நாக்கை மடித்து... விஜயகாந்த்தைத் தாக்கிப் பேசிய அமைச்சர்.. வெளியேறிய தேமுதிக எம்.எல்.ஏக்கள்
சென்னை: நாக்கை மடித்துப் பேசியவர்கள், போதையும் தெளியாது, நல்ல பாதையும் தெரியாது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து நேரடியாகவும், மறைமுகமாகவும் அமைச்சர் ஒருவர் சட்டசபையில் பேசியதால் கோபமடைந்த தேமுதிக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்புச் செய்து எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
தமிழக சட்டசபையில் நேற்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கையில் எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்த கருத்துகளுக்கு அமைச்சர் ந.சுப்பிரமணியன் பதிலளித்துப் பேசினார். அப்போது எதிர்க்கட்சி தே.மு.தி.க., தி.மு.க. ஆகிய கட்சிகளை கவிதை பாணியில் தாக்கிப் பேசினார்.

சுப்பிரமணியன் பேசுகையில், கூட்டணியில் யார் சேர்ந்தாலும் பரவாயில்லை, பதவிதான் வேண்டும் என்று ஏமாற்ற நினைத்தவருக்கு, மக்கள் கொடுத்தார்கள் மரண அடி.
எங்களால்தான் வெற்றி பெற்றீர்கள் என்று, இருமாப்பு பேசியவர்கள் எல்லாம், எழுந்திருக்க முடியாமல், இடுப்பொடிந்து போய்க் கிடக்கிறார்கள்.
அன்று நாக்கை மடித்து பேசியவர்கள், இன்று அம்மாவின் சாதனையைப் பார்த்து, வாலை சுருட்டிக்கொண்டார்கள். அவர்களுக்கு போதையும் தெளியாது, நல்ல பாதையும் தெரியாது என்றார்.

அமைச்சரின் பேச்சில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை மறைமுகமாக குத்திப் பேசியதை உணர்ந்த தேமுதிக எம்.எல்.ஏக்கள் மொத்தமாக வெளியேறிச் சென்றனர்.