மதுவிலக்கை அமல்படுத்தாவிட்டால் மாபெரும் போராட்டம்... மதிமுக திருப்பூர் மாநாட்டில் தீர்மானம்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: குடிப்பழக்கத்திற்கு அடிமையானோர் உடல் நலன் கெட்டு, வாழ்நாள் நோயாளிகளாக மாறி வரும் அவலம் தொடர் நிகழ்வுகளாகி விட்டன. எனவே தமிழக அரசு, தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்திட வேண்டும் என மறுமலர்ச்சி தி.மு.க. திருப்பூர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருப்பூருக்கு வந்து பணி ஆற்றுகின்ற தொழிலாளர்கள், அடிப்படைச் சுகாதார வசதி அற்ற குறைந்த பரப்புள்ள குடியிருப்புகளில், அதிக வாடகை கொடுத்து வசிக்கின்றார்கள். அத்தகைய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டித் தர வேண்டும் என்றும் மதிமுக வலியுறுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள பெரும்பாளி என்ற இடத்தில் மதிமுக சார்பில் அண்ணா 107வது பிறந்த நாள் விழா மாநாடு மற்றும் திராவிட இயக்க நூற்றாண்டு விழா இன்று காலை துவங்கியது. மாநாட்டுக்காக சுமார் 150 ஏக்கரில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு திருப்பூர் மாவட்ட மதிமுக செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிட இயக்க நூற்றாண்டு புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார். மதுவிலக்கு பிரசார படக்கண்காட்சி, ஈழ வரலாறு புகைப்பட கண்காட்சி ஆகியவற்றையும் திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக மலேசிய நாட்டின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டனர். வைகோ பொதுவாழ்வு வண்ணப்பட தொகுப்பு மலரை மலேசிய துணை முதல்வர் ராமசாமி வெளியிட்டார். இதை, கவிஞர் காசி ஆனந்தன் பெற்றுக்கொண்டார்.

MDMK urges liquor prohibition in Tamil Nadu

மாநாட்டில் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை:

1928 இல் நீதிக் கட்சி ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற சுப்புராயன் அமைச்சரவை, வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்கிற இட ஒதுக்கீடு ஆணையைப் பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து சமூக நீதிக் கொள்கை வளர்ச்சி பெற்று, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடி சமூகங்களுக்கு 69 விழுக்காடு இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் கடந்த 22 ஆண்டுகளாக வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, மொத்த இட ஒதுக்கீடு 50 விழுக்காட்டுக்கு மேல் போகக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அவ்வப்போது உத்தரவிட்டு வலியுறுத்துகிறது.

மண்டல் குழு பரிந்துரைகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளில், 16.11.1992 இல் உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில், ‘மொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டிற்கு மேல் போகக்கூடாது' என்று ஆணை பிறப்பித்தது. இதனால் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த 69 விழுக்காடு இட ஒதுக்கீடு முறைக்குச் சிக்கல் எழுந்தது. அப்போதைய அ.தி.மு.க. அரசு, 1993 இல் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வழிகாட்டுதலின்படி ஒரு சட்ட முன்வடிவைத் தமிழகச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது.

31.12.1993 இல் தமிழகச் சட்டமன்றத்தில் இச்சட்ட முன்வடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது. பின்னர் இச்சட்டம் அரசியல் அமைப்புச் சட்டம் 31(சி) பிரிவின் கீழ் பாதுகாப்பு பெறும் பொருட்டு, 1994 இல் அரசியல் சட்டத்தின் 76 ஆவது திருத்தம் மூலம் 9 ஆவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது. இதன் மூலம் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வழி செய்யும் வகையில் தமிழக அரசின் சட்டம், உச்சநீதிமன்றத்தின் விசாரணை வரம்புக்கு அப்பாற்பட்டதாக சட்டப்படி உறுதி செய்யப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகும் உச்ச நீதிமன்றம் மொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டிற்கு மேல் போகக்கூடாது என்று உத்தரவிடுவதால், இட ஒதுக்கீட்டு அளவை மாநிலங்களே தீர்மானித்துக் கொள்ள வகை செய்யும் வகையில் உரிய அரசியல் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து சமூக நீதி உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

MDMK urges liquor prohibition in Tamil Nadu

லோக் ஆயுக்தா

இந்தியாவில் புரையோடிப் போயிருக்கின்ற இமாலய ஊழல்களால் ஜனநாயக நெறிமுறைகளின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கின்ற நிலைமை ஏற்பட்டு வருகிறது. பொதுவாழ்வில் ஈடுபடுவோர் மக்கள் நலனுக்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த தியாக சீலர்களாக மதித்துப் போற்றப்பட்ட காலம் மாறி, இன்று பதவிக்கு வருகின்றவர்கள் ஊழல் குற்றவாளிகளாக நீதிமன்றங்களால் தண்டிக்கப்படுகின்ற நிலைமை உருவாகி இருக்கின்றது. இதனைக் கருத்தில் கொண்டுதான் மத்திய அரசு லோக்பால் சட்டத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றியது. இச்சட்டத்தின் வழிகாட்டு முறைகளைப் பின்பற்றிச் சில மாநிலங்கள் ‘லோக் ஆயுக்தா' சட்டத்தை நிறைவேற்றி நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளன. ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை உறுதி செய்திட, தமிழக அரசு ‘லோக் ஆயுக்தா' சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

மதுவிலக்கு அமல்படுத்துக

தமிழகத்தின் பழமை வாய்ந்த பண்பாட்டுப் பெருமைகள் சீரழிந்து வருவதும், பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதும், சின்னஞ் சிறிய பிஞ்சுகள் கூடக் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி எதிர்காலம் பாழாவதும் மிகுந்த கவலை தருகிறது. தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கையின்படி 2014 இல் நடைபெற்ற சாலை விபத்துகளில் நாட்டிலேயே தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறது. அதற்குக் காரணம் குடிப்பழக்கம்தான் என்பதும் அதிர்ச்சி தருகிறது. குடிப்பழக்கத்திற்கு அடிமையானோர் உடல் நலன் கெட்டு, வாழ்நாள் நோயாளிகளாக மாறி வரும் அவலம் தொடர் நிகழ்வுகளாகி விட்டன. எனவே தமிழக அரசு, தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்திடக் கோரி மறுமலர்ச்சி தி.மு.க. மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தும் என்று இந்த மாநாடு அறிவிக்கிறது.

MDMK urges liquor prohibition in Tamil Nadu

நிலம் கையகப்படுத்தும் சட்டம்

நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பு ஏற்றவுடன், பிரதமர் அறிவித்த ‘இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தைச் செயல்படுத்த நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது. விவசாயிகளிடம் இருந்து நிலங்களைப் பறித்துப் பெரு முதலாளித்துவ நிறுவனங்களிடம் தாரை வார்த்துக் கொடுக்கும் மோடி அரசின் நிலப்பறிப்புச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் கொந்தளித்துப் போராட்டத்தில் இறங்கினர். மூன்று முறை அவசரச் சட்டமாகக் கொண்டு வரப்பட்டும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாமல் போனது. மக்கள் எதிர்ப்பால் பின்வாங்கியுள்ள மோடி அரசு, இச்சட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவின் முதுகெலும்பு என்று கூறப்படும் வேளாண்மைத் தொழில் அழிந்து விடாமல் பாதுகாக்கும் கடமை மத்திய -மாநில அரசுகளுக்கு இருப்பதை உணர்ந்து, நிலம் கையப்படுத்துதல் சட்டத்தை மத்திய அரசு நிரந்தரமாக்க கைவிட வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

விவசாயிகள் தற்கொலை

தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், கடந்த 2014 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 5650 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாகவும், அவர்களில் தமிழ்நாட்டில் மட்டும் 68 விவசாயிகள் மற்றும் 827 விவசாயத் தொழிலாளர்கள் எனறு தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சி தருகிறது.

விவசாய விளைபொருட்களுக்குக் கட்டுப்படியான விலையின்மை, விவசாயிகள் வாங்கும் இடுபொருட்களின் விலை பன்மடங்கு உயர்வு, எளிதில் கடன் பெற முடியாத காரணத்தால் அதிக வட்டிக்குக் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்திட இயலாமை, இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றனர்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல மத்திய அரசு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கைகளில், இதுவரை 7 விழுக்காடு வட்டியில் அளிக்கப்பட்டு வந்த வேளாண் கடனை இனி 11 விழுக்காடு வட்டியில் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது கண்டிக்கத்தக்கது ஆகும். விவசாயத் தொழிலில் உள்ள நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு, வேளாண் கடனுக்கான வட்டி விகிதத்தை 4 விழுக்காடு என்று நிர்ணயம் செய்ய வேண்டும் என்று இந்த மாநாடு மத்திய அரசை வற்புறுத்துகிறது.

சந்தை வாய்ப்பு

விவசாய விளைபொருட்களான நெல், கரும்பு, மஞ்சள், மரவள்ளி ஆகிய பயிர்களுக்கு தேசிய வேளாண் ஆணையப் பரிந்துரையின்படி உற்பத்திச் செலவை விடக் கூடுதலாக 50 விழுக்காடு விலையை உயர்த்தி வழங்க வேண்டும்; சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதிக் கொள்கையினை விவசாயிகளுக்கு நீண்ட காலம் பயன் அளிக்கும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்; நீர்ப்பாசனத் திட்டங்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதுடன், நீர் மேலாண்மைத் திட்டங்களைச் செம்மையாகச் செயல்படுத்திட சொட்டு நீர்ப் பாசனத்திற்கு ஆகும் அதிகச் செலவினங்களைக் கருத்தில் கொண்டு, 50 விழுக்காடு அளவுக்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்; தோட்டக்கலை சாகுபடியை ஊக்கப்படுத்த சந்தை வாய்ப்பு, குளிரூட்டும் மையங்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநாடு வலியுறுத்துகிறது.

MDMK urges liquor prohibition in Tamil Nadu

காவிரியின் குறுக்கே அணை

காவிரியில் ஆகஸ்டு மாதம் வரை திறந்து விட வேண்டிய நீரில் 27.6 டி.எம்.சி. குறைந்து விட்டதால், அந்த அளவுக்குக் காவிரியில் நீரைத் திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு கோரியதை கர்நாடக அரசு ஏற்க மறுத்து விட்டது. ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக மாநிலம் காவிரியில் தண்ணீர் திறந்து விடாமல், தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் போக்கு தொடருகிறது. இதற்கு முடிவு கட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழுவை அமைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டு; காவிரியின் குறுக்கே மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்களில் தடுப்பு அணைகள் கட்டும் கர்நாடக அரசின் வஞ்சகத் திட்டத்திற்கு மத்தியஅரசு துணை போகக் கூடாது என்று இந்த மாநாடு வற்புறுத்துகிறது.

ஆறுகளில் கழிவு நீர்

தமிழ்நாட்டில் உள்ள எந்த ஆறுகளிலும் கழிவுகள் கலப்பது இல்லை என்று தமிழகச் சட்டமன்றத்தில் சுற்றுச் சூழல் அமைச்சர் கூறியிருப்பதற்கு இந்த மாநாடு கடும் கண்டனம் தெரிவிக்கின்றது. கொங்கு மண்டலத்தில் பவானி ஆற்றிலும், காவிரி, நொய்யல் ஆறுகளிலும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றிலும் ஆலைக் கழிவுகள் கலந்து நதி நீர் பயன்படுத்த முடியாத அளவுக்கு நஞ்சாகி வருகின்றது. விவசாயத்திற்கும், மக்கள் குடிநீருக்கும் பயன்பட்டு வந்த ஆற்று நீர் பாழாகி வருவதைத் தமிழக அரசு மூடி மறைக்க வேண்டிய தேவை இல்லை. ஆலைக் கழிவுகளும், நகரக் கழிவுகளும் நதிகளில் கலப்பதைக் கண்காணித்து, தமிழக அரசு சுற்றுச் சூழல் துறையின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம்: 9

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் முதல் முறையாக சென்னையில் நடத்தியதாகத் தமிழக அரசு விளம்பரம் செய்கிறது. இந்த மாநாட்டின் மூலம் ரூபாய் 2 இலட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி அளவுக்கு முதலீடு கிடைப்பது உறுதியானதாக முதலமைச்சர் கூறி இருக்கின்றார். தமிழக அரசின் பாராமுகம், அலட்சியத்தின் காரணமாகத் சிறு குறு தொழில் முனைவோர் தங்கள் தொழிற்சாலைகளை மூடிவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்தனர். தொழில் நெருக்கடியால் இங்கு வந்த கொள்முதல் ஆணைகள் கோவையைத் தவிர்த்து கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்குச் சென்று விட்டன.

எனவே, தமிழக அரசு பெருந்தொழில் முதலீட்டாளர்களிடம் போடப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 30 விழுக்காடு கொள்முதல் ஆணைகளை, சிறு குறு தொழிலுக்கு ஒதுக்கிட வழிவகை காண வேண்டும் என்றும், சிறு குறு தொழில் முனைவோரின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவற்றைக் காப்பாற்ற முன்வர வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்

இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், மீனவர்களின் படகுகள் மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உடைமைகளைப் பறித்துச் செல்வதும் தொடர் அட்டூழியங்களாக நீடிக்கின்றன. கடந்த இருபது ஆண்டுகளில் 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்திய அரசு, தமிழக மீனவர்கள் மீது அக்கறை இன்றி, இலங்கை அரசுக்கு ஆதரவாகச் செயல்படும் போக்கு பா.ஜ.க. அரசிலும் தொடருகிறது.

கச்சத்தீவை மீட்க வேண்டும்

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்தால் சுட்டுக் கொல்வோம் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்த இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்தை மத்திய அரசு கண்டிக்கவில்லை. இந்நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி கச்சத் தீவு மற்றும் நெடுந்தீவு, கட்டைக் காடு கடற் பரப்புகளில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ‘தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களிடம் பறிமுதல் செய்யப்படும் படகுகளை விடுவிக்க மாட்டோம்' என்று இலங்கைக் கடற்தொழில் வளர்ச்சி அமைச்சர் மகிந்த அமரவீர கூறி உள்ளதற்கு மோடி அரசின் நடவடிக்கைகளே காரணம். தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்ட இந்திய அரசு இலங்கையுடன் செய்துகொண்ட கச்சத் தீவு ஒப்பந்தத்தை பெற்றுக் கொண்டு கச்சத் தீவை மீட்க வேண்டும் என்று மாநாடு வலியுறுத்துகிறது.

இந்தி திண்பை கைவிடுக

மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பு ஏற்ற நாள் முதல் இந்தி மொழித் திணிப்பை ஒரு கொள்கையாகவே செயல்படுத்தி வருகிறது. இந்துத்துவத்தின் அடையாளமாக சமÞகிருத மொழியை வலிந்து பரப்புவதற்குத் திட்டங்களைச் செயல்படுத்துவதும், இந்தி மொழிக்கு மட்டும் உயரிய சிறப்பை வழங்கிட முயற்சிப்பதும் இந்தியாவின் பன்முகத்தன்மைக்குக் கேடு விளைவிக்கும் என்பதை பா.ஜ.க. அரசு உணர வேண்டும்.

MDMK urges liquor prohibition in Tamil Nadu

ஐ.நா. மன்றத்தின் அலுவல் மொழியாக ஆகிடும் தகுதி, தொன்மையும் சிறப்பும் கொண்ட உயர்தனிச் செம்மொழியான தமிழ் மொழிக்குத்தான் இருக்கின்றது. இந்திய அரசியல் சட்டத்தின் 8 ஆவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் சம வாய்ப்பு, சம உரிமை வழங்க வேண்டும். இல்லையெனில் இந்தியாவின் ஒருமைப்பாடு, வினாக்குறியாகி விடும் என்று மாநாடு எச்சரிக்கிறது.

மரண தண்டனை ரத்து

இந்தியாவில் மரண தண்டனை தொடர்பாக ஆய்வு செய்திட உச்ச நீதிமன்றம் நியமித்த நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான சட்ட ஆணையம், பயங்கரவாதம் மற்றும் தேசத்துரோகம் அல்லாத பிற குற்றங்களுக்கு மரண தண்டனை கூடாது என்று பரிந்துரைத்து இருப்பது வரவேற்கத்தக்கது ஆகும். ஐ.நா. மன்றத்தின் 195 உறுப்பு நாடுகளில், 136 நாடுகள் மரண தண்டனையை ஒழித்துள்ளன. ஆனால், இந்தியா உள்ளிட்ட 59 நாடுகளில் மரண தண்டனை நடைமுறையில் உள்ளது.

"கொலைக் குற்றங்களைச் செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்குவதை விடுத்து வாழ்நாள் முழுவதும் சிறையில்அடைக்கும் தண்டனையை வழங்கலாம். தூக்கு தண்டனை குற்றங்களை குறைக்காது" என்று சட்ட ஆணையம் வழங்கி உள்ள பரிந்துரையை ஏற்று, மத்திய அரசு மரண தண்டனையை ரத்து செல்வதற்கான சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது. சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்வதுடன், 23 ஆண்டுகளாக வேலூர் சிறையில் தண்டனை அனுபவிக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு பேரையும் மத்திய அரசு விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

வைகோவிற்கு பாராட்டு

தமிழ்நாட்டில் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் தொடர்ந்து போராடி வருகின்றார். தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்கும் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை அகற்ற உச்ச நீதிமன்றம் வரை சென்று கழகப் பொதுச்செயலாளர் வைகோ வாதாடினார்.

தமிழகம் முழுவதும் நீர்நிலைகள், ஏரிகள், குளங்களில் கருவேல மரங்கள் வளர்ந்து தண்ணீர் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளையில் பொதுநல வழக்குத் தொடுத்து அவற்றை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுச்செயலாளர் வைகோ மனு தாக்கல் செய்துள்ளார். தமிழ் நாட்டின் வாழ்வாதாரங்களைக் காக்கவும், சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும் தொடர்ந்து போராட்டக் களத்திலும், நீதிமன்றங்களிலும் அயராது கழகப் பொதுச்செயலாளர் வைகோ போராடி வருவதால், மக்கள் மன்றம் மறுமலர்ச்சி தி.மு.க.வை வாழ்த்தி வரவேற்கிறது. இதற்காகக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு இம்மாநாடு பாராட்டையும், நன்றியையும் தெரிவிக்கிறது.

நேதாஜி மரண ரகசியம்

நேதாஜி பற்றிய உண்மை விபரங்களை வெளியிட வேண்டும் என்று நாட்டு மக்கள் வைத்த கோரிக்கையை மத்திய காங்கிரஸ் அரசு நேரு காலத்திலிருந்தே கண்டுகொள்ளவில்லை. நேதாஜி குறித்து மறைக்கப்பட்ட உண்மை ஆவணங்களை வெளியிடக்கோரி கழகத்தின் சார்பில் சென்னையில் 2014 டிசம்பர் 23 ஆம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களின் பிரதிநிதியாக முனைவர் பார்த்தா சட்டர்ஜி பங்கேற்றார். தற்போது மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி மாநில உள்துறை வசம் உள்ள நேதாஜி பற்றி 64 ரகசிய ஆவணங்களை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார். மம்தா பானர்ஜியின் அறிவிப்பை கழகத்தின் இம்மாநாடு பாராட்டி வரவேற்பதுடன், மத்திய அரசும் நேதாஜி பற்றிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

விசைத்தறி தொழிலாளர்கள்

இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்த இடத்தை நெசவுத் தொழில் வகிக்கின்றது. இந்தியா முழுமையும் 20 இலட்சம் விசைத்தறிகள் உள்ளன. 8 இலட்சம் விசைத்தறிகளுடன் மராட்டிய மாநிலம் முதல் இடமும், 5 இலட்சம் விசைத்தறிகளுடன் தமிழகம் இரண்டாம் இடமும் வகிக்கின்றன. திருப்பூர், கோவை மாவட்டங்களில் மட்டும் 2 இலட்சம் விசைத்தறிகள் இயங்குகின்றன. 1996, 2008 ஆண்டுகளில் ஏற்பட்டது போல், விசைத்தறித் தொழில் தற்போது பலத்த நெருக்கடியில் உள்ளது. இந்த நெருக்கடியில் இருந்து விசைத்தறித் தொழிலை மீட்பதற்கு கீழ்காணும் நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டுமென மத்திய மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுக் கொள்கின்றது.

இலவச மின்சாரம்

ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கும் இடையில், குறிப்பிட்ட கால இடைவெளியில் கூலி ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடக்கிறது. அதில் ஏற்பட்ட உடன்படிக்கையை ஜவுளி உற்பத்தியாளர்கள் தொடர்ந்து கடைப்பிடிப்பது இல்லை. இதனால் தொழில் நெருக்கடிகள் ஏற்படுகின்றன. எனவே, ஒப்பந்தக் கூலி அமுல்படுத்துவதைச் சட்டமாக்க வேண்டும். கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உற்பத்தியாகக் கூடிய பல லட்சம் மீட்டர் காடா துணியை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்வதற்கு/ பல்லடத்தை மையமாக வைத்து முழுமையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஜவுளிச் சந்தை அமைக்க வேண்டும்; விசைத்தறிகளுக்குப் பயன்படுத்தக்கூடிய நூல் மற்றும் பஞ்சுக்கு விதிக்கப்படும் 5 விழுக்காடு விற்பனை வரியை 2 விழுக்காடாகக் குறைக்க வேண்டும்; விசைத்தறித் தொழிலாளர்களுக்கு 100 விழுக்காடு மானியத்தில் வீட்டு வசதி செய்து கொடுக்க வேண்டும்;

நூற்பு ஆலைகள்

இந்தியாவில் உள்ள நூற்பு ஆலைகளுள் 25 விழுக்காடு தமிழகத்தில் உள்ளது. மத்திய அரசின் ஜவுளிக் கொள்கை காரணமாக, நூற்பு ஆலைகள் நலிவு அடைந்து வருகின்றன. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றார்கள். எனவே நூற்பு ஆலைகள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கின்றன. எனவே, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் மூலம் குறைந்த வட்டியில் கடன் உதவி மற்றும் மின் கட்டணத்தில் மானிய உதவி மற்றும் தடையில்லா மின்சாரம் வழங்கி நூற்பு ஆலைத் தொழிலுக்குப் புத்துயிர் அளித்திட வேண்டும் என மத்திய - மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

தொழிலாளர்களுக்கு குடியிறுப்புகள்

திருப்பூர் மாவட்டத்தில் பனியன் சார்ந்த தொழில்களில் பல இலட்சம் ஆண்-பெண் தொழிலாளர்கள் பணிபுரிகின்றார்கள். ஆண்டுக்கு 20,000 கோடி ரூபாய்க்கு மேல் ஏற்றுமதி செய்வதால், அந்நியச் செலாவணி பெருமளவில் கிடைத்து வருகின்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருப்பூருக்கு வந்து பணி ஆற்றுகின்ற தொழிலாளர்கள், அடிப்படைச் சுகாதார வசதி அற்ற குறைந்த பரப்புள்ள குடியிருப்புகளில், அதிக வாடகை கொடுத்து வசிக்கின்றார்கள். அத்தகைய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டித் தர வேண்டும் என்றும் ; 2005 ஆம் ஆண்டு மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் பங்கேற்ற மத்தியத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்திரசேகர் ராவ் அவர்கள் அறிவித்தபடி 100 படுக்கைகள் கொண்ட இ.எÞ.ஐ. மருத்துவமனை கட்டித்தர வேண்டும் என்றும் மத்திய-மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+