ஆ.ராசாவுக்கு பயந்து பின்வாங்கினேனா.. நோ நோ.. நீலகிரி டூ மத்தியப் பிரதேசம்.. எல்.முருகன் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிடுவார் என்று பாஜக அறிவித்திருக்கிறது. எனவே ஆ.ராசாவுக்கு பயந்துதான் எல்.முருகன் பின்வாங்கியதாக விமர்சனங்கள் உருவாகியுள்ளன. இதற்கு அவர் பதிலளித்திருக்கிறார்.

தேசிய அளவில் பாஜகவுக்கு இந்த லோக்சபா தேர்தல் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு தமிழ்நாடு அளவிலும் இது முக்கியமானதாகும். கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு 2021ம் சட்டப்பேரவை தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு 4 எம்எல்ஏக்கள் கிடைத்தனர். எம்எல்ஏக்களுக்கே வாய்ப்பு இருக்கும் போது ஏன் எம்பிக்களுக்கு வாய்ப்பு இருக்காது? என்று யோசிக்க தொடங்கிய கட்சி தலைமை, இந்த முறை எப்படியும் 9 தொகுதிகளை கைப்பற்றிவிடுவது என வியூகம் வகுத்து களத்தில் இறங்கியது.

L. Murugan explained that he did not back down because of fear of A. Raja in the Lok Sabha elections

ஆனால், இந்த நேரம் பார்த்து பாஜகவை அதிமுக கழற்றிவிட, கட்சி தலைமை சற்று ஜர்க்காகியிருக்கிறது. இருப்பினும் சிறிய கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளது. எனினும் இன்னும் கூட்டணியை இறுதி செய்தபாடில்லை. இப்படி கூட்டணியே இல்லாமல் களம் இறங்கியிருப்பது பாஜகவுக்கு பலவீனம்தான் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 2021 சட்டப்பேரவை தேர்தலின் போது அதிமுக+பாஜக சேர்ந்து களத்தில் இறங்கியிருந்தது. எனவேதான் 4 பாஜக வேட்பாளர்கள் வெற்றிபெறும் அளவுக்கு வாக்குகள் கிடைத்தன.

இந்த முறை, அதிமுக உடன் இல்லை, ஓபிஎஸ் உடன் இருந்தாலும் அவருக்கு என சின்னம் கிடையாது, இன்னும் தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி குறித்து வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இது பாஜகவின் 9 எம்பிக்களின் கனவில் பெரும் ஓட்டையை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் அரசியல் கூர்நோக்காளர்கள் கூறியுள்ளனர். இதன் வெளிப்பாடாகத்தான் நீலகிரி தொகுதியில் எல்.முருகன் போட்டியிடவில்லை என்றும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.

ராமநாதபுரம், கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தென்சென்னை, கன்னியாகுமரி, சிவகங்கை, மதுரை மற்றும் திருப்பூர் ஆகிய தொகுதிகளை பாஜக குறி வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் வேலூரும் உண்டு என்றாலும், அதில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தாமரை சின்னத்தில் களமிறக்கப்பட்டிருக்கிறார். நீலகிரியை பொறுத்த அளவில் அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளிலும், போராட்டங்களிலும் எல் முருகன் அவ்வப்போது தலைக்காட்டி வந்திருந்தார்.

எனவே, நீலகிரியில் தற்போது எம்பியாக இருக்கும் திமுகவின் ஆ.ராசாவை எதிர்த்து எல்.முருகன் களமிறங்குவது ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால், நேற்று பாஜக தரப்பிலிருந்து வெளியான அறிவிப்பு இதற்கு முற்றுப்புள்ளியை வைத்தது. அதாவது, எல்.முருகன் மீண்டும் மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை எம்பியாக போட்டியிட கட்சியால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். இந்த அறிவிப்புக்கு பின்னர், சோஷியல் மீடியாக்களில், "ஆ.ராசாவுக்காக பயந்து எல்.முருகன் பின்வாங்கிவிட்டார்" என திமுக ஆதரவாளர்கள் பேச தொடங்கினர்.

இந்நிலையில் இது தொடர்பாக முருகன் விளக்கமளித்துள்ளார். இன்று காலை அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, "ஆ.ராசாவுக்கு பயந்து பின்வாங்குகிறீர்களா?" என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், "பயமெல்லாம் இல்லை. மாநிலங்களவையிலிருந்து எம்பியாக வேண்டும் என்பது கட்சியின் முடிவு. நாளையே கட்சி சொன்னால் தேர்தலில் நிற்பேன். தமிழகத்தில் பிரதமர் மோடியின் முகம் மக்கள் மத்தியில் பதிந்திருக்கிறது, தாமரை சின்னம் பதிந்திருக்கிறது. எனவே நான் என்றில்லை, பாஜக சார்பில் யார் நின்றாலும் ஆ.ராசாவை ஓட ஓட விரட்டுவோம்.

தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. திராவிட முன்னேற்ற கட்சியை துக்கியெறிய சிறப்பாக நாங்கள் பணியாற்றி வருகிறோம். வரும் தேர்தலில் திமுகவை நாடாளுமன்றத்தில் நுழைய விடாமல் செய்வதுதான் முக்கிய பணி. எங்களுக்கு பொதுமக்கள் ஆதரவும், பிரதமர் மோடியின் திட்டமும் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+