஆளுங்கட்சி மீது ஏதாவது குறை, குற்றச்சாட்டு சொல்ல ஆரம்பித்தாலே போதும், உடனே முதலமைச்சரும், அந்தந்தத் துறைகளின் அமைச்சர்களும் எழுந்து, உறுப்பினருக்குத் தரப்பட்ட நேரத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் உணர்வுகளைக் காயப்படுத்திடும் வகையில் வாய்க்கு வந்தவாறு ஏதேதோ பேசுகிறார்கள். அவர்கள் கூறுவதற்கு கழக உறுப்பினர்கள் அவையின் விதிமுறைகளை அனுசரித்துப் பதில் சொன்னால், அதனை அவைக் குறிப்பிலிருந்து எதேச்சாதிகாரமாக நீக்கி விடுகிறார்கள்.

வழிவழி நடைமுறை எங்கே?

வழிவழி நடைமுறை எங்கே?

கடந்த காலத்தில் சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் எதிர்க்கட்சிகளால் கொடுக்கப்பட்ட ஒத்திவைப்புத் தீர்மானம், கவன ஈர்ப்புத் தீர்மானம், சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு, உறுப்பினர்கள் அதன் மீது தங்கள் கருத்துகளை எடுத்துரைத்து, அதற்குப் பிறகு அமைச்சர்கள் பேசுவார்கள். இதுதான் வழிவழியாகப் பின்பற்றப்படும் பழக்கம். தற்போது அந்த நடைமுறை பின்பற்றப்படுகிறதா?

டிராக்டர் ஏற்றி படுகொலை

டிராக்டர் ஏற்றி படுகொலை

தமிழ்நாட்டிலே என்ன நடைபெறுகிறது? நேற்று ஒரே நாளில் நடைபெற்றதை மட்டும் கூறவா? சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்படுகிறதா? தமிழ்நாடெங்கும் மணல் கொள்ளை கட்டு மீறிப் போய் விட்டது. வேலூர் மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் பகுதியிலே ஜூலை 20ஆம் தேதி மணல் அள்ளப்படுவதாக தக்கோலம் காவல் நிலையத்திற்குத் தகவல் வந்ததையொட்டி, துணை ஆய்வாளர் ராஜனும், தலைமைக் காவலர் கனகராஜும் சென்ற போது, டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்திருக் கிறார்கள். அதைத் தடுக்க முயன்ற தலைமைக் காவலர் கனகராஜை டிராக்டர் ஓட்டுனர் இரக்கமற்ற முறையில் கீழே தள்ளி அவர் மீது டிராக்டரை ஏற்றிப் படுகொலை செய்திருக்கிறார்.

பாலியல் குற்றம் அதிகரிப்பு

பாலியல் குற்றம் அதிகரிப்பு

தேசிய குற்ற ஆவணக் கழகம் ஆண்டுதோறும் வெளியிடுவதைப் போல இந்த ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களைப் பற்றியும், பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதைப் பற்றியும் பல தகவல்களை வெளியிட்டுள்ளன. அதைப்பற்றிப் பேரவையில் விவாதிக்க சட்டப்பேரவையில் நமது கழகத்தின் சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ளது.

என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?

என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?

கர்நாடக மாநிலத்தில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகமாவதையொட்டி, அந்த மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது என்பதால், அந்த அரசில் உள்துறை அமைச்சராக இருப்பவரிடமிருந்து பதவியைப் பறிக்க முதலமைச்சர் திட்டமிட்டிருப்பதாகவும் செய்தி வந்திருக்கிறது. மேலிடத்திலே அனுமதி கோரி, அதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித்து விட்டதாகவும் செய்தி வந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்திலும் பாலியல் குற்றங்கள் அதிகமாகி வருவது குறித்து அ.தி.மு.க. அரசு என்ன செய்யப் போகிறது? கர்நாடகாவின் முன்னுதாரணத்தைப் பின்பற்றப் போகிறதா அல்லது கண்ணை மூடிக் கொண்டு எதுவும் நடக்காததைப் போலக் கபட வேடம் காட்டப் போகிறதா?

காவிரி மேலாண்மை வாரியம்

காவிரி மேலாண்மை வாரியம்

காவிரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்ற நீதிபதியின் ஆணையின் பேரில் மத்திய அரசின் அரசிதழில் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியிடப்பட்டதை வைத்துக் கொண்டு, தான்தான் அதைச் செய்ததாக தஞ்சையிலே பெரிய பாராட்டு விழா ஒன்றினை ஜெயலலிதா நடத்திக் கொண்டு, பட்டத்தையும், பரிசையும் பெற்றார். ஆனால் அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் இதுவரை அமைக்கப்பட வில்லை. அந்த காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென்று டெல்டா மாவட்ட விவசாயிகள் முற்றுகைப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். போராட்டம் நடத்திய விவசாயிகளை காவல் துறையினர் கடுமையாகத் தாக்கியதோடு, ஆயிரக்கணக்கான விவசாயிகளை அ.தி.மு.க. அரசு கைது செய்திருக்கிறது. அ.தி.மு.க. அரசின் இந்த இரட்டை நிலைப் பாட்டைப் பற்றி பேரவையிலே விவாதிக்க வேண்டாமா?

படுகொலை- சிறுத்தை பீதி

படுகொலை- சிறுத்தை பீதி

தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சியின் மத்திய சென்னை மாவட்டத் தலைவராக இருந்த அக்பர் அலி, நண்பர் களோடு பேசிக் கொண்டிருந்த போது, திடீரென வந்த கும்பல் ஒன்று அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்திருக்கிறது. இது தமிழகத்தின் தலைநகரிலே நடைபெற்றுள்ள சம்பவம். சென்னையை அடுத்த செங்கல்பட்டு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கடந்த இரண்டு மாதமாகச் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. மக்கள் பெரும் பீதியிலே இருக்கிறார்கள். சிறுத்தையை நேரில் கண்ட பெண்கள் பதறி அடித்து ஓட்டமெடுத்திருக் கிறார்கள். கேமராவில் சிறுத்தைகள் உலா வருவது தெரிந்திருக்கிறது. இதைப்பற்றி அரசு என்ன நட வடிக்கை எடுத்தது என்று பேரவையில் விவாதிக்க வேண்டாமா?

பெண் பொறியாளரை பலாத்காரம் செய்ய முயற்சி

பெண் பொறியாளரை பலாத்காரம் செய்ய முயற்சி

"சாப்ட்வேர்" பெண் பொறியாளர் ஒருவரைக் காரிலே கடத்திப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக ஒரு செய்தி வந்துள்ளது. பத்து இலட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 30 இலட்சம் ரூபாய் தருவதாகக்கூறி "ஆன்லைன்" மோசடியில் ஈடுபட்ட கும்பல் ஒன்று பிடிபட்டதாகவும் செய்தி வந்திருக்கிறது.

எத்தனை எத்தனை சம்பவங்கள்

எத்தனை எத்தனை சம்பவங்கள்

நெல்லை எக்ஸ்பிரஸ் புகைவண்டியில் 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு தரப்பட்டுள்ளது. வடசென்னை அனல் மின் நிலையத்தில் உதவிச் செயற்பொறியாளராகப் பணியாற்றியவர் வைரமணி. இவர் கடந்த 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஓய்வு பெற்றிருக்கிறார். அதற்குப் பிறகு அவருக்கு வழங்க வேண்டிய பணிப் பலன்களை வழங்கவில்லை என்று இதுவரை முதலமைச்சரின் தனிப் பிரிவில் 127 முறை மனு அளித்தும் எந்தவிதமான பயனும் இல்லை என்று கூறி உண்ணாவிரதம் இருப்பது புகைப்படத்தோடு நேற்று செய்தியாக வந்துள்ளது.

அம்பத்தூர் பட்டரைவாக்கத்தில் தனது உறவினர்களைத் தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்த வாலிபர் ஜான் என்பவரை, அ.தி.மு.க. இளைஞர் பாசறைத் தலைவர் கத்தியால் குத்திக் கொன்றார் என்றும், அவரைத் தடுக்க வந்த நான்கு பேருக்கும் கத்திக் குத்து விழுந்தது என்றும் நேற்றைய நாளேடுகளில் செய்தி வந்துள்ளது. இது பற்றிப் பேரவையில் பேசப்பட வேண்டாமா?

லேப்டாப் வழங்க கோரிக்கை

லேப்டாப் வழங்க கோரிக்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் சுயநிதி பாடப் பிரிவு மாணவர்களுக்கு "லேப்-டாப்"வழங்கப்படவில்லை என்பதற்காக மாணவர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தி கலைந்து செல்ல வைத்திருக்கிறார்கள்.

சேலம்- பண்ருட்டி மணல் கொள்ளை

சேலம்- பண்ருட்டி மணல் கொள்ளை

சேலத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். பண்ருட்டி அருகே பெண்ணையாற்றில் மணல் எடுக்க அனுமதி அளிக்கப்படாத நிலையில், அன்றாடம் ராட்சத இயந்திரங்கள் மூலமாக நூற்றுக்கணக்கான லாரிகளில் மணல் அள்ளி வருகிறார்கள். இதைத் தடுக்க அதிகாரிகளுக்குப் பல முறை தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இந்த நிலையில் நேற்று கிராம மக்கள் 300 பேர் சேர்ந்து, மணல் அள்ளுவதற்காக நிறுத்தப்பட்டிருந்த 400 லாரிகளைச் சிறைப்பிடித்து முற்றுகைப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

ஆற்றில் மணல் அள்ள நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தும், அதிகாரிகளுக்குப் பணம் கொடுத்து மணல் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறதாம். இந்தப் பிரச்சினை பேரவையில் பேசப்பட வேண்டாமா?

மேட்டூர் அணை

மேட்டூர் அணை

மேட்டூருக்கு நீர் வரத்து 23 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது நீர் மட்டம் 56 அடியை எட்டியிருக்கிறது. தொடர்ந்து நீர் மட்டம் உயர்ந்து வருகின்ற நிலையில் மேட்டூர் அணை பாசனத்திற்காக எப்போது திறக்கப்படும் என்று விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதிக் கேட்க வேண்டாமா?

பேருந்தில் நெரிசல்

பேருந்தில் நெரிசல்

சேலம் அருகே ஆத்தூரில் அரசுப் பேருந்து ஒன்றில் 250 பேர் பயணம் செய்து, நெரிசல் காரணமாக மூன்று மாணவிகள் மயக்கமுற்றதாக ஒரு செய்தி நேற்றைய நாளேட்டில் வந்துள்ளது. போதிய பேருந்துகள் இயக்கப் படாததால் மக்கள் அவதிப்படுவதாகவும் அந்தச் செய்தியிலே கூறப்பட்டுள்ளது.

எதற்காக சட்டசபை?

எதற்காக சட்டசபை?

இவ்வளவு செய்திகளும் நேற்று ஒருநாள் பத்திரிகை யிலே வந்தவை. தமிழகப் பொதுமக்களை நேரடியாகப் பாதித்திடும் இத்தகைய அடுக்கடுக்கான பிரச்சினை களைப் பற்றியெல்லாம் பேசி விவாதிக்கத்தானே சட்டசபை! முதல் அமைச்சருக்கு விருத்தம் பாடுவதற்கு மட்டும்தான் பேரவையா? ஜூலை 10ஆம் தேதி தமிழகச் சட்டப்பேரவை கூடியது. 9 நாட்கள்தான் நடைபெற் றுள்ளன. அதற்குள் எத்தனை முறை வெளி நடப்புகள்? எத்தனை முறைவெளியேற்றங்கள்?

மவுலிவாக்கம் விபத்து

மவுலிவாக்கம் விபத்து

மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து 61 பேர் பலியாகியிருக்கிறார்கள். அதுபற்றி பேரவையில் விவாதிக்கத்தான் ஜூலை 10ஆம் தேதியன்று எதிர்க் கட்சியினர் அனுமதி கோரினர். ஆனால் பேரவைத் தலைவர் அனுமதி மறுத்து விட்டார். தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சி களின் தலைவர்கள் இதற்கான ஒத்தி வைப்புத் தீர் மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டு மென்று கேட்ட போது, விபத்து குறித்து விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதால், அனுமதிக்க முடியாது என்று மறுத்து விட்டனர். இந்தக் கோரிக்கையை எதிர்க்கட்சிகள் எழுப்பும்போதே, துறையின் அமைச்சர் எழுந்து எனது பதிலுரையைக் கேட்க தைரியம் இருக்கிறதா என்று ஆவேசமாகக் கேட்டிருக்கிறார். இதுதான் ஜெயலலிதாவின் சட்டமன்றமா?

ஓடுகாலிகள் என்பதா?

ஓடுகாலிகள் என்பதா?

அப்போது அவை முன்னவர் இந்தப் பிரச்சினையில் கட்சிக்கு ஒருவர் பேசலாம் என்று கூறிய போதிலும், பேரவைத் தலைவர் அனுமதி கொடுக்கவில்லை. அதற்குப் பிறகுதான் அனைத்து எதிர்க்கட்சியினரும் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். ஆனால் இந்தத் துறையின் அமைச்சர் தனது பதிலுரையின் போது, இந்தக் கட்டிட விபத்து பற்றி நீண்ட நேரம் விளக்கம் அளித்திருக்கிறார். விசாரணைக் குழு அமைத்திருக்கும் போது, அமைச்சர் மட்டும் பேரவையில் பேசலாமா? அதே அமைச்சர் பேசிய இறுமாப்பான கருத்துக்கெதிராக ஜனநாயக முறைப்படி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தது பற்றி "ஓடுகாலிகள் ஓடிவிட்டார்கள்" என்றார் அமைச்சர். இதுதான் ஜெயலலிதாவின் சட்டமன்றமா?

ஓடுகாலிகள் என்பதில் தவறில்லையாம்

ஓடுகாலிகள் என்பதில் தவறில்லையாம்

11ஆம் நாள் சட்டப்பேரவை நடைபெற்ற போது அமைச்சர் குறிப்பிட்ட "ஓடுகாலிகள்" என்ற வார்த் தையை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமென்று எதிர்க் கட்சியினர் கேட்டார்கள். ஆனால் அவ்வாறு கூறிய அதே அமைச்சர், தான் அவ்வாறு கூறியதில் தவறில்லை என்றார். பேரவைத் தலைவரும் "ஓடுகாலிகள்" என்பது தவறான சொல் அல்ல என்றார். முதலமைச்சரோ புன்முறுவலோடு அமர்ந்திருந்தாராம். நம்முடைய அமைச்சர் எவ்வளவு நாகரிகமாகப் பேசி யிருக்கிறார் என்ற மகிழ்ச்சியில் இருந்திருப்பார். கழக உறுப்பினர்கள் பேரவைத் தலைவரின் இருக்கை முன் சென்று அவை மரபுக்கு ஒவ்வாத அந்த வார்த்தையை நீக்க வேண்டுமென்று கேட்ட போது, "உங்களை யெல்லாம் அவையை விட்டே நீக்குகிறேன் பார்" என்று பேரவை கூடிய இரண்டாம் நாளே கழக உறுப்பினர்களை வெளியேற்றினார். இதுதான் ஜெயலலிதாவின் சட்டப் பேரவையா?

சுனாமியும் நானும்

சுனாமியும் நானும்

15-7-2014 அன்று சமூக நலத் துறை பற்றிய மானியம். கழகத்தின் சார்பில் புஷ்பலீலா ஆல்பன் பேசும்போது, கழக ஆட்சியில் அந்தத் துறை சார்பில் செய்யப்பட்ட சாதனைகளைக் குறிப்பிட்டார். அப்போது துறையின் அமைச்சரும், முதல் அமைச்சரும் குறுக்கிட்டு, சுனாமி ஏற்பட்ட போது, நான் மருத்துவமனையில் படுத்துக் கொண்டேன் என்று பேசியிருக்கிறார்கள். தேவை தானா? அ.தி.மு.க. ஆட்சி நடந்தபோது சுனாமி வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே என் உடல் நலம் பாதிக்கப்பட்டது. நோய் இல்லாமல் மருத்துவமனையில் படுத்துக் கொள்ள முடியுமா? அதுவும் ஜெயலலிதா ஆட்சியில், மருத்துவமனையிலே அனுமதிப்பார்களா? அவ்வாறு என் மீது குற்றச்சாட்டு கூறும்போது, எங்கள் கட்சியின் உறுப்பினர்கள் அதற்குப் பதில் அளிக்க அனுமதிக்கப்பட வேண்டாமா? முதலமைச்சர் பேசிய பிறகு யாரும் பேச முடியாது என்று பேரவைத் தலைவர் கூறியது தான் தீர்ப்பா? அதைக் கண்டித்துத்தான் கழக உறுப் பினர்கள் வெளிநடப்பு செய்தார்கள்.

வெளிநடப்பு

வெளிநடப்பு

17ஆம் தேதியன்று வறட்சி - கடும் குடிநீர்த் தட்டுப்பாடு - விலைவாசி உயர்வு போன்றவை குறித்து கொடுக்கப்பட்டுள்ள ஒத்திவைப்பு, கவன ஈர்ப்புத் தீர்மானங்களை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டு, அனுமதிக்காததால் வெளிநடப்பு செய்யப் பட்டது. இதே பிரச்சினைக்காக தே.மு.தி.க., மார்க்சிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளும் அன்று வெளிநடப்பு செய்தன. அதே நாளில் ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் என்னைப் பற்றி அநாகரிகமாக அருவருக்கத்தக்க வகையில் பேசியதைத் தொடர்ந்து கழக உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், கழக உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டார்கள். 18ஆம் தேதியன்று விதி 110இன் கீழ் அறிக்கை படிக்கும்போது, தேவையில்லாமல் என் மீது புகார் கூறி, அதற்குப் பதிலளிக்க தம்பி துரைமுருகன் பேச வாய்ப்பு கேட்டு அளிக்காததால் கழக உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்திருக்கிறார்கள். அதே நாளில் இதே காரணத்திற்காக மீண்டும் இரண்டு முறை வெளி நடப்பு செய்திருக்கிறார்கள்.

யார் கொண்டுவந்த மின் திட்டங்கள்?

யார் கொண்டுவந்த மின் திட்டங்கள்?

21ஆம் தேதி அ.தி.மு.க. ஆட்சியில் மூன்றாண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விவாதிக்க அனுமதி தரப்படாததைக் கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்கள். அதே நாளில் மின் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மின் திட்டங்களையெல்லாம் அ.தி.மு.க. அரசு கொண்டு வந்ததாகக் கூறியதைத் தொடர்ந்து கழக உறுப் பினர்கள் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.

மீண்டும் சுனாமி விவகாரம்

மீண்டும் சுனாமி விவகாரம்

22ஆம் தேதியன்று ஒரு அமைச்சர் பழைய பிரச் சினையையே அதாவது சுனாமி ஏற்பட்ட போது நான் மருத்துவமனையிலே இருந்ததையே கொச்சைப் படுத்தி பேசியதைத் தொடர்ந்து கழக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, கழக உறுப்பினர்கள் மூன்றாவது முறையாக வெளியேற்றப்பட்டுள்ளார்கள். ஜூலை 10ஆம் தேதி முதல் நடைபெற்ற இந்தச் சட்டமன்றத் தொடரிலே மட்டும் 9 நாட்கள் நடைபெற்ற சட்டமன்றத்தில் எட்டு முறை வெளிநடப்பு செய்திருக்கிறார்கள் - மூன்று முறை வெளியேற்றப்பட்டிருக் கிறார்கள். அதுவும் இந்தக் கூட்டத் தொடரில் நான்கு முறை வெளியேற்றப்பட்ட காரணத்தினால் கழக உறுப்பினர்கள் இந்தத் தொடர் முழுவதற்கும் சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கக் கூடாதாம். எப்படிப்பட்ட ஜனநாயகம் தமிழகச் சட்டமன்றத்திலே கொடிகட்டிப் பறக்கிறது?

கண்டனக் கூட்டங்கள்

கண்டனக் கூட்டங்கள்

இதுபற்றியெல்லாம்தான் நேற்றையதினம் நடை பெற்ற கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் விரிவாகப் பேசப்பட்டு - அ.தி.மு.க. அரசின் இந்தப் போக்கினைக் கண்டிக்கின்ற வகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக - "தமிழகச் சட்ட மன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு" என்ற தலைப்பில் கண்டனக் கூட்டங்களை மாவட்டத் தலைநகரங்களிலும், மற்றும் முக்கிய நகரங்களிலும் நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 31ஆம் தேதி சென்னை மாநகரில் நடைபெறும் கூட்டத்தில் நானும், கழகத்தைச் சேர்ந்த அனைத்து சட்டப்பேரவை உறுப் பினர்களும் கலந்து கொள்ளும் கண்டனக் கூட்டம் நடைபெறவுள்ளது.

சிறப்பாக நடத்த வேண்டும்

சிறப்பாக நடத்த வேண்டும்

எஞ்சிய நகரங்களில் ஆகஸ்ட் 1, 2 ஆகிய நாட்களில் கண்டனக் கூட்டங்கள் நடைபெறும். அதிலே சட்டமன்றக் கழக உறுப்பினர்களும், கழகப் பேச்சாளர்களும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். அந்தக் கூட்டங்களில் தமிழகச் சட்டமன்றத்தில் ஜனநாயகம் எந்த அளவுக்குப் புறக்கணிக்கப்படுகிறது என்பது பற்றி விரிவாகப் பேசப்படும். சட்டப்பேரவையின் மாண்புகளைக் காத்திடவும், சர்வாதிகார எண்ணங் களைத் தடுத்திடவும், அந்தக் கண்டனக் கூட்டங்களை எப்போதும் போல சிறப்பாக நடத்தித்தர வேண்டுமென்று கழக உடன்பிறப்புகளையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

 
 
 
English summary
DMK leader Karunanidhi slams Tamilnadu Chief Minister Jayalalithaa on assmebly proceedings.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X