For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லோகநாதன் உடல் தகனம்: நர்ஸ் என்பதால் மகனின் உடல் உறுப்புகளை தானம் வழங்கிய தாய்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் செய்த இளைஞரின் உடல் சொந்த ஊரில் செவ்வாய்க்கிழமை மாலை தகனம் செய்யப்பட்டது. தாய் ஒரு நர்ஸ் என்பதால், மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு உடனடியாக சம்மதித்தார் என தெரியவந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் பழையனூர் யாதவர் தெருவை சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவரது ஒரே மகன் லோகநாதன் (27). எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் பட்டயப் படிப்பு படித்துவிட்டு, சென்னையில் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த 11-ம் தேதி மோட்டார் சைக்கிளில் சென்ற போது சாலை விபத்தில் சிக்கிய லோகநாதன், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவர், திங்கள்கிழமை (ஜூன் 16) காலையில் மூளைச்சாவு அடைந்தார்.

மும்பை பெண்ணுக்கு இதயம்

இதையடுத்து மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய தாய் ராஜலட்சுமி முன்வந்தார். எனவே அன்று மாலையே அறுவைச் சிகிச்சை செய்து லோகநாதனின் உடலில் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், கண்கள் மற்றும் முதுகில் இருந்து தோல் ஆகியவற்றை டாக்டர்கள் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து இரவோடு இரவாக அடையாறு ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் இதய கோளாறால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மும்பையை சேர்ந்த இளம் பெண்ணுக்கு லோகநாதனின் இதயம் பொருத்தப்பட்டது.

சிறுநீரகங்கள், கல்லீரல்

இதே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இரு நோயாளிகளுக்கு தலா ஒன்று வீதம் சிறுநீரகம் பொருத்தப்பட்டது. வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு கல்லீரலை டாக்டர்கள் பொருத்தினர். கண்கள் இரண்டும் எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பொருத்தப்பட உள்ளது. அதே போல தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பயன்படுத்துவதற்காக தோல் கீழ்ப்பாக்கம் ரைட் மருத்துவமனைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

9 பேர் கொண்ட குழு

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தமிழ்நாடு அரசின் மூளைச்சாவு உறுப்பு மாற்று சிகிச்சை திட்டம் செயல்பட்டு வருகிறது. திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் அமலோற்பவநாதன் தலைமையில் 11 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களைத் தவிர மூளைச்சாவு அடைபவர்களின் உறவினர்களிடம் சென்று உடல் உறுப்பு தானம் பற்றி தெரிவித்து, இறந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் பெறுவதற்காக மோகன் அறக்கட்டளை சார்பில் பிரகாஷ் மற்றும் சுனிதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கட்டாயப்படுத்த மாட்டோம்

இந்த மருத்துவமனையில் மூளைச்சாவு அடையும் நபர்களின், உறவினர்களிடம் சென்று உடல் உறுப்பு தானத்தின் பயன்கள் பற்றி விளக்குவோம். எங்களுடைய கவுன்சலிங்கில் உடல் உறுப்பு தானம் செய்ய பலர் சம்மதிப்பார்கள். ஆனால், ஒரு சிலர் அடிக்கவும் வருவார்கள். கேவலமாக திட்டவும் செய்வார்கள். உடல் உறுப்பு தானம் செய்ய விருப்பம் இல்லாதவர்களை கட்டாயப்படுத்த மாட்டோம் என்று லோகநாதனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய வைத்த பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

நர்ஸ் வேலை பார்க்கும் தாயார்

லோகநாதன் விஷயத்தில் அவ்வளவு சிரமம் ஏற்படவில்லை. அவருடைய தாய் ராஜலட்சுமி ஒரு நர்ஸ் என்பதால், மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய உடனடியாக சம்மதம் தெரிவித்துவிட்டார். லோகநாதன் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்ததும், நான் அந்த வார்டுக்கு சென்றேன். அங்கிருந்த அவருடைய தாய் ராஜலட்சுமியிடம் மகனின் விபத்து பற்றி கேட்டறிந்து, அவருக்கு ஆறுதல் தெரிவித்தேன்.

சம்மதித்த ராஜலட்சுமி

மூளைச்சாவு எல்லோருக்கும் நிகழாது. யாரோ ஒருவருக்குத்தான் நிகழும். மூளைச்சாவு அடைந்தவரால்தான், மற்றவர்களுக்கு உயிர் கொடுக்க முடியும். உங்களுடைய மகனின் உடல் உறுப்பு களை தானம் செய்வதன் மூலம், பலர் உயிர் பிழைப்பார்கள் என உடல் உறுப்பு தானம் பற்றி விரிவாக ராஜலட்சுமியிடம் தெரிவித்தேன். "மற்றவர்களுக்கு உதவி செய்வது எனக்கும், என் மகனுக்கும் மிகவும் பிடிக்கும். என் மகனால், பலர் உயிர் பிழைப்பார்கள் என்றால் அது பெருமைப்பட வேண்டியது விஷயம்" என ராஜலட்சுமி தெரிவித்தார். அவர் ஒரு நர்ஸ் என்பதால், சொன்னவுடன் புரிந்துகொண்டு மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார் என்றார்.

482 பேர் உடல் உறுப்பு தானாம்

சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த ஹிதேந்திரன் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு அரசு மூளைச்சாவு உறுப்பு மாற்றுசிகிச்சை திட்டம் 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக டாக்டர் அமலோற்பவநாதன் நியமிக்கப்பட்டார். இத்திட்டத்தின் மூலம் இதுவரையில் 482 பேர் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். இதயம் - 76 , நுரையீரல் - 440 சிறுநீரகம் - 861, கணையம் 1, இருதய வால்வு 500, கண் விழித்திரை 730, தோல் 4 தானமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2649 பேர் உயிர் பிழைத்துள்ளனர்.

தமிழகம் முதலிடம்

இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. மற்ற மாநிலங்களைவிட, தமிழகத்தில் 10 சதவீதம் கூடுதலாக உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுகிறது. இதுவரை மூளைச்சாவு அடைந்த 482 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். தற்போது உடல் உறுப்பு தானம் செய்துள்ள லோகநாதன் 483-வது நபர். உடல் உறுப்பு தானம் 90 சதவீதம் வெற்றி அடைந்துள்ளது என்று டாக்டர் அமலோற்பவநாதன் கூறியுள்ளார்.

தாயார் ராஜலட்சுமி கண்ணீர்

அப்பா இல்லாத ஒரே மகனை மிகவும் பாசத்துடன் வளர்த்தேன். ரயில்வே வேலைக்கு போவதையே லட்சியமாக கொண்டு இருந்தார். வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றுவான் என நினைத்து இருந்தேன். ஆனால் மகன் என்னைவிட்டு போய்விட்டான். மகன் பிழைக்க மாட்டான் என டாக்டர்கள் சொன்னதால், மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதித்தேன். என் மகன் இறந்தாலும், அவனது உடல் உறுப்புகள் மூலம் பல பேரின் உயிரை காப்பாற்றி இருக்கிறான் என்பதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது எனக் கூறி கண