குடிநீருக்குத் தவிக்கும் மக்களைப் புறக்கணித்து புழுதி வாரித்தூற்றும் பினாமி அரசு… ஸ்டாலின் தாக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி ஒரு வாரமாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்காகவும் தமிழக முதல்வர் எதுவும் செய்யவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தலைவர் கலைஞர் அவர்களின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் வேதனை நிலவர மடலில் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

செயலற்ற தமிழக அரசு, குற்றவாளியின் பினாமி ஆட்சியை நடத்தியபடி தங்களின் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சியினர் மீது பழி போட்டு வருகிறது. மார்ச் 18ந் தேதி கோவையில் நடைபெற்ற விழாவில் பேசிய பினாமி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேவையற்ற வகையிலே தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது பாய்ந்திருக்கிறார். ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக மட்டும் எதிர்க்கட்சி செயல்படுகிறது என்று பேசியுள்ளார்.

சொல்ல விரும்புவது..

சொல்ல விரும்புவது..

அவருக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், தி.மு.கழகம் நிச்சயம் ஆட்சியைப் பிடிக்கத்தான் போகிறது. ஆனால், அது மக்களின் தீர்ப்பின் அடிப்படையில் அமையுமே தவிர, குறுக்கு வழியில் அல்ல. அந்த எண்ணம் ஒருபோதும் தி.மு.க.வுக்குக் கிடையாது. அதே நேரத்தில், அம்மையார் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு முதல்வர் பொறுப்பேற்றவரை மாற்றிவிட்டு, அந்த இடத்திற்கு அவசரமாக வரத் துடித்தவர்கள் யார் என்பது எடப்பாடி பழனிச்சாமிக்குத் தெரியும். அந்த எண்ணம், நீதிமன்றத் தீர்ப்பினால் முறியடிக்கப்பட்டு, பரப்பன அக்ரஹார சிறையில் முடங்கியதால்தான், எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் முதல்வராக முடிந்திருக்கிறது.

வெளிப்படையாக சொல்ல முடியாத…

வெளிப்படையாக சொல்ல முடியாத…

இதோ இப்போது ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அ.தி.மு.க சசிகலா அணியின் வேட்பாளராகப் போட்டியிட முன் வந்திருப்பவரின் உள்ளக்கிடக்கை என்ன என்பது முதல்வர் பொறுப்பில் உள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றாகத் தெரியும். அதனால் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள் என்று அவர் பேசியது, நம் மீதான விமர்சனம் அல்ல என்பதும் அவருடைய ஆதங்கத்தைத்தான் அரசு விழா மேடையில் வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதும் நன்றாகவே புரிகிறது. இதனை வெளிப்படையாக சொல்லும் துணிவின்றி, தி.மு.க.வை வம்புக்கிழுக்கின்ற வேலைகளை இனியும் தொடராமல், தமிழகம் முழுவதும் குடிப்பதற்காகத் தண்ணீர்கூட இல்லாமல் தவிக்கும் மக்களின் அவல நிலை நோக்கி கவனத்தைத் திருப்ப வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

காய்ந்த ஏரிகள்

காய்ந்த ஏரிகள்

தமிழகத்தின் குடிநீர்த் தேவைக்கான அடிப்படை ஆதாரங்களாக விளங்கும் அத்தனை நீர்த்தேக்கங்களும் வறண்ட நிலையில் உள்ளன. குறிப்பாக, தலைநகர் சென்னைக்கு நீர் ஆதாரமாக விளங்கும் அனைத்து ஏரிகளிலும் குட்டையில் இருக்கின்ற அளவிற்குத்தான் தண்ணீரின் அளவு உள்ளது. புழல் ஏரிக்கு தண்ணீர் வழங்கும் சோழவரம் ஏரியில் அதன் முழு கொள்ளளவில் ஒரு சதவீதம் அளவுக்குக்கூட நீர் இல்லை என்பதை ஊடகங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

குடிநீருக்கு என்ன நடவடிக்கை?

குடிநீருக்கு என்ன நடவடிக்கை?

இதுபோலவே, மேட்டூர் அணை தொடங்கி தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்குமான நீர் ஆதாரங்கள் மோசமான நிலையில் உள்ளன. தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சத்தை எதிர்கொள்ள அரசுத் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. தி.மு.கழக ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்களின் உத்தரவுப்படி, உள்ளாட்சித்துறை அமைச்சர் பொறுப்பு வகித்த நானே முன்னின்று ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு நிறைவேற்றிய ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தையும் அ.தி.மு.க அரசு முறையாக செயல்படுத்தாத காரணத்தால் தர்மபுரி - கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கிறார்கள்.

காலி குடங்களுடன் பெண்கள்

காலி குடங்களுடன் பெண்கள்

கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை உரிய முறையில் பராமரிக்காததாலும், எண்ணூர் கடலில் கொட்டிய கச்சா எண்ணெய்யை அகற்றுவதில் காட்டிய அலட்சியத்தாலும் மீஞ்சூர் - வடநெம்மேலி திட்டங்கள் பாதிப்படைந்துள்ளன. தமிழகத்தின் பல பகுதிகளில் கூட்டுக் குடிநீர் திட்டங்களும் சரியான முறையில் செயல்படுத்தப்படவில்லை. குழாய்களில் குடிநீர் விடப்பட்டு பல நாட்களாகிறது என காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபடுவது மாநிலம் முழுவதும் வழக்கமாகிவிட்டது.

அண்டை மாநில முதல்வர்கள்

அண்டை மாநில முதல்வர்கள்

இப்படிப்பட்ட வேதனையான நிலையில், தமிழகத்தின் முதல்வர் பொறுப்பில் இருப்பவர் அண்டை மாநில முதல்வர்களுடனும் அமைச்சர்கள், அதிகாரிகளுட னும் கலந்தாலோசித்து குடிநீர்த் தேவையை நிறை வேற்ற முன்வரவேண்டியது கடமையாகும். அப்படிப்பட்ட எந்த நடவடிக்கையையும் குற்றவாளி ஆட்சியின் பினாமி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொள்ளவில்லை. அதற்கு வேதனையான உதாரணமாக இருப்பது பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு கட்டியுள்ள தடுப்பணைகள்.

பவானியில் தடுப்பணை

பவானியில் தடுப்பணை

பவானி ஆறு கொங்கு மண்டலத்தில் உள்ள ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களின் விவசாயிகளுக்குப் பேருதவியாக இருக்கிறது. 3 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங் களுக்குப் பாசன நீர் வழங்கும் ஆதாரமாகவும் இந்த மாவட்டங்களில் உள்ள மக்களின் குடிநீர்த் தேவைக் கும் மிகவும் உதவிகரமாக உள்ளது. இந்நிலையில், கேரள அரசு தேக்குவட்டை, மஞ்சக்கண்டியூர், பாடவயல், சீரக்கடவு, சாவடியூர், சாலையூர் ஆகிய ஆறு இடங்களில் தடுப்பணைகள் கட்ட திட்டமிட்டு தேக்குவட்டை, மஞ்சக் கண்டியூர் பகுதிகளில் தடுப்பணை கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தடையாணை பெறாத அரசு

தடையாணை பெறாத அரசு

இவற்றில் தேக்குவட்டை தடுப்பணை கட்டும் பணிகளை முடித்து விட்டது. தேக்குவட்டையில் அணைக் கட்டும்போதே திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அங்குள்ள விவசாயிகள் அமைப்புகள் எல்லாம் எதிர்ப்புத் தெரிவித்தது. அதன்பிறகு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பெயரளவுக்கு ஒரு வழக்கைத் தொடர்ந்தாலும் அந்தத் தடுப்பணைகளை கட்டு வதற்கு 7.2.2017 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்தத் தடையாணை பெற இயலவில்லை.

அலட்சியம்

அலட்சியம்

அதனால் கேரள அரசு அத்துமீறி தடுப்பணைகளைக் கட்டி தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம், குடிநீர்த் தேவை போன்றவற்றிற்கு பேராபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 6 தடுப்பணைகளை கட்டி தமிழகத்திற்குக் கிடைக்கும் தண்ணீர் அனைத்தையும் தேக்கி வைத்துக் கொள்ளும் அராஜகப் பணியில் ஈடுபட்டுள்ளது. இதை எதிர்த்து கொங்கு மண்டல விவசாயிகளே போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில் பினாமி அ.தி.மு.க. அரசு மேலும் அலட்சியம் காட்டாமல் உடனடியாக நதிநீர் விவகாரங்களில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேகதாது அணை

மேகதாது அணை

கேரளாவின் நிலை இப்படி என்றால், மற்றொரு அண்டை மாநிலமான கர்நாடகாவின் செயல்பாடுகள் தொடர்பாகவும் பினாமி முதல்வரோ குற்றவாளியின் அரசோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் இன்னும் அமைக்கப்படாத சூழ்நிலையில் 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 60 டி.எம்.சி. கிடைக்கும் அளவுக்கு மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டம் தீட்டி செயல்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில், உச்சநீதிமன்றம் தலையிட்டிருப்பதால், அதனிடம் தெரிவிக்காமல் அணை தொடர்பான பணிகளை செயல்படுத்த மாட்டோம் என அந்த மாநில அரசு தெரிவித்திருப்பது செய்தியாக வெளிவந்துள்ளது.

புறக்கணிப்பு

புறக்கணிப்பு

காவிரி இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை கேரள, கர்நாடக அரசுகள் காவிரி மற்றும் அதன் உபநதிகளின் நீரைத் தடுக்கும் எவ்விதப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற வேண்டும். ஆந்திர மாநில அரசும் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டி வருகிறது. அதனைத்தடுக்கவோ, கிருஷ்ணா நீரைப் பெறவோ குற்றவாளியின் பினாமி ஆட்சியின் முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தமிழகத்தின் உரிமைகள் பறிபோகாமல் இருப்பதற்காக, அண்டை மாநில முதல்வர்களை சந்தித்துப் பேசினாரா? போராடும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளையும் அழைத்துச் சென்று கேரள, கர்நாடக முதல்வர்களை உடனடியாக சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்தாரா?

மூழ்கும் தமிழகம்

மூழ்கும் தமிழகம்

விவசாயிகள் இந்த அரசின் செயல்படாத்தன்மையை அறிந்து, டெல்லியில் முகாமிட்டுப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பினாமி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோ, தமிழக அரசு 3லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நேரடி கடனிலும், மறைமுகக் கடன்களையும் சேர்த்து 6 லட்சம் கோடிக்கும் அதிக மான நிதிச்சுமையில் உள்ள நிலையில், நிறைவேற்றாத திட்டங்களுக்கு அரசு செலவில் விழா நடத்தி, அதில் அரசியல் பேசிக்கொண்டிருக்கிறார்.

நதி நீர் இணைப்பு

நதி நீர் இணைப்பு

அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மூன்று மாநிலங்களுமே தமிழகத் திற்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரை தர மறுத்து அந்தத் தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ளும் முயற்சியிலும் ஈடுபட்டிருப்பதால், உடனடியாக அனுபவமிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரியின் கீழ் ஒரு தனி கமிட்டி அமைத்து அண்டை மாநிலங்களுடன் உள்ள நதி நீர்ப் பிரச்சினைகள் குறித்து எல்லாம் அவ்வப்போது ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழக நலன்களையும் விவசாயிகளின் வாழ்வாதா ரத்தையும் காப்பாற்றும் அவசர நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய முதலமைச்சர் தன் பணிகளில் ஒன்றையாவது செய்திருக்கிறாரா?

குவளை நீருக்கே அல்லல்

குவளை நீருக்கே அல்லல்

இதையெல்லாம் இந்நேரத்தில் சுட்டிக்காட்டுவதற்குக் காரணம், தனது பதவி நாற்காலியைக் காப்பாற்றிக்கொள்ளும் நோக்கத்துடன் எதிர்க் கட்சியான தி.மு.க. மீது வசைபாடும் முதல்வர், தங்களின் ஆட்சி பற்றி தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை உணர வேண்டும் என்பதற்காகத்தான். மக்கள் நலன் பற்றி கொஞ்சமும் அக்கறையில்லாத ஓர் ஆட்சி தமிழகத்தில் நடைபெறுவது ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட அவமானமாகும். குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் இருப்பவரின் பெயரையும், குற்ற வழக்குகளில் அபராதம் விதிக்கப்பட்டவரின் பெயரையும் மாண்புக்குரிய சட்டமன்றத்தில் உச்சரிப்பது என சட்டத்துக்கும் மக்களுக்கும் விரோதமாக நடைபெறும் இந்த ஆட்சியால், மக்களின் தாகம் தீர்க்க ஒரு குவளை தண்ணீர்கூட தரமுடியவில்லை என்பதுதான் உண்மை நிலவரம்.

இத்தகையை ஆட்சியை மாற்ற வேண்டிய வேலையை தி.மு.க. செய்ய வேண்டியதில்லை. மக்களே விரைவில் மேற்கொள்வார்கள். கழகத்தினராகிய நாம் மேற்கொள்ள வேண்டியது, மக்களின் உரிமைக் குரலுக்குத் துணை நிற்பதும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற போராட்டக்களம் காண்பதும்தான். மக்கள் பணியில் தொடர்ந்து செயலாற்றுவோம். மாற்றத்தை விரைவில் உருவாக்குவோம் என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The opposition leader M.K. Stalin condemned Edapadi Palanisamy for not performing scarcity of drinking water.
Please Wait while comments are loading...