கருணாநிதியை இன்று மீண்டும் சந்தித்து 1 மணிநேரம் பேசிய மு.க. அழகிரி

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு ஆதரவாகவும், திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராகவும் மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தேமுதிகவை திமுக தனது கூட்டணியில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று அழகிரி தெரிவித்தார்.
கூட்டணி குறித்த அழகிரியின் கருத்துக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று தெரிவித்த கருணாநிதி கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து ஒட்டுமொத்த மதுரை மாநகர் மாவட்ட திமுக அமைப்பையே கலைத்து பொறுப்புக் குழுவை நியமித்தது கட்சி தலைமை. இந்த சூழலில் கடந்த 11ம் தேதி சென்னை கோபாலபுரத்திற்கு சென்ற அழகிரி கருணாநிதியை சந்தித்து நீக்கப்பட்டவர்கள் தனது ஆதரவாளர்கள் இல்லை என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று காலை 9.40 மணிக்கு அழகிரி கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டுக்கு வந்தார். அவர் கருணாநிதியை சந்தித்து சுமார் 1 மணிநேரம் பேசினார். இருவரும் தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி பேசினார்கள் என்று கூறப்படுகிறது.
அழகிரி வெளிநாடு செல்கிறார் என்பதால் அதற்கு முன்பு கருணாநிதியை சந்தித்து பேசியதாக திமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications