For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆவின் பால் ‘மெகா’ ஊழல்: சிபிஐ விசாரிக்க தமிழக அரசு ஒப்புக் கொள்ளுமா?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தை உலுக்கிய ஆவின் பால் கலப்பட விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த வழக்கை தமிழக காவல்துறையினர் நடத்தினால் தவறு செய்தவர்கள் தப்பி விடும் வாய்ப்பு உள்ளது. எனவே இதை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த விவகாரம் கடந்த செப்டம்பர் மாதம் அம்பலத்திற்கு வந்து அனைவரையும் அதிர வைத்தது. தமிழகத்தில் தனியார் பாலை நம்புவதை விட மக்கள் அதிகம் நம்புவது ஆவின் பாலைத்தான். அதுதான் சுத்தமானது, கலப்படம் இல்லாதது, எளிதில் கெட்டுப் போகாதது என்று மக்கள் நம்பிக்கையுடன் வாங்குகின்றனர். குழந்தைகளுக்கும் கூட ஆவின் பால்தான் வயிற்றைக் கெடுக்காத பாலும் கூட. கிட்டத்தட்ட தாய்ப்பாலுக்கு அடுத்த இடத்தில் ஆவின் பால் உள்ளது. சில மருத்துவர்கள் கூட மாட்டுப் பாலுக்குப் பதில் ஆவின் பாலையே குழந்தைகளுக்கு பரிந்துரை செய்கின்றனர்.

Milk agents wants CBI probe in Aavin scam

ஆனால் இந்த ஆவின் பாலில் கலப்படம் செய்து அட்டகாசம் செய்துள்ளனர் இந்த கலப்படக் கும்பலைச் சேர்ந்தவர்கள். செப்டம்பர் மாதம்தான் இவர்களின் திருட்டுத்தனம் வெளியே தெரிய வந்தது.

இந்த மோசடியின் முக்கிய புள்ளி சென்னையைச் சேர்ந்த காண்டிராக்டர் வைத்தியநாதன்தான். அதிமுகவைச் சேர்ந்த இவர் முதலில் ஆவின் பாலை வாங்கி சில்லறையில் விற்று வந்தார். பின்னர் அதிகாரிகள், ஊழியர்களை கையில் போட்டுக் கொண்டு ஆவின் நிறுவனத்தையே கட்டுப்படுத்தும் நிலைக்கு உயர்ந்தார். சைக்கிளில் சுற்றித் திரிந்த இவர் 2 டேங்கர் லாரிகள் வாங்கி ஆவின் பாலை சப்ளை செய்யும் நிலைக்கு உயர்ந்தார். இதையடுத்து அமைச்சர்களே வளைக்கும் நிலைக்கு வந்த இவரிடம் இப்போது 104 டேங்கர் லாரிகள் உள்ளன.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குளிரூட்டப்பட்ட லாரி டேங்கர்களில் கொண்டு வரப்படும் பாலில் ஒரு பகுதியை திருடுவது, அதற்கு பதில் தண்ணீரைக் கலப்பது, அது தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக பாலை கெட்டியாகக் காட்டும் சில மாவு வகைகளைக் கலப்பது, பாலை திருடுவதற்காக டேங்கரின் சீல்களைத் திறப்பதால் பாலின் குளிர் அளவு குறைந்து அது கெட்டுவிடும், இதைத் தவிர்க்க சில கெமிக்கல்களைக் கலப்பது, பின்னர் திருடிய பாலை தனியார் நிறுவனங்களுக்கு விற்பது.. இது தான் இந்த ஊழலில் கரு. இதை முன்னின்று நடத்திய நபர் தான் வைத்தியநாதன். இதனால் தான் சைக்கிளில் திரிந்த நபருக்கு 104 ஏசி டேங்கர் லாரிகள் சொந்தமாகின.

இந்த ஊழலைத் தடுக்கவே ஆவின் நிறுவனத்தில் கண்காணிப்புப் பிரிவு உள்ளது. இவர்களும் வைத்தியநாதனின் எடுபிடிகளாகி எல்லோரும் சேர்ந்து கொள்ளையடித்துள்ளனர். ஒரு கட்டத்தில் வைத்தியநாதன் வைத்ததே ஆவினில் சட்டம் என்ற நிலைமை வந்துவிட்டது. தனது நிறுவனத்தின் கண்காணிப்புப் பிரிவை நம்பி பயனில்லை என்ற முடிவுக்கு வந்த ஆவின் நிர்வாக இயக்குனரான ஐஏஎஸ் அதிகாரி, காவல்துறைக்கு தகவல் தந்து இந்தக் கும்பலை சமீபத்தில் மாட்ட வைத்தார்.

