கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: ஜெயலலிதா மாஜி வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சிபிசிஐடி சம்மன்!
சென்னை: கோடநாடு கொலை கொள்ளை சம்பவங்கள் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சிபிசிஐடி போலீசார் திடீரென சம்மன் அனுப்பி உள்ளனர். கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். தற்போது இந்த வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில் சுதாகரனுக்கும் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் 2017-ம் ஆண்டு கோடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த கொள்ளை சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜ் உள்ளிட்டோர் ஈடுபட்டதாக கூறப்பட்டது. அதேநேரத்தில் அடுத்த சில நாட்களிலேயே கனகராஜ் திடீரென சாலை விபத்தில் இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கோடநாடு பங்களா சிசிடிவி ஆபரேட்டர் தினேஷும் தமது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் கோடநாடு கொலை- கொள்ளை வழக்கு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் தற்போது ஜாமீனில் வெளியே நடமாடி வருகின்றனர். இந்த வழக்கு விசாரணை உதகமண்டலம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் 500க்கும் மேற்பட்ட சாட்சிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்; 250க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரித்தும் உள்ளனர்.
இந்த நிலையில் கோடநாடு வழக்கில் திடீர் திருப்பமாக ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். வளர்ப்பு மகனாக தத்தெடுக்கப்பட்டு நாட்டையே திரும்பி பார்க்க வைத்த திருமணத்தை இந்த சுகாதாகரனுக்காக நடத்தியவர்தான் ஜெயலலிதா. சசிகலாவின் உறவினர் சுதாகாரன். ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுடன் சேர்ந்து பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் 4 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தவர்; ஒரு காலத்தில் சின்ன எம்ஜிஆர் எனவும் அழைக்கப்பட்டவர். தற்போது சுதாகரனையும் விசாரணை வளையத்துக்குள் சிபிசிஐடி போலீசார் கொண்டு வந்துள்ளது இந்த வழக்கில் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications