சென்னையில் போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் நடக்கும் ஸ்டாலினின் ''நமக்கு நாமே''!
சென்னை: சென்னையில் ஜீப், கார், மோட்டார் சைக்கிளில் சாலைகளில் நமக்கு நாமே பயணத்தை மேற்கொண்டால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் அதைத் தவிர்த்துவிட்டு மக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் ‘நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்' மேற்கொண்டு வருகிறார். 4ம் கட்ட பயணத்தின் 3வது நாளான நேற்று சென்னை முத்தமிழ் நகரில் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், பேராசிரியர்கள், போக்குவரத்து, மாநகராட்சி, மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் ஸ்டாலின் கலந்துரையாடினார்.

அவர்கள் மத்தியில் ஸ்டாலின் பேசுகையில்,
தமிழகத்தில் அடுத்து நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கை எங்களை விடவும் உங்களுக்கு அதிகமாக இருக்கிறது. இதனால் தான் உங்களுடைய குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவிக்க வந்திருக்கிறீர்கள். செயல்படாத இந்த அரசை வழியனுப்பி வைக்க வேண்டிய,, மக்கள் உணர்வுகளை மதித்து கோரிக்கைகளை நிறைவேற்றும் பெரிய மாற்றம் தமிழகத்துக்கு தேவைப்படுகிறது.
இதற்கு வாய்ப்பு வருகிற சட்டமன்ற தேர்தல் தான். ஆகவே வருகிற ஆட்சி தி.மு.க. ஆட்சியாகத்தான் இருக்க வேண்டும்.
பிப்ரவரி மாதம் 12ம் தேதிக்குள் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை முடிவு செய்ய திட்டமிட்டுள்ளேன். சென்னையை பொருத்தமட்டில் ஜீப், கார், மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். ஆகையால் கலந்துரையாடல் நடத்துகிறேன்.

இந்த பயணத்தின்போது இதுவரை நான்கரை லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள், கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு நாங்கள் எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறோம். பொதுமக்கள் தந்த கோரிக்கைகள், மனுக்கள் சம்பந்தப்பட்ட அரசு துறைகளுக்கு நிவர்த்தி செய்வதற்காக ஒரு பிரதி எடுத்து அனுப்பிக் கொண்டிருக்கிறேன். அதேநேரத்தில் உறுதியாக நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றவும் காத்திருக்கிறேன்.
ஆட்சி என்பது மக்களுக்கு பணியாற்ற காத்திருக்கும் தேர். அந்த தேர் செல்ல சக்கரத்தைப்போல பக்கபலமாக இருப்பவர்கள் அரசு ஊழியர்கள். அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய பணியாற்றுபவர்களும் அவர்கள் தான். அரசு ஊழியர்கள் சிறப்பாக பணியாற்ற அவர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும்.

எதிர்கால சிற்பிகளை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள். கருணாநிதி முதல்வராக இருந்தபோது அரசு ஊழியர்களுக்கு நிறைவேற்றிய திட்டங்களைப் போல வேறு யாருமே நிறைவேற்றவில்லை.
பொங்கலுக்கு போனஸ் வழங்கும் திட்டம் முதன்முதலாக திமுக ஆட்சியில் தான் தொடங்கப்பட்டது. அரசு அலுவலகங்களில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு என எண்ணற்ற திட்டங்களை கருணாநிதி தலைமையிலான அரசு நிறைவேற்றியிருக்கிறது. ஆனால், அரசு ஊழியர்களின் குறைகளை கேட்கக்கூட தற்போதைய அரசு தயாராக இல்லை.
மக்களுக்கு சேவை செய்கிறவர்கள் அரசு ஊழியர்கள். ஆகவே அரசு ஊழியர்களுக்கு உதவி செய்யும் அரசு இருந்தால் தான், மக்கள் நலப்பணிகளை நீங்கள் உற்சாகமாக செய்வீர்கள் என்பதில் திமுக தெளிவாக இருக்கிறது. ஆட்சியில் இல்லாத சமயத்தில் குறைகளை கேட்பதுபோல, பொறுப்புக்கு வந்த பின்னரும் அனைவரையும் அழைத்து குறைகளை கேட்கும் ஆட்சியை திமுக அமைக்கும் என்றார்.
முன்னதாக திமுக இளைஞரணியின் மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் சென்னை தியாகராயநகரில் நடைபெற்றது.
அதில் வரும் சட்டசபை தேர்தலையொட்டி இளைஞரணியின் தேர்தல் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெறுவதற்கு எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது பற்றி மு.க.ஸ்டாலின் விரிவான ஆலோசனைகளை வழங்கினார்.
அதிமுக ஆட்சியில் நடைபெற்று வரும் முறைகேடுகளையும், ஊழல்களையும், நிர்வாகச் சீர்கேடு,சட்டம், ஒழுங்கு சீர்குலைவு, விலை உயர்வு உள்ளிட்ட மக்கள் விரோதப் போக்கினையும் பட்டியலிட்டு, அதனை எளிய முறையில் அச்சிட்டு, கிராமங்கள், குக்கிராமங்கள், நகரங்கள், மாநகரங்கள், வார்டுகள், வட்டங்கள் என மூலை முடுக்குகளிலெல்லாம் வசிக்கும் மக்களிடம் திமுக இளைஞர் அணி சார்பில் கொண்டு சேர்த்திடும் வகையில், வீதிகள் தோறும் வீட்டுக்கு வீடு சென்று அமர்ந்து, திண்ணைப் பிரச்சாரத்தை பிப்ரவரி 1 முதல் 29ம் தேதி வரையிலான ஒரு மாத காலத்திற்கு மேற்கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications