புத்தாண்டின்போது நள்ளிரவில் கோயில்களை திறக்க தடை விதிக்க முடியாது.. ஹைகோர்ட் மறுப்பு
ஆங்கில புத்தாண்டின் போது நள்ளிரவில் கோயில்களைத் திறக்க தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
Recommended Video

சென்னை : ஆங்கில புத்தாண்டின் போது டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவில் இந்து கோயில்களை திறக்க தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த விஷயத்தில் தமிழக அரசின் கருத்தை கேட்காமல் தடை விதிக்க முடியாது என்று கூறி வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
வழக்கறிஞர் அஸ்வத்தாமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அண்மைக் காலமாக ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31ம் தேதி இரவு கோவில்களின் நடை சாத்தப்படாமல் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இது ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக மாறி வருகிறது.
ஆகம விதிப்படி இரவு 9 மணிக்குள் பூஜையை முடித்து இந்துக் கோயில்களின் நடையை சாத்திவிட வேண்டும். அதன் பிறகு காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் நடையை திறக்க வேண்டும்.

ஆந்திராவைப் போல
இரவு நேரத்தில் ஆக்சிஜன் குறைவாக இருக்கும் என்பதால் மூதாதையர்கள் இந்த நடைமுறையை வகுத்துள்ளனர். கோவில்களை இரவில் திறந்து வைக்கக் கூடாது என ஆந்திர மாநில அரசும் உத்தரவு பிறப்பித்துள்ளதை மனுதாரர் சுட்டிக்காட்டி இருந்தார்.

ஆகம விதிகளை பின்பற்றவில்லை
சைவக் கோயில்கள் சிவராத்திரி நாளிலும், வைணவக் கோயில்கள் வைகுண்ட ஏகாதசி நாளிலும் இரவு திறந்து வைக்க ஆகம விதி உள்ளது. இந்த விதிகளை மீறி புத்தாண்டை ஒட்டிக் கோயில்கள் நள்ளிரவில் திறந்து வைக்கப்படுகின்றன.

தடை விதிக்க மறுப்பு
இந்த புதிய நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும் என்று அஸ்வத்தாமன் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் எம்எஸ் ரமேஷ், சுவாமிநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் பதிலை கேட்காமல் தடை விதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், அடுத்த புத்தாண்டில் இது குறித்து முடிவு செய்து கொள்ளலாம் தற்போதைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று கூறிவிட்டனர்.

விசாரணை ஒத்திவைப்பு
ஆகம விதிகளை மீறித் தான் கோயில்கள் புத்தாண்டுக்கு முந்தைய நாள் நள்ளிரவில் கோயில்கள் திறக்கப்படுகிறதா என்று அறநிலையத்துறை பதில் அளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து வழக்கு விசாரணையை ஜனவரி 8ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications