அழகிரிக்கு ஒத்துவராத தினகரன் பாணி அரசியல்.. பேரணியிலேயே ஸ்டாலினுக்கு தூது!
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதி நோக்கி மு.க அழகிரி நடத்திய பேரணியில் ஸ்டாலினுக்கு மறைமுகமாக தூது அனுப்பப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதி நோக்கி மு.க அழகிரி நடத்திய பேரணியில் ஸ்டாலினுக்கு மறைமுகமாக தூது அனுப்பப்பட்டுள்ளது.
திமுகவில் தற்போது பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. கட்சிக்குள் அழகிரி என்ன பலத்தை கொண்டு இருக்கிறார் என்ற கிட்டத்தட்ட இன்றைய பேரணியில் தெரிந்துவிட்டது.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதியை மு.க அழகிரி தலைமையில் நோக்கி இன்று அமைதி பேரணி நடத்தினார். இன்று காலையே அவர் தொண்டர்களுடன் பேரணி சென்றார்.

மாஸ் காட்ட வேண்டும்
அழகிரி இந்த பேரணியை நடத்த காரணம் ஒன்றே ஒன்றுதான். தனக்கு அரசியலில் இன்னும் பழைய செல்வாக்கு இருக்கிறது என்பதை திமுகவினருக்கு உணர்த்தவே இந்த பேரணியை நடத்த திட்டமிட்டார். சென்னையில் இந்த பேரணியை நடத்தும் போது, அது தமிழகம் முழுக்க தலைப்பு செய்தியாக மாறும் என்று நம்பினார். ஆதரவாளர்களுடன் செய்த ஆலோசனையில் கூட ''சென்னையில் எப்படியாவது மாஸ் காட்ட வேண்டும்'' என்று கூறி இருக்கிறார்.

தினகரன் பாணி அரசியல்
சரியாக சொல்ல வேண்டும் என்றால், டிடிவி தினகரன் பாணி அரசியலைதான் அழகிரி கையில் எடுத்து இருக்கிறார் என்று கூறவேண்டும். டிடிவி மதுரையில் நடத்திய கூட்டம்தான் மிக முக்கியமான அவரது அரசியல் கூட்டம் ஆகும். அதற்கு வந்த கூட்டத்தை பார்த்து ஆளும் அதிமுக தரப்பு அதிர்ந்தது, அது ஆர்கே நகரிலும் எதிரொலித்தது. அதேபோல் திமுகவில் ஒரு அதிர்வை சென்னை பேரணி மூலம் ஏற்படுத்தலாம் என்று அழகிரி நினைக்கிறார்.

பெரிய கோபத்தில் உள்ளார்
அதேபோல், கடைசி நொடி அழகிரி திமுக தரப்பிற்கு முடிந்த அளவில் தூது அனுப்பி பார்த்தார். ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்கிறேன் என்று கூட இறங்கி வந்தார். ஆனால் அழகிரி வீசிய எந்த வலையிலும் ஸ்டாலின் அல்ல, திமுகவின் முக்கிய உறுப்பினர்கள் யாரும் விழவில்லை. இதனால் அழகிரி தற்போது உண்மையாகவே பெரிய டென்ஷனில் உள்ளார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.

சரியாக நடக்கவில்லை
ஆனால் இது எதுவுமே இன்றைய பேரணியில் சரியாக நடக்கவில்லை. கூட்டமும் பெரிய அளவில் கூடவில்லை. அழகிரியும் அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. ஆனால் அழகிரி சென்ற வாகனத்தில் இருந்த பிளக்ஸ் மட்டும் ஸ்டாலினுக்கு தூது ஒன்று அனுப்பியது. அதில் ''கரங்கள் காப்போம், கழகம் காப்போம்'' என்று எழுதி இருந்தது. இதன் மூலம் மீண்டும் அழகிரி ஸ்டாலினுக்கு தூது அனுப்பி உள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications