For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா வழக்கை சி.பி.ஐ.தான் விசாரிக்க வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: விஷ்ணுபிரியாவின் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். அப்படிச் செய்ய தாமதித்தாலும், தவறினாலும், மக்கள் மத்தியில் விஷ்ணுபிரியாவின் மரணம் குறித்து ஏற்கெனவே ஏற்பட்டிருக்கும் பல்வேறு சந்தேகங்கள் உறுதிப்பட்டு விடுமேயன்றி, சிறிதும் மாறாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ''நேற்று (18-3-2016) காலையில், கழகப் பொருளாளர் தம்பி மு.க.ஸ்டாலின், ஆறு மாதங்களுக்கு முன் மர்மமான முறையில் மறைந்த, காவல் துறை அதிகாரி, திருச்செங்கோடு மாவட்ட உதவிக் கண்காணிப்பாளர், விஷ்ணுப்ரியாவின் அருமைத் தந்தை ரவி, அவருடைய நெருங்கிய உறவினர்கள் சிலரையும், என்னைச் சந்திப்பதற்காக அழைத்து வந்தார். நான் அவர்களைப் பார்த்ததும், அவர்கள் அனைவரும் ஒரே குரலில், "விஷ்ணுப்ரியாவின் மறைவு தற்கொலையால் ஏற்பட்டது அல்ல, அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அதுபற்றிய உண்மை உலகத்திற்குத் தெரிய வேண்டும்.

Karunanidhi urged CPI investigate DSP Vishnupriya's case

அதற்காக தாங்கள் இந்தச் சம்பவம் பற்றி சி.பி.ஐ. விசாரணை வேண்டுமென்று வலியுறுத்தியும், தமிழக அரசு அதற்குச் செவிசாய்க்கவில்லை" என்றெல்லாம் அடுக்கடுக்காக இந்த அரசின் மீது குற்றச்சாட்டுகளைக் கூறினார்கள். அவர்களுக்கு நான் ஆறுதல் கூறி அனுப்பினேன். விஷ்ணுப்ரியா தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். குறிப்பாக அருந்ததியினருக்கான உள் இட ஒதுக்கீட்டில் பணி வாய்ப்புப் பெற்ற முதல் காவல் துறை அதிகாரி.

காவல் துறையில் பணியாற்றுபவர்களில் தற்கொலை செய்து கொண்டவர்கள் என்று எடுத்துக் கொண்டால், 2012ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 58 தற்கொலைகள் (இந்தியாவிலேயே முதல் இடம்); 2013ஆம் ஆண்டில் 31 பேர் காவல் துறையில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தேசிய குற்றப் பதிவு ஆவணம் கூறுகிறது. அதாவது, இந்தியாவிலேயே மராட்டியத்திற்கு அடுத்து தமிழகத்திலேதான் அதிக தற்கொலைகள் நடந்துள்ளன.

கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்திலே காவல் துறையில் நடந்த முக்கிய தற்கொலைகள் என்று எடுத்துக்கொண்டால், மைலாப்பூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ராஜசேகர், மதுரையில் தலைமைக் காவலர் நாகையசாமி, மதுரையில் மகளிர் துணை ஆய்வாளர்கள் எஸ்தர், ரெங்கநாயகி, ஆவடியில் முத்தையா என்ற துணை ஆய்வாளர், பரங்கிமலையில் ரவிச்சந்திரன் என்ற ஆய்வாளர், நாகலாபுரத்தில் கருப்பாயி போன்றவர்களைக் கூறலாம்.

விஷ்ணுப்ரியாவின் மறைவு குறித்து "ஜூனியர் விகடனில்" அப்போது, "ஒரு டி.எஸ்.பி.யையே இந்தப் பாடுபடுத்துவார்கள் என்றால், சாதாரண பொதுமக்களை இந்தப் போலீஸ் அதிகாரிகள் என்னவெல்லாம் செய்ய மாட்டார்கள் என்பதற்கு உதாரணம் இந்தச் சம்பவம். தான் சொன்னதைச் செய்ய வேண்டும் என்றும், தனக்கு இடைஞ்சலாக இருக்கும் காரியத்தை எதன் பொருட்டும் செய்யக்கூடாது என்றும், கட்டுப்பாடு விதிக்கப்பட்டு,

ஓர் அடிமையைப் போல் நடத்தப்பட்டுள்ளார் விஷ்ணு ப்ரியா. பெண் என்பதற்காக கொச்சைப்படுத்தப்பட்டு நடத்தப்பட்டுள்ளார். அதுவும் தலித் என்பதால் கூடுதலாக அவமானப்படுத்தப்பட்டும் உள்ளார். படித்து வந்து விட்டால் பெண்ணுக்கு அவமானம் வராது என்றும், அதிகாரம் பொருந்திய பதவிக்குப் போய் விட்டால் தலித்களுக்கு மரியாதை கிடைத்து விடும் என்றும் யார் சொன்னது? சமூகத்தின் கூரிய நகம், ஒருவன் எங்கிருந்தாலும் பிறாண்டிக் கிழிக்கும் என்பதற்கு உதாரணம் இந்த மரணம்" என்று "ஜூனியர் விகடன்" எழுதியிருப்பது ஆழமாக எண்ணிப் பார்க்கத்தக்கது.

டி.எஸ்.பி., விஷ்ணுப்ரியா இறந்தவுடன், தி.மு. கழகம் உட்பட, தமிழகத்திலே உள்ள அத்தனை எதிர்க்கட்சிகளும், அதுபற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்று தமிழக அரசைக் கேட்டுக் கொண்டன. ஆனால் அவசர அவசரமாக முதலமைச்சர் ஜெயலலிதா சி.பி.ஐ. விசாரணைக்கு மறுத்து, தமிழக அரசின் கட்டுப்பாட்டிலே உள்ள சி.பி., சி.ஐ.டி., விசாரணையே போதும் என்று அறிவித்து விட்டார். தற்போது அடுக்கடுக்காகச் செய்திகள் வருகின்றன.

முதலில் விஷ்ணு ப்ரியா எழுதிய கடிதத்தில் ஒரு சில பக்கங்களைக் காணவில்லை என்றார்கள்; பிறகு அந்தக் கடிதத்தில் இருந்த கையெழுத்தே அவருடையது அல்ல என்றார்கள்; கடிதமே அவரால் எழுதப்பட்டது அல்ல என்றார்கள்; அவருடைய முக்கியமான கேமரா காணப்படவில்லை என்றார்கள்; அவர் தூக்கு மாட்டிக் கொண்டதாகக் கூறப்பட்ட இடம் பற்றியும், தூக்கு மாட்டிக் கொண்ட நிலையில், அவருடைய கால்கள் கீழே தரையிலே இருந்தன என்றெல்லாம் சந்தேகத்தை ஏற்படுத்தும் செய்திகள் வருகின்றன.

மறைந்த விஷ்ணுப்ரியாவின் தற்கொலையை அடுத்து, அவரது நெருங்கிய தோழியும், இராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை டி.எஸ்.பி.யாகப் பணியாற்றி வருபவருமான மகேஸ்வரி, சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, "வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.48 மணியளவில் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஷ்ணுப்ரியா பேசிக் கொண்டிருந்தார். அப்போது, நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றொரு இணைப்பில் அழைப்பதாகக் கூறிவிட்டு எனது இணைப்பைத் துண்டித்தார். அதன் பிறகு விஷ்ணுப்ரியாவின் செல்லிடப்பேசி அணைத்து வைக்கப்பட்டது.

அதன் பிறகே அவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் தெரிய வந்தது. கோகுல்ராஜ் கொலை வழக்கு முறையாக விசாரணை செய்யப்படவில்லை. இந்த வழக்கில் தொடர்பில்லாத சிலரை உயர் அதிகாரிகளின் நெருக்கடியால் கைது செய்து சிறையில் அடைத்ததுடன், அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் நிர்ப்பந்தம் செய்யப்பட்டதாகவும் என்னிடம் விஷ்ணுப்ரியா தெரிவித்தார்.

விஷ்ணுப்ரியா நேர்மையான அதிகாரி. உயர் அதிகாரிகளின் நெருக்கடி, ஒருமையில் பேசியது, போலீஸ் வேலைக்குத் தகுதி இல்லாதவர் என அவமரியாதையாகத் திட்டியது போன்ற காரணங்களால் அவர் தற்கொலைக்குத் தூண்டப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும். உயர் அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றெல்லாம் டி.எஸ்.பி., மகேஸ்வரி அப்போதே விரிவாகத் தெரிவித்திருக்கிறார்.

"இஞ்சினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கு குறித்து ஆரம்பத்தில் இருந்தே, முக்கியக் குற்றவாளிகள் தப்புவதற்கு உயர் அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகப் புகார் எழுந்தது. போலியான குற்றவாளிகளை ஆஜர்படுத்தினால்தான், உண்மையான குற்றவாளிகள் தப்ப முடியும். இதனால் சென்னையில் இருந்து ஏ.டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரி ஒருவர் இந்த வழக்கு குறித்து எஸ்.பி., மற்றும் டி.எஸ்.பி.யிடம் தொடர்ந்து, நாங்கள் சொல்வது போலச் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏ.டி.ஜி.பி.யை வேறு யாராவது வற்புறுத்தினார்களா என்பது தெரியவில்லை. ஆனால் இதற்குப் பின்னால் பெரிய சதி வலை இருக்கலாம். குறிப்பாக அதிகாரத்தில் உள்ள அரசியல் வாதிகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டுமென்று போலீஸ் அதிகாரிகள் வட்டாரத்திலும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது" என்றும் ஏடுகளில் அப்போது எழுதப்பட்டிருந்தது.

முன்னாள் டி.ஜி.பி., திலகவதி கூறுகையில், "விஷ்ணு ப்ரியாவின் மரணம் மர்மம் நிறைந்தது. விசாரணையின் முடிவில்தான் உண்மை வெளிவரும். டி.எஸ்.பி. விஷ்ணு ப்ரியா தற்கொலை விவகாரத்தில் சி.பி., சி.ஐ.டி. விசாரணை அமைக்கப்பட்டுள்ளது. அது நேர்மையாக இருக்காது. காரணம், அது தமிழக அரசின் கீழுள்ள போலீஸ். ஆகவே சி.பி.ஐ. விசாரணை அமைத்தால் மட்டுமே உண்மை வெளிவரும்" என்றெல்லாம் கருத்துத் தெரிவித்திருந்தார். டி.ஜி.பி.யாக இருந்தவரே, மாநில சி.பி.,சி.ஐ.டி. விசாரணையில் நேர்மை இருக்காது, உண்மை வெளிவராது என்று தெரிவித்திருப்பதை, நடுநிலையாளர்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

நேற்றையதினம், விஷ்ணுப்ரியாவின் தந்தையும், அவரது உறவினர்களும் சென்னையில் என்னை வீட்டிலே சந்தித்து, என்னிடம் நேரில் கூறிய சில சம்பவங்கள் முக்கியமானவை. என்னிடம், தன் மகள் தற்கொலை செய்து கொண்டு இறந்ததற்குக் குடும்பப் பிரச்சினை காரணம் அல்ல என்று கூறியதோடு, "இதுபற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடும் வரை விஷ்ணுப்ரியாவின் உடலை வாங்க மாட்டோம்; எனது மகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்குக் கோழை கிடையாது. அவரது மரணத்துக்கு உயர் அதிகாரிகளே காரணம். கோகுல்ராஜின் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளின் மிரட்டலும், அது தொடர்பான உயர் அதிகாரிகளின் நெருக்கடியும் இருப்பதாக விஷ்ணுப்ரியா கூறி வந்தார். இந்த வழக்கைத் திசை திருப்பவே குடும்பப் பிரச்சினை எனப் போலீசார் கூறி வருகின்றனர்.

அவர் எழுதிய கடிதத்தில் 4 பக்கத்தை மட்டுமே போலீசார் காட்டினர். மீதியுள்ள பக்கங்களை மறைத்து விட்டனர். விஷ்ணுப்ரியாவின் மடிக்கணினி, இரண்டு செல்லிடப் பேசிகள், கேமரா ஆகியவற்றைப் போலீசார் கைப்பற்றி உள்ளனர். செல்லிடப் பேசியில் உள்ள ஆதாரங்களைப் போலீசார் அழிக்க முயற்சிக்க வாய்ப்புள்ளது. இந்த வழக்கில் போலீசார் நடத்தும் விசாரண மீது நம்பிக்கை கிடையாது. எனவே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்" என்றெல்லாம் அப்போதே தெரிவித்திருந்ததையெல்லாம் எனக்கு நினைவூட்டினார்.

விஷ்ணுப்ரியாவின் தந்தை ரவி, "விஷ்ணுப்ரியாவின் மேல் அதிகாரியான நாமக்கல் காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.செந்தில்குமார் அவர்களைப் பற்றி சில குற்றச்சாட்டுகளைத் தெரிவித்ததோடு, இருந்தாலும் அந்த அதிகாரி அங்கிருந்து மாற்றப் படவில்லை என்றார். அவருடைய மகள் விஷ்ணுப்ரியா, கோகுல்ராஜ் கொலை வழக்கினைத் தவிர்த்து மேலும் சில வழக்குகளைக் கையாண்டதாகவும், அந்த வழக்குகள் விசாரணையின் போதுதான் பல அச்சுறுத்தல்களுக்கு ஆட்பட்டதாகவும், தன் மனைவியிடம் விஷ்ணுப்ரியா கூறியதை விசாரணை அதிகாரிகளிடம் தன் மனைவி தெரிவித்த போதிலும், அதுபற்றி எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை" என்றும் வருத்தப்பட்டார்.

திருச்செங்கோடு டி.எஸ்.பி. என்ற முறையில், திருச்செங்கோடு பகுதியில் ஒரு நம்பர் லாட்டரிச் சீட்டினை ஒழித்ததற்குக் காரணமாக விளங்கியவர் விஷ்ணுப்ரியா. உண்மையில் லாட்டரிக் கடைகளைச் சோதனையிட்டு, பலரைக் கைது செய்து ரிமாண்டுக்கு அனுப்பியவர் இவர் என்ற பெருமைக்குரியவர். மேலும் நாமக்கல் எஸ்.பி. செந்தில்குமாரின் விருப்பத்திற்கு எதிராக "டாஸ்மாக்" கடைகளில் சோதனை நடத்தியுள்ளார். உண்மையைக் கூற வேண்டுமானால், இந்தக் கடைகளில் சோதனையிட்டதற்காக காலை முதல் மாலை வரை அலுவலகத்தில் காத்திருக்க வைத்ததோடு, சட்டப்படி நடவடிக்கை எடுத்ததற்காக விஷ்ணு ப்ரியாவை எஸ்.பி., கடுமையாகக் கோபித்துக் கொண்டிருக்கிறார். இருவருக்குமிடையே இதனால் மோதல் ஏற்பட்டது.

முக்கியமான கொலை வழக்கான மில் உரிமையாளர் ஜெகன்னாதன் வழக்கில் விஷ்ணுப்ரியாவும் ஒரு மேற்பார்வை அதிகாரி. அந்த வழக்கில் விஷ்ணுப்ரியா வைத்திருந்த வீடியோ கேமராவில் சிலவற்றைப் பதிவு செய்து வைத்திருந்தார். இந்த வீடியோ கேமராவையும், வேறு சில லேப்டாப், இரண்டு அலைபேசிகள் மற்றும் சில முக்கியக் கருவிகள், விஷ்ணுப்ரியா மறைந்த அதே 18ஆம் தேதியன்று மாலையிலேயே எஸ்.பி., செந்தில் குமாரால் எடுத்துச் செல்லப்பட்டு விட்டன. விஷ்ணுப்ரியா தன்னிடம் வைத்திருந்த கேமராவிலும், லேப்டாப்பிலும், தான் விசாரணை நடத்திய வழக்குகள் பற்றிய பல முக்கியமான தகவல்களையெல்லாம் பதிவு செய்து வைத்திருந்தார்.

மேலும் தன் மகள் பத்திரப்படுத்தி வைத்திருந்த பத்து பென்-டிரைவ்களையும் காணவில்லை. காணாமல் போன இந்தப் பொருள்கள் பற்றி எந்தவிதமான விசாரணையும் நடத்தப்படவே இல்லை என்ற விபரங்களை என்னிடம் விஷ்ணுப்ரியாவின் தந்தை வருத்தத்தோடு தெரிவித்தார்.

விஷ்ணுப்ரியாவின் செல்போன் எடுத்துச் செல்லப்பட்ட அன்று நள்ளிரவில் அது யாரோ சிலரால் கையாளப்பட்டது, விஷ்ணுப்ரியாவின் தோழியான கீழக்கரை டி.எஸ்.பி. மகேஸ்வரியின் செல்போன் வாயிலாகக் கண்டறியப்பட்டது என்றும், நள்ளிரவில் தன் மகளின் செல்போனை ஆய்வு செய்தது யார் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி, தன் மகளுக்கு அனுப்பிய வாட்ஸ்-அப் செய்தியின் மூலமாகவும் தன் மகளுடைய செல்போன் யாராலோ சோதிக்கப்பட்டது நிச்சயமாகிறது என்றும், அது பற்றியெல்லாம் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் விஷ்ணு ப்ரியாவின் தந்தை கேட்டுக் கொண்டார்.

