• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிலைகளை மீட்டெடுக்கும் பொன் மாணிக்கவேலை பணி செய்யவிடாமல் தடுப்பது ஏன்?- எம்எல்ஏ கருணாஸ் கேள்வி

By Lakshmi Priya
|
  சிலை கடத்தல் வழக்கை சிபிஐ.க்கு மாற்றியது தமிழக அரசு- வீடியோ

  சென்னை: திருடப்படும் தமிழ்நாட்டுச் சிலைகளை மீட்டெடுக்கும் ஐ.ஜி. பொன்மாணிக்கவேலை தமிழக அரசு பணி செய்யவிடாமல் தடுப்பது ஏன்? என்று எம்.எல்.ஏ. கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

  தமிழர் நாகரிகம் - தமிழர் தொன்மை - தமிழர் பண்பாடு என நம் முன்னோர் வாழ்ந்த அடையாளங்களே நம்மை நம் சந்ததியினரை அடையாளப்படுத்துகின்றன. அது அடுத்த தலைமுறையின் வாழ்வியலுக்கு வழிகாட்டுகின்றன. இவற்றையெல்லாம் மூடி மறைக்கும் செயல்களில் நம் இன எதிரிகளாய் உள்ளோர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். காரணம் தமிழர் என்ற இனத்தை புதிய உலகத்திற்கு அடையாளம் காட்ட மறுக்கும் சூழ்ச்சி! இனப்பகையின் வெளிப்பாடு! இதன் வெளிப்பாடாகத்தான் நமது தொன்மையான நாகரிகங்களை வெளிக்காட்டவும், அதை மூடி மறைக்கவும் அவர்கள் முனைகின்றனர். எடுத்துக்காட்டாக, பூம்புகார், கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற அகழ்வாரய்ச்சி அவ்வபோது அரசுகளாலும், எதிரிகளாலும் தடுக்கப்படுகின்றன.

  MLA Karunas condemns TN government for transferring statue smuggling case to CBI

  கடந்த சில ஆண்டுகளாக தமிழர் தொன்மை வாய்ந்த சிலைகள் அடையாளங்கள் கடத்தப்படுகின்றன. அதற்கு அரசே துணை போகிறதோ என்ற அய்யப்பாடு எழும்புகிறது!

  லண்டன், ஆஸ்திரிலியா, உள்ளிட்ட மேற்குலக நாடுகளிலும், குஜராத், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிக்கும் தமிழ்நாட்டு தொன்மையான அடையாளங்கள் சிலைகள் கடத்தப்படுகின்றன. தமிழக அரசு அதை மீட்டெடுக்க முயற்சிப்போரை தடுக்க நினைப்பது ஏன்?

  தமிழ்நாட்டிலிருந்து கடத்தப்பட்ட மிகவும் பழமையான சிலைகளை ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தொடர்ந்து மீட்டு வருகின்றனர். 1.49 கோடி ரூபாய் விலை மதிப்புள்ள சோழர் காலத்துச் சிலைகள் சமீபத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்டது அதற்கு சான்று.

  ஆஸ்திரேலியாவில் உள்ள மேலும் 7 சிலைகளை மீட்டு கொண்டு வரும் முயற்சியில் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் டீம் தீவிரமாக இறங்கியுள்ளனர். தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே உள்ள மானம்பாடி கிராமத்தில் நாகநாதசாமி கோயில் உள்ளது. இங்கிருந்து ஆயிரம் ஆண்டுகள் பழமையான, நடனமாடும் கோலத்தில் சம்பந்தர் சிலை திடீரென காணாமல் போனது.

  அந்தச் சிலையின் தற்போதைய மதிப்பு 4.59 கோடி. சீர்காழி சாயவனம் சிவன் கோயிலில் குழந்தை வடிவில் இருந்த பஞ்சலோக சிலை ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. அதுவும் இங்கிருந்து கடத்தப்பட்டது. மயிலாடுதுறை, திருநெல்வேலி உள்ளிட்ட இன்னும் பல இடங்களிலிருந்து திருடப்பட்ட சிலைகள் ஆஸ்ரேலியாவில் உள்ள மியூசியத்தில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் உறுதிப்படுத்தினர்.

  அந்தச் சிலைகள் தமிழ்நாட்டிலிருந்து திருடப்பட்ட சிலைகள்தான் என்பதற்கான ஆதாரங்களைத் திரட்டி வந்தனர்.

  ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் உள்ள சிலைகளில் 7 சிலைகள் தமிழ்நாட்டிலிருந்து கட்டத்தப்பட்டவை என்பதற்கான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை பொன்மாணிக்கவேல் சமர்பித்தார். அதனை ஏற்றுக்கொண்ட ஆஸ்திரேலியா அதிகாரிகள் சிலைகளைத் திருப்பிக் கொடுக்க சம்மதம் தெரிவித்தனர். அந்த 7 சிலைகளையும் மீண்டும் தமிழ்நாட்டிற்கு கொண்டுவர ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் நடவடிக்கை மேற்கொண்டார்.

  மேற்கண்ட அவரின் செயல்பாடுகளை அரசு ஊக்கப்படுத்துவதில்லை. அதை தடுப்பதற்கான சூழ்ச்சிகளில் பல்வேறு நிலைகளில் இறங்கியது. அவரை அந்தப் பணியை சுதந்திரமாக செய்யவிடாமல் தடுக்கிறது என்பதை அவரே பல நேரங்களில் தனது பேட்டியில்வெளிப்படுத்தினார்.

  சிலை கடத்தல் விவகாரமாக நீதிமன்ற உத்தரவுகளைச் செயல்படுத்த, தமிழக அரசு முழு ஒத்துழைப்புக் கொடுப்பதில்லை'' என்று புகார் தெரிவித்திருக்கிறார் சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் மேலும், சிலைகளைப் பாதுகாக்க அறைகள் அமைப்பது தொடர்பாக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை; சிலைக் கடத்தல் தடுப்பு சிறப்புக் குழுவில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளைத் தனக்குத் தெரியாமல், நீதிமன்றத்தின் அனுமதி பெறாமல் பணியிடை மாற்றம் செய்கிறார்கள் என்பது அவர் அளித்திருக்கும் புகார்கள்.

  இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், ஜூலை 11-ம் தேதிக்குள் கோயில்களில் சிலைகள் பாதுகாப்பு அறைகள் அமைப்பது தொடர்பாக அறிக்கை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக நேரிடும்'' என்று எச்சரித்திருத்தார் அதேபோல, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளை, நீதிமன்றத்தின் அனுமதியின்றி பணியிடை மாற்றம் செய்வது கண்டனத்துக்குரியது. தொடர்ந்து இதுபோலச் செயல்பட்டால் டி.ஜி.பி நேரில் ஆஜராக நேரிடும்'' என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

  தமிழக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி-யாக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவருபவர் பொன்.மாணிக்கவேல். இவர் தலைமையிலான குழு, பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. தமிழகக் கோயில்களில் திருடப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளை மீட்டிருக்கிறது. பல சிலை திருட்டுகளையும் தடுத்திருக்கிறது. சிலைக் கடத்தல் பிரிவில் 33 வழக்குகளும், தமிழகம் முழுவதும் 455 வழக்குகளும் பதிவாகின. இந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் அவரை ரயில்வே ஐ.ஜி-யாகப் பணியிடை மாற்றம் செய்து உத்தரவிட்டது தமிழக அரசு.

  ஆனால், சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரித்தவந்த நீதிபதி மகாதேவன், சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுதான் விசாரிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார். அதன் காரணமாக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவையும் கூடுதலாகக் கவனித்துக்கொண்டார் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது தமிழ்நாடு அரசு. ஆனால் அங்கேயும், நீதிபதி மகாதேவனின் உத்தரவு சரிதான்' என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

  மீண்டும் தனது அதிரடி நடவடிக்கைகளைத் தொடங்கினார் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல். மாமன்னர் ராஜராஜன் - உலகமாதேவி சிலைகளை குஜராத்திலிருக்கும் சாராபாய் தனியார் அருங்காட்சியகத்திலிருந்து மீட்டுக்கொண்டு வந்தார். பழனி கோயில், உற்சவர் சிலையில் மோசடி நடந்ததையும் இவர் தலைமையிலான குழு வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது.

  அதற்குப் பின்னர், பல தரப்புகளிலிருந்து அவருக்கு நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாகவும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சரியாக ஒத்துழைப்புக் கொடுப்பதில்லையென்றும் தொடர்ச்சியாக செய்திகள் வெளிவந்தன.

  இந்த வழக்கில் முக்கியமான பலர் சிக்கியிருக்கிறார்கள். தீவிரமாக விசாரித்தால், அனைவரும் வெளிச்சத்துக்கு வந்துவிடுவார்கள். அதற்கு பயந்துதான் பல தரப்பிலிருந்தும் அவருக்கு நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன. அவர் அதற்கெல்லாம் பயப்படாமல், கட்டுப்படாமல் செயல்பட்டுவருகிறார். அவர், வருகிற 2018 நவம்பர் மாதத்தோடு ஓய்வு பெற இருக்கிறார்.

  அதனால் இப்படியே இழுத்தடித்து, இந்த வழக்குகளை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். சிலைகளின் உள்ளேயிருக்கும் உலோகங்களைக் கண்டறியும் இயந்திரத்தை வாங்கச் சொல்லி, இந்து சமய அறநிலையத்துறையிடம் கேட்டிருந்தார். பணம் இல்லை' என்று இழுத்தடித்தார்கள்; அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்திருப்பதாகக் காரணம் சொன்னார்கள்.

  அந்த இயந்திரத்தின் விலை வெறும் இருபது லட்ச ரூபாய்தான். இதை வாங்கப் பணமில்லை என்பவர்கள், திருக்கண்ணபுரம் கோயிலுக்கு இரண்டரை கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள். மாங்காடு அம்மன் கோயிலுக்கு கார் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் பல லட்ச ரூபாய் பெருமானமுள்ள ஆடி கார். இதற்கெல்லாம் பணம் இருக்கும்போது, உலோகங்களைக் கண்டறியும் கருவி வாங்க மட்டும் பணம் இல்லையா? இது குறித்து நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

  தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், அறநிலையத்துறை ஆணையர் ஜெயா, டி,ஜி.பி டி.கே.ராஜேந்திரன் ஆகியோருக்கு நீதிமன்றத்தை அவமதித்ததாக நோட்டீஸ் அனுப்பினார் பொன்மாணிக்கவேல். நேர்மையாகச் செயல்படும் அதிகாரிகளை பணம் கொடுத்து, பதவி கொடுத்து மடக்கப் பார்க்கிறார்கள். முடியாவிட்டால், இப்படி நெருக்கடிகள் கொடுக்கிறார்கள்.

  சிலைக் கடத்தல் தொடர்பாக ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் மேற்கொண்ட நடவடிக்கைகளை ஆரம்பத்திலிருந்தே அரசாங்கம் விரும்பவில்லை. அதனால்தான் அவரை வேறு துறைக்கு டிரான்ஸ்ஃபர் செய்தார்கள். நீதிமன்றம் அவரைச் சிலைக் கடத்தல் தொடர்பாக மட்டும் விசாரிக்கச் சொல்லவில்லை. கோயில்களிலுள்ள விலை உயர்ந்த ஆபரணங்கள் குறித்தும் விசாரிக்கச் சொல்லி ஆணை பிறப்பித்திருந்தது. ஆபரணங்களில் மோசடி நடைபெற்றிருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. அது குறித்து விசாரித்தால், பலர் சிக்கிக்கொள்வார்கள். ஒருவேளை இது வெளியில் தெரிந்தால், அரசாங்கத்துக்குக் கெட்ட பெயர் ஏற்படும் என்பதால், அரசாங்கம் ஒத்துழைப்புக் கொடுக்காமல் இருக்கிறது என்பது தெளிவாகிறது.

  அரிய கலைக் கருவூலங்களாக விளங்கக்கூடிய சிலைகளை யெல்லாம் வெளிநாடு களில், வெளிமாநிலங்களில் விற்று இத்தனை ஆண்டு காலம் இலாபமடைந்திருக் கிறார்கள். ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் அதற்குத் தடையாக இருக்கிறார். அவர் புலனாய்வு செய்து விசாரித்த தகவல்களை அவருக்கு மூத்த அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்று அவரை நிர்பந்திக்கிறார்கள். அரசியல் பிரமுகர்களுக்கு இந்த மோசடிகளில் தொடர்பிருக்க வாய்ப்பிருக்கிறது. அதனால்தான் அவரிடமிருந்து தகவல்களைப் பெற்று காப்பாற்ற நினைக்கிறார்கள். நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அவர், நீதிமன்றத்தில்தான் அந்தத் தகவல்களைத் தெரிவிக்க வேண்டுமே தவிர, அதிகாரிகளிடம் தெரிவிக்கவேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசு, அவருக்கு மேலும் ஊக்கத்தை அளித்து, அவரை உற்சாகப்படுத்தவேண்டும். அவரை நெருக்கடிக்கு உள்ளாக்கி, அவரைப் பணியிலிருந்து விடுவித்துவிட வேண்டும் என்று நினைக்கக் கூடாது.

  இது போன்ற சூழ்ச்சி வேலைகளில் தமிழக அரசு இனியும் தொடர்ந்தால் மக்களிடையே அம்பலப்பட்டுப் போகும். தமிழரின் அரிய அடையாளங்களை மீட்டெடுக்க தொடர்ந்து முயற்சி செய்து வரும் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் அவர்களை தமிழக அரசு பாராட்டக் கூட வேண்டாம். அவரை அதை செய்ய விடாமல் பல வழிகளில் நெருக்கடிக் கொடுத்தால் சிலைக்கடத்தல் விவகாரம் அரசுக்கு தெரிந்தே நடக்கிறது என்பது பொருளாகும்.

  தமிழரின் உரிமைகளை அயல்நாட்டிலும், அண்டை மாநிலங்களிலும் அடகு வைத்ததுபோல தமிழர் பண்பாட்டு அடையாளங்களையும் அடகு வைக்க முயலாதீர்கள்! தன்னலத்திற்காக அப்படி நீங்கள் செய்ய விரும்பினால் வரலாறு என்றுமே உங்களை மன்னிக்காது! நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

  இவ்வாறு தனது அறிக்கையில் கருணாஸ் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  MLA Karunas condemns TN government for transferring Statue smuggling case to CBI.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more