அய்யர்பங்களா ராக்பெல்லரும்.. சீனத்து லீயூஜியும்... ஒரு நவீன ‘டைட்டானிக்’ காதல்!
மதுரை: இத்தாலிக் கப்பலில் பணி புரிந்தபோது மலர்ந்த காதலைத் தொடர்ந்து, வரும் 24ம் தேதி சீனக் காதலியை திருமணம் செய்ய இருக்கிறார் மதுரை இளைஞர் ஒருவர். தமிழ்க் கலாச்சாரப்படி இந்தத் திருமணம் நடைபெற உள்ளது.
பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உலகப் புகழ்பெற்ற திரைப்படம் ‘டைட்டானிக்'. கப்பலில் உருவாகும் காதலைப் பற்றிய படம் இது.

இந்நிலையில், தற்போது மதுரை இளைஞர் ஒருவருக்கும் இதே போல் கப்பலில் காதல் பூத்துள்ளது. விரைவில் இந்தக் காதல் ஜோடிக்கு திருமணம் நடைபெற உள்ளது.
திரைப்படப் பாணியில் இத்தாலி கப்பலில் பணிபுரிந்தபோது சீனப் பெண்ணை காதலித்த மதுரை இளைஞர் கலாச்சாரம், மொழி, நாடு கடந்து அவரை வரும் 24-ம் தேதி தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்ய உள்ளார்.
மதுரை அய்யர்பங்களாவைச் சேர்ந்த பழனி என்பவரது மகன் ராக்பெல்லர் என்ற பார்த்தீபன் (29). மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பிடிஎஸ் சுற்றுலா அறிவியல் மற்றும் எம்பிஏ ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பை முடித்த பார்த்தீபன், தற்போது சீனாவில் ஷாங்காய் மாநகரில் உள்ள தனியார் ஹோட்டல் நிறுவனத்தில் உயர் பொறுப்பில் பணிபுரிகிறார்.
முன்னதாக இத்தாலி கப்பல் நிறுவனத்தில் பணி புரிந்தார் பார்த்தீபன். அப்போது அவருடன் சீனாவைச் சேர்ந்த லீயூஜி(27) என்பவரும் பணி புரிந்து வந்துள்ளார். ஒருமுறை கப்பல் நடுக்கடலில் சென்றபோது ஒரு விபத்து நிகழ்ந்துள்ளது. அதில் சிக்கிய லியூஜியை பார்த்தீபன் காப்பாற்றி உள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, நல்ல புரிதலாக மாறி காதலாக மலர்ந்துள்ளது. அவர்களுடைய காதலுக்கு பெற்றோர்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்தது.
அதனைத் தொடர்ந்து 6 ஆண்டுகள் போராடி, தற்போது இருவரும் இருவீட்டு சம்மதத்துடன் தம்பதிகள் ஆக உள்ளனர். இவர்களது திருமணம், வரும் 24-ம் தேதி மதுரையில் பப்பிஸ் ஹோட்டலில் தமிழ் கலாச்சார முறைப்படி நடைபெறுகிறது.
இந்தத் திருமணத்திற்காக சீனாவில் இருந்து லீயூஜியின் பெற்றோர், அவர்களது உறவினர்கள் விரைவில் மதுரை வரவுள்ளனர்.
கப்பலில் மலர்ந்த தன் காதல் வெற்றிபெற்றதைக் கொண்டாடும் வகையில், தனது திருமண அழைப்பிதழை டைட்டானிக் பட ஸ்டில் பாணியில் வடிவமைத்துள்ளார் பார்த்திபன். அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், அதன் மூலம் தனது சமூகவலைதள நண்பர்களுக்கும் திருமண அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது அழைப்பைப் பார்த்த மகிழ்ச்சியில் அவரது பேஸ்புக் நண்பர்கள் பார்த்திபன் -லியூஜி ஜோடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதோடு, பார்த்திபனின் வித்தியாசமான ‘டைட்டானிக்' திருமண அழைப்பிதழும் இணையதளத்தில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications