தமிழக அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உறுதியாக எதிர்க்கும் - அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் ஏற்காது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியாக தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் போராட்டம் நடத்தி வரும் பொது மக்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். அப்போது தமிழக அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உறுதியாக எதிர்க்கும் எனத் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை எதிர்த்து 22வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நெடுவாசலை சுற்றியுள்ள கிராம மக்கள் அணியணியாக சென்று போராட்டத்தில் கலந்து கொண்டு ஹைட்ரோ கார்பனுக்கு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், விவசாய அமைப்பினரும், விவசாயிகள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் இந்தப் போராட்டத்தை ஆதரித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நெடுவாசலில் பெண்கள் ஒப்பாரி வைத்து அழுது போராட்டத்தில் ஈடுபட்டனர். வடகாட்டில் கும்மிப்பாட்டு, நாட்டுப்புறப் பாடல், கோலாட்டம் உள்ளிட்ட கலைகளோடு போராட்டம் நடைபெற்றது.
இதனிடையே மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து போராட்டக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் போராட்டக் குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
இந்தநிலையில் நெடுவாசலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொது மக்களை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று சந்தித்தார். அப்போது போராட்டக்குழுவினருடன் அவர் பேசுகையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சரை வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார். தமிழக அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உறுதியாக எதிர்க்கும் எனவும், போராட்டத்தை அமைதியாக நடத்தி வரும் பொதுமக்களுக்கு பாராட்டும் தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தையின் போது மாவட்ட ஆட்சியர் கணேஷ் உடனிருந்தார்.












Click it and Unblock the Notifications