மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்: 'தேவதாசி முறைக்கு' எதிராக முதல் போர்க்குரல்-அடக்குமுறைகள்தான் எத்தனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் மறைந்த முதல்வர் கருணாநிதியால், பெண்களுக்கு திருமண உதவி வழங்கும் திட்டத்துக்கு வைக்கப்பட்ட பெயர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டம் என்பதாகும்.. தமிழர் சரித்திரத்தின் பக்கங்களில் பெரும் போர்க்களங்களை சந்தித்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் வரலாறு இன்றைய தலைமுறை அவசியம் அறிய வேண்டியதாகும்.

மன்னராட்சி காலம் தொடங்கி ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் வரை இந்திய நிலப்பரப்பில் பெண்களுக்கு எதிரான பல்வேறு அடக்குமுறைகள் 'சனாதனம்' 'மனுதர்மம்' ஆகியவற்றின் பெயரால் நிலைநிறுத்தப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்றுதான் தேவதாசி முறை.

ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த பெண்கள் குழந்தைகளாக இருக்கும் போது கடவுளுக்கு, கோவில்களுக்கு என பொட்டுக்கட்டி விடப்படுவர்; பொட்டுக்கட்டுதல் என்பது கடவுளுக்கு நேர்ந்துவிடப்படுவர்; இவர்கள்தான் தேவரடியார்கள் அல்லது தேவதாசிகள் என அழைக்கப்பட்டனர். இறைவனுக்கு மட்டுமே சேவை செய்யக் கூடிய இவர்கள் திருமண வாழ்வை தேர்வு செய்யக் கூடாது; தேவதாசிகள், தேவரடியார்கள் என்பவர்கள் கோவில்களை நிர்வகிக்கும் கூட்டத்தின் 'ஆசைநாயகி'களாக இருக்க வைக்கப்பட்டனர்; பிஞ்சு குழந்தைகளை கூட கோவில் நிர்வாகத்தில் இருக்கும் கிழட்டுக் கூட்டம் விட்டு வைக்காமல் வேட்டையாடுகிற கொடூரங்களை சந்தித்தனர் தேவரடியார்கள் எனும் தேவதாசிகள்.

இத்தகைய தேவதாசி முறை ஆங்கிலேயர் ஆட்சியிலும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் குறிப்பாக பெரும் கோவில்கள் கோலோச்சிய நிலப்பரப்பில் இருந்தன. இந்த பின்னணியில் மயிலாடுதுறை அருகே மூவலூர் என்ற கிராமத்தில் கிபி 1883-ம் ஆண்டு பிறந்தவர் ராமாமிர்தம். பிஞ்சு குழந்தையாக இருந்த போது தந்தை கிருஷ்ணசாமி, ராமாமிர்தத்தையும் தாயையும் விட்டு விட்டு சென்றார். தாயோ அன்று ரூ.10-க்கும் ஒரு பழைய சேலைக்கும் தேவதாசி ஒருவரிடம் ராமாமிர்தத்தை 'விற்று'விட்டு சென்றார்.

அன்று முதல் தேவதாசி வீட்டு பெண்ணாக வளர்க்கப்பட்டார்; பிஞ்சு வயதிலேயே தேவதாசி குல வழக்கப்படி, கோவிலுக்கு பொட்டுக்கட்டிவிடப்படும் முடிவை வளர்ப்பு தாயார் எடுத்தார்; ஆனால் வெளியூரைச் சேர்ந்த ஜாதி தெரியாத பெண்ணை தேவதாசியாக ஏற்க மறுத்தனர்; இந்த களேபரங்களுக்கு நடுவே தமக்கு கலைகளை கற்றுத் தந்த ஆசானையே தேவதாசி குல வழக்கத்துக்கு எதிராக திருமணம் செய்து கொண்டார்.

அப்போது அண்ணல் காந்தியடிகள், தேவதாசி முறைக்கு எதிராக காங்கிரஸ் பேரியக்கத்தை போராட வைத்தார்; இதனால் காந்தியார் தலைமையை ஏற்று காங்கிரஸில் இணைந்தார்; அன்றைய காங்கிரஸின் பெண் பேச்சாளர்களில் முதன்மையாகவாக திகழ்ந்தவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். தேவதாசி முறைக்கு எதிராக மேடைகளில் சண்டமாருதமாக முழங்கிய ராமமிர்தம் அம்மையார் எதிர்கொண்ட அடக்குமுறைகள் எத்தனை எத்தனை.. தேவதாசி முறையை ஆதரித்த கும்பல், ராமாமிர்தம் அம்மையாரை கொடூரமாக தாக்கியது; அவரது தலைமுடியை மழித்தது; அவர் மீது சாணத்தை ஊற்றி அவமானப்படுத்தியது; ஆனாலும் வீறு கொண்ட வேங்கையாக வெகுண்டு எழுந்து கொள்கை முழக்கம் செய்தார்.

பின்னர் தந்தை பெரியாரின் தலைமையை ஏற்று சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிடர் கழகம் என பயணித்தார் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். 1929-ல் தமிழ்நாடு சட்டசபையில் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்படவும் அன்னை முத்துலட்சுமி ரெட்டியார், இந்த தேவதாசி முறைக்கு எதிராக சட்டசபையில் ஆணித்தரமாக முழக்கமிட்டதற்கும் அடிநாதமாக இருந்தவர் மூவலுர் ராமாமிர்தம் அம்மையார்தான்.

1937-ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது இந்தி ஆதிக்க எதிர்ப்பு போரில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி நடைபயணமாக வந்த தமிழர் பெரும்படையின் தளபதிகளில் ஒருவராக திகழ்ந்து சிறை தண்டனை அனுபவிதவர் ராமாமிர்தம் அம்மையார்.

தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறி பேரறிஞர் அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் பணியாற்றினார்; திமுகவின் முன்னோடி பெண் ஆளுமைகளில் ஒருவராக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திகழ்ந்தார்.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் சுயசரிதையான தாசிகளின் மோசவலை அல்ல மதிபெற்ற மைனர் என்ற நூல் வெளியான போது தமிழ்ச் சமூகத்தில் மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதில் பல்வேறு மூடநம்பிக்கைகளை கடுமையாக விமர்சித்திருந்தார் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். கடவுள், மோட்சம் ஆகியவற்றின் பெயரால் நிகழ்த்தப்படுகிற கொடுமைகளையும் விவரித்திருந்தார். 1962-ம் ஆண்டு இயற்கை எய்தினார் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். தமிழ்நாட்டின் வரலாற்றில் நிலை புகழ் பெற்ற இந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயரில்தான், பெண்களுக்கான தமிழ்நாடு அரசின் திருமண உதவித் திட்டத்தை அறிவித்தார் மறைந்த முதல்வர் கருணாநிதி. இதனாலேயே மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயர் சரித்திரத்தின் பக்கங்களில் அழியாமல் நிலைபெற்றுவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+