For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரையை தடுத்து நிறுத்த வேண்டும்- ஸ்டாலின்

விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவு திரட்டுவதற்காக விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவில் கூறியிருப்பதாவது:

MK Stalin demands to ban the Rath Yatra conducted by Viswa Hindu Parishad

"ராம் ராஜ்ய யாத்திரை" என்ற பெயரில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவு திரட்டுகிறோம் என்ற போர்வையில் தமிழ்நாட்டிற்குள் யாத்திரை நடத்துவதற்கும், அந்த யாத்திரை நடத்துவதற்கு அனுமதித்துள்ள அதிமுக அரசுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மத்தியில் பா.ஜ.க ஆட்சி இருப்பதையும், தமிழகத்தில் அவர்களின் எடுபிடியாக அதிமுக அரசு நடப்பதையும் பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டில் நிலவி வரும் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் விஷ விதையை விதைக்க விஸ்வ இந்து பரிஷத் முயற்சிப்பது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் திட்டமிட்ட நடவடிக்கையாகும்.

மாண்பமை பொருந்திய உச்சநீதிமன்றத்தில் ராமர் கோயில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது- அதுவும் குறிப்பாக அந்த வழக்கு விசாரணையை மாண்புமிகு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தற்போது நடத்திக் கொண்டிருக்கும் போது இப்படி நாடு முழுவதும் ராமர் கோயில் கட்ட ஆதரவு திரட்டுவதற்காக யாத்திரை நடத்துவது உச்சநீதிமன்ற அவமதிப்பு மட்டுமல்ல- மாட்சிமை பொருந்திய உச்சநீதிமன்றத்திற்கே அழுத்தம் கொடுக்கும் முயற்சியாகவே எண்ணிட வேண்டியதிருக்கிறது.

சட்டத்தின் ஆட்சியை மத்திய பா.ஜ.க. அரசு மதிக்கிறது என்றால், "உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் நீங்கள் யாத்திரை நடத்தி உச்சநீதிமன்றத்திற்கு தர்மசங்கடம் ஏற்படுத்தக் கூடாது" என்று மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. அதன் துணை அமைப்பான விஸ்வ இந்து பரிஷத்திற்கு எச்சரிக்கை விடுத்திருக்க வேண்டும். ஆனால் "வளர்ச்சி" என்று முழக்கமிட்டு மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாட்டின் மதசார்பற்ற தன்மைக்கும், மத நல்லிணக்கத்திற்கும், நாட்டின் பன்முகத்தன்மைக்கும் எதிரான செயல்களில் ஈடுபடுவோரின் முதுகில் தட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கும் மத்திய ஆட்சியாளர்கள் அப்படியெல்லாம் எச்சரிக்கவும் தயாராக இல்லை, அறிவுரை வழங்கவும் தயாராக இல்லை என்பது நாட்டின் ஒருமைப்பாட்டில் நம்பிக்கையுள்ள அனைவரையும் அதிர்ச்சியடைய வைக்கிறது. "சட்டத்தின் ஆட்சி" என்பது தங்களுக்குப் பொருந்தாது என்ற அராஜக மனப்பான்மையுடன் இந்துத்துவா அமைப்புகளை செயல்பட விடுவது நாட்டிற்கு நல்லதல்ல!

சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் "மதபயங்கரவாதத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்று ஒப்புக்கு அறிவுரை வழங்கிய அதிமுக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமியோ இந்த ரதயாத்திரையை தமிழ்நாட்டிற்குள் நாளைய தினம் நுழைய விட்டு தன் முதலமைச்சர் பதவியை தக்க வைத்துக் கொள்வதிலேயே ஆர்வமாக இருக்கிறார் என்பது வேதனையளிக்கிறது. சமூக நல்லிணக்கம் நிலவும் தமிழ் மண்ணில் மத துவேஷத்தை, மத பயங்கரவாதத்தை கிளப்பி விட்டு ஆட்சிக்கு வந்து விடலாம் என்று பா.ஜ.க. வும் சரி அதன் துணை அமைப்புகளும் தொடர்ந்து ஈடுபட்டு வருவது மிகுந்த கவலையளிக்கிறது என்றாலும், இந்த பாச்சா எல்லாம் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோர் பண்படுத்தியிருக்கின்ற தமிழ் மண்ணில் எடுபடாது என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன். ஆனாலும் தங்களின் பினாமி ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது என்ற ஒரே தைரியத்தில் இந்துத்துவா அமைப்புகள் தமிழகத்தில் நடத்தும் அத்து மீறல்கள், அராஜகங்களை எல்லாம் அதிமுக அரசு கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதால், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் போன்ற அமைப்புகளும் பயந்து ஒதுங்கி நிற்க வேண்டிய அசாதாரண சூழ்நிலை தற்போது தமிழகத்தில் நிலவுகிறது. இது மாநில பொது அமைதிக்கு எவ்விதத்திலும் ஏற்றது அல்ல!

ஆகவே, மதநல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் வகையிலும், ராமர் கோயில் விவகாரம் உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கின்ற நேரத்திலும், விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் "ரத யாத்திரையை" தமிழ்நாட்டிற்குள் நுழைய விடாமல் உடனடியாக அதிமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், மீறி நுழைந்தால் தமிழகத்தின் எல்லையிலேயே அவர்களை கைது செய்து உத்தரபிரதேசத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும் உச்சநீதிமன்றத்திற்கு மதிப்பளித்து இது போன்ற சட்டம்-ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் யாத்திரைகள் நடத்தும் இந்துத்துவா அமைப்புகளை எச்சரித்து அரசியல் சட்டப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தனது அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்தார்.

English summary
DMK Working President MK Stalin demands to ban the Viswa Hindu Parishad's Rath Yatra.TN Government should not allow the yatra enters in to our region.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X