இந்த விவகாரத்தில் தான் பால்வளத்துறை அமைச்சர் மாதவரம் மூர்த்தியின் பதவியும் பறிபோனது. அதிமுகவைச் சேர்ந்த வைத்தியநாதனின் இந்த லீலைகளுக்கு அமைச்சராக இருந்த மூர்த்தியும் உதவியுள்ளார் என்கின்றனர் உள்விவரம் அறிந்தோர். வைத்தியநாதன் ஊழல் செய்ய மூர்த்தி சும்மாவா அனுமதித்திருப்பார்.. அதில் எவ்வளவு கைமாறியதோ. இந்த விவகாரத்தில் இதுவரை நடந்தது இதோ...

கலப்படம்... கைது

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஊரல் பகுதியில் வெள்ளிமேடு பேட்டை போலீசார் ரோந்து சென்றபோது சென்னைக்கு கொண்டு சென்ற ஆவின் டேங்கர் லாரியிலிருந்து பால் திருடப்பட்டு அதற்கு பதிலாக சிலர் தண்ணீர் கலப்படம் செய்வதை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டம் நாயுடுமங்கலம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் உள்பட 9 பேரை கைது செய்தனர்.

வைத்தியநாதன் கைது...

இதனையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களின் தீவிர விசாரணையில் சென்னையைச் சேர்ந்த காண்டிராக்டர் வைத்தியநாதன்தான் இந்தக் கும்பலின் தலைவர் என்று தெரிய வந்தது. இதையடுத்து செப்டம்பர் 20ம் தேதி வைத்தியநாதனை போலீஸார் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.

கூட்டாளிகள் கைது...

அவரிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பால்கோவா கம்பெனி உரிமையாளர்கள் சந்திரசேகர், சுதாகரன் ஆகியோரை கைது செய்தார்கள். அதைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் 4ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பால்பண்ணை மேலாளர் அர்ச்சுனன் கைது செய்யப்பட்டார்.

டேங்கர் லாரி டிரைவர்கள் கைது...

இதையடுத்து திருட்டுக்கு உடந்தையாக இருந்த வேலூர் மாவட்டம் திரு.வி.க. நகரை சேர்ந்த துரை (37), திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கொடவாய் கிராமத்தை சேர்ந்த காத்தவராயன் (42), ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியை சேர்ந்த சென்னியப்பன் (39) ஆகிய 3 டேங்கர் லாரி டிரைவர்களை கைது செய்தனர்.

சிபிசிஐடி விசாரணை...

இந்த வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.

திருட்டுத்தனம் நடப்பது எப்படி...

கைது செய்யப்பட்ட 16 பேரில் 11 பேர் லாரி டிரைவர்கள் ஆவர். இவர்கள் வைத்தியநாதனுக்கு சொந்தமான லாரிகளில் வேலை பார்த்து வருபவர்கள். சென்னைக்கு தினமும் ஆவின் டேங்கர் லாரியை ஓட்டிச்செல்லும்போது மேலிடத்தில் இருந்து வரும் தகவலையடுத்து லாரியை அவர்கள் பாதி வழியில் நிறுத்தி ஒவ்வொரு டேங்கர் லாரியிலிருந்தும் 20 சதவீதம் பாலை திருடி அதற்கு பதிலாக தண்ணீரை கலந்து சென்னைக்கு கொண்டு சென்று வந்துள்ளனர். இதுபோல பல ஆண்டுகளாக அக்கிரமம் செய்து வந்துள்ளனர்.

ஒப்பந்தம் ரத்து...

ஆவின் நிர்வாகத்துக்கு, பால் கூட்டுறவு ஒன்றியங்கள் ஒப்பந்த வாகனம் மூலம் பால் சப்ளை செய்து வருகிறது. இந்த ஒப்பந்தத்தில் பாலில் கலப்படம் செய்தல், பால் திருட்டு போன்ற நடவடிக்கைகளில் வாகனங்கள் ஈடுபட்டால், ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்படும்.

ஜெ. பேரவை செயலாளராக இருந்த வைத்தியநாதன்...

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், பால் கூட்டுறவு ஒன்றியங்களில் இருந்து ஆவின் நிர்வாகத்துக்கு பால் சப்ளை செய்வதற்கான ஒப்பந்தத்தை வைத்தியநாதன் பெற்றார். இவர், தென்சென்னை தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளராக இருந்தார். தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் தனது ஒப்பந்தத்தை புதுப்பித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான 104 டேங்கர் லாரிகள், கூட்டுறவு ஒன்றியங்களில் இயங்கி வந்துள்ளது.

பல கோடி லாபம்...

ஆவின் பால் கலப்படத் தொழில் மூலம் வைத்தியநாதன் பல கோடி அளவுக்கு பணம் பார்த்துள்ளதாக கூறுகிறார்கள். மேலிடத்தின் துணையுடன் இவர் தங்கு தடையின்றி இதைச் செய்து வந்துள்ளார். வைத்தியநாதனின் அக்கிரமச் செயல் வெளியாகி மாட்டிக் கொண்டதைத் தொடர்ந்து அவரை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கட்சியை விட்டு நீக்கி உத்தரவிட்டார் அவரைக் கைது செய்யவும் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்தே வைத்தியநாதனை போலீஸார் கைது செய்தனர்.

வைத்தியநாதனின் பரபரப்பு வாக்குமூலம்...

கைது செய்யப்பட்ட பின்னர் வைத்தியநாதன் அளித்த வாக்குமூலத்தில், முதலில் சிறிய அளவில் லாபம் பார்க்க வேண்டும் என்பதற்காக தான் பாலில் கலப்படம் செய்தேன். பின்னர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கிடைத்ததால் பெரிய அளவில் கலப்படம் செய்து கோடிக்கணக்கில் லாபம் பார்க்க ஆசைப்பட்டேன்.

தினசரி 3000 லிட்டர் பாலில் மோசடி...

அதன்படி, நாள்தோறும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் லிட்டர் பாலில் தண்ணீர் கலந்து மோசடி செய்தேன். கலப்படம் செய்து சம்பாதிக்கும் பணத்தில், சில முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு மாதந்தோறும் கமிஷன் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுத்தால் தான் தொடர்ந்து பாலில் கலப்படம் செய்ய முடியும்.

அரசியல்வாதிகள் துணையுடன்...

அரசியல்வாதிகள் முதல் பல முக்கிய உயர் அதிகாரிகள் வரை எனக்கு உறுதுணையாக இருந்ததால் தான் இவ்வளவு பெரிய மோசடி செய்ய முடிந்தது என்று கூறியுள்ளார் வைத்தியநாதன்.

சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை...

இந்நிலையில், இந்த ஆவின் பால் கலப்பட வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘லாரிகள் மூலம் ஆவின் நிறுவனத்துக்கு கொண்டு வரப்பட்ட பாலில் தண்ணீர் கலந்து, 10 ஆண்டுகளுக்கும் மேலாக மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உணவு கலப்பட தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வது பொருத்தமாக இருக்காது. மாறாக கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

எதிர்க்கட்சிக்கும் தொடர்பு...

பாலில் கலப்படம் செய்ததில் ஆளும் கட்சியினர் மட்டுமின்றி, எதிர்க்கட்சியினரும் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸ் விசாரித்தால் விசாரணை நியாயமாக இருக்காது. எனவே வழக்கு விசாரணையை மத்திய புலனாய்வு நிறுவனமான சிபிஐக்கு மாற்ற வேண்டும்' எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாலிதீன் கவர்...

மேலும், ஆவின் பாலை அடைக்கப் பயன்படுத்தப் படும் பாலீதின் கவர் 40 மைக்ரானுக்குப் பதில் 20 மைக்ரானாக இருப்பதாகவும், எனவே, கவர் தயாரிக்கும் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரவும் பால் முகவர்கள் நலச்சங்கம் முடிவு செய்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

English summary
The milk agents demanded a CBI probe in the Aavin milk adulteration scam, which is now handled by state CBCID police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X