சூடான விவாதம் ஒருபக்கம்.. சுடச்சுட பிரியாணி மறுபக்கம்.. களை கட்டிய மதிமுக கூட்டம்
சென்னை: பாஜக கூட்டணியை முடித்துக் கொள்ளும் முடிவை எடுத்த மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கும் மாவட்ட செயலாளர்களுக்கும் மதிய உணவாக பிரியாணி விருந்தளிக்கப்பட்டது.
மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் சென்னையில் உள்ள தாயகத்தில் இன்று நடைபெற்றது. அவைத்தலைவர் துரைசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றனர். உயர்நிலைக்குழு கூட்டத்துக்குப் பின்னர் மாவட்ட செயலர்கள் கூட்டம் நடைபெற்றது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டதால் பலத்த எதிர்பார்ப்பு நிலவியது.

இதனால் மாநிலம் முழுவதிலும் இருந்தும் நூற்றுக்கணக்கான மதிமுகவினர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். பிற்பகலுக்கு முன்பே பாஜக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவது பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுபற்றிய அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

இதனால் கூட்டணியில் நெருடலுடன் நீடித்து வந்த மதிமுகவினர் உற்சாகமடைந்தனர். கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் மதிய விருந்தாக பிரியாணி பரிமாறப்பட்டது. பாஜகவை உதறிய கையை, நன்றாக கழுவி விட்டு பிரியாணியை ஒரு பிடி பிடித்தனர் மதிமுகவினர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய அறிவிப்பு வெளியான மகிழ்ச்சியுடன் பிரியாணியையும் சேர்த்து உற்சாகமாக சுவைத்து சாப்பிட்டனர் மதிமுகவினர்.












Click it and Unblock the Notifications