மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டம்... விளக்கம் அளிக்க சேலம் போலீஸ் கமிஷனருக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் போடப்பட்டது குறித்து விளக்கமளிக்குமாறு சேலம் மாநகர காவல் ஆணையருக்கு ஹைகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டத்தை எதிர்த்து இயற்கையை பாதுகாக்கும் பல்வேறு போராட்டங்களில் மாணவி வளர்மதி ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், சேலம் கன்னங்குறிச்சியில் உள்ள பெண்கள் அரசு கலைக் கல்லூரி அருகில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களைக் கைவிட மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த அழைப்புவிடுத்து துண்டுபிரசுரங்களை விநியோகித்தார்.

 Madras Highcourt issued notice to Salem Police comissioner in Valarmathi's goondas case

இது தொடர்பாக சேலம் காவல்துறையினரால் ஜூலை 13ஆம் தேதி கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார் வளர்மதி. இதனைத் தாடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டதாகவும், மாணவர்களைத் தூண்டிவிட்டு மாணவர் கிளர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் கூறி ஜூலை 17ஆம் தேதி வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதனையடுத்து வளர்மதி கோவை மத்திய சிறையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.

இதனிடையே தனது மகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தந்தை மாதையன் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக உள்துறை செயலாளர், சேலம் காவல் ஆணையர் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

காவல்துறை அனுமதி பெற்று, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தாத வகையில் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டார் வளர்மதி. ஆனால் அரசியல் காரணங்களுக்காக குண்டர் சட்டத்தில் கைது செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்று மாதையன் மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வளர்மதி மீது குண்டர் சட்டம் போடப்பட்டது குறித்து விளக்கமளிக்குமாறு சேலம் மாநகர காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆகஸ்ட் 7ம் தேதிக்குள் இது குறித்த விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Madras highcourt issued notice to Salem Police comissioner to explain on what charges goondas imposed on student Valarmathi
Please Wait while comments are loading...