விஷ்ணுப்ரியா இறந்தவுடன், நாமக்கல் அடிஷனல் எஸ்.பி., சேவியர் பெஸ்கி உடனடியாக சென்னைக்கு மாற்றப்பட்டார் என்றும், இந்த வழக்கு விசாரணைக்கு அவர் அங்கேயிருந்தால் ஆபத்து என்று கருதியவர்கள்தான், அவரை அங்கிருந்து உடனடியாக மாற்றி விட்டார்கள் என்றும், அவரை எதற்காக அவ்வளவு அவசரமாக மாற்றினார்கள் என்றும் திரு. ரவி கேள்வி எழுப்பினார்.

தன் மகள் விஷ்ணுப்ரியா தூக்கிட்டுக் கொண்டதாகக் கூறப்படும் அறையின் உயரம் 12 அடிதான் இருக்குமென்றும், அவர் தூக்கிட்டுக் கொண்டதாகக் கூறப்படும் வளைவு, சுவருக்குள் இருக்கிறது என்றும், அதற்குள் கயிறையோ, புடவையோ நுழைக்க முடியாதென்றும், எனவே தனது மகளின் இறப்பு தற்கொலையா அல்லது கொலையா என்பது பற்றி மாநில அரசின் கட்டுப்பாட்டில் வராத சுதந்திரமான, விருப்பு வெறுப்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்றும், அப்போதுதான் தனக்கு தன் மகள் இறந்தது பற்றி உண்மை தெரிய வரும் என்றும்
திரு. ரவி வலியுறுத்திக் கூறினார்.

அவர் என்னிடம் அளித்த மனுவிலே கூட, "தமிழக அரசு, எனது மகள் மரணத்தைத் தற்கொலையாகக் காட்டிடவே முயன்றது. தமிழக அரசு மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளின் கூட்டு முயற்சியால் தடயங்கள் அழிக்கப்பட்டதுடன், உண்மை மூடி மறைக்கப்பட்டுள்ளது. காவல் துறை உயர் அதிகாரிகளே இந்த மரணத்தில் ஈடுபட்டிருக்கும்பொழுது, நீதிக்குப் புறம்பாக நடக்கும் அதிகாரிகளைப் பாதுகாக்கும் அரசிடமிருந்து எங்களுக்கு எவ்வாறு நியாயம் கிடைக்கும்? இது சம்மந்தமாக நான் சி.பி.ஐ. விசாரணை கோரி தமிழக அரசிடம் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டும், அதன் பிறகு இது சம்மந்தமாக முறையாக மனுக் கொடுத்தும், இன்றுவரை தமிழக அரசிடமிருந்து எந்தவித நியாயமும் எங்கள் குடும்பத்திற்குக் கிடைக்கவில்லை" என்றெல்லாம் வேதனையைக் கொட்டியிருக்கிறார்கள்.

விஷ்ணுப்ரியாவின் தந்தையும், ஏனையோரும் இந்த வழக்கு குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் அலட்சியப்படுத்தப்படக் கூடியவையல்ல. ஜெயலலிதா ஆட்சியிலே அதிகாரிகள் தற்கொலைகளும், அதிலே உண்மைச் சம்பவங்களை மனசாட்சி சிறிதுமின்றி மறைத்துத் திசைதிருப்புகின்ற முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. அனைவரும் இந்தச் சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று வலியுறுத்திய நேரத்தில், அ.தி.மு.க. அரசு அவசர அவசரமாக சி.பி., சி.ஐ.டி., விசாரணை என்று அறிவித்திருப்பதிலிருந்தே, இந்த வழக்கில் உண்மைச் சம்பவங்களை மறைப்பதற்கான முயற்சி தொடங்கி நடைபெறுகிறதோ என்றுதான் சந்தேகிக்க வேண்டியுள்ளது.

எனவே விஷ்ணுப்ரியாவின் தற்கொலையில் நியாயம் கிடைத்து, உண்மை விவரங்கள் நாட்டுக்குத் தெரிய, பல்வேறு தரப்பிலும் கேட்டுக் கொண்டுள்ளபடி, இந்த வழக்கினை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும். அப்படிச் செய்யத் தாமதித்தாலும், தவறினாலும், மக்கள் மத்தியில் விஷ்ணுப்ரியாவின் மரணம் குறித்து ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் பல்வேறு சந்தேகங்கள் உறுதிப்பட்டு விடுமேயன்றி, சிறிதும் மாறாது!'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
CPI investigate DSP Vishnupriya's case: Karunanidhi urges
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X