தலைமைச் செயலகம் முன் வாலிபர் தீக்குளிப்பு: மருத்துவமனையில் அனுமதி
சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலகத்தின் முன்பு வாலிபர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தமிழக அரசின் தலைமை செயலகம் செயல்பட்டு வருகிறது. தலைமைச் செயலகத்திலிருந்து வெளியே வரும் வாசல் அருகே பேருந்து நிறுத்தம் உள்ளது.
இந்நிலையில், இன்று மதியம் சுமார் 12.30 மணியளவில் இந்த பேருந்து நிறுத்தத்தின் அருகில் நின்று கொண்டிருந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், தனது உடலில் திடீரென மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
அவரது உடம்பில் தீ எரியத் தொடங்கவே வேதனை தாங்காமல் பேருந்து நிறுத்தத்தை நோக்கி ஓடினார். இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்களும், பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த வாலிபரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தலைமைச் செயலகம் முன்பு தீக்குளித்த அந்த வாலிபர் யார்? எதற்காக தீக்குளித்தார்? என்பது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் தினமான இன்று தலைமைச் செயலகத்தின் முன் வாலிபர் தீக்குளித்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications