தொகுதி ஒதுக்கீடு அறிவிப்புக்கு எதிராக மதிமுகவில் கலகக்குரல்: கிருஷ்ணகிரி மா.செ.மாதையன் ராஜினாமா !
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்படாததால் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் மாதையன் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
சட்டசபை தேர்தலை மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கத்துடன் சந்திப்போம் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைகோ அறிவித்ததார். இந்த அறிவிப்பு அந்த கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து மதிமுகவின் மாநில பொருளாளராக இருந்த மாசிலா மணி, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜோயல், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் பாலவாக்கம் சோமு, சேலம் மாவட்டச் செயலாளர் கு.சீ.வெ. தாமரைக் கண்ணன், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சரவணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகினர்.
இருப்பினும் மதிமுக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், தமாகா ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் சட்டசபை தேர்தலை சந்திக்க தயார் ஆகி கூட்டணியும் உருவானது.
அதன்படி மக்கள் நலக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக 29 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் 25 தொகுதிகளிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 25 தொகுதிகளிலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 26 தொகுதிகளில் போட்டியிடுவதாக உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து வேட்பாளர் பட்டியலும் இன்று வெளியிடப்பட்டன.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் மாதையன் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ம.தி.மு.க.,வுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை என்ற காரணத்தால், மாவட்ட செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்தார். மேலும் கிருஷ்ணகிரியில் 2 தொகுதிகள் தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டதற்கு காரணம் என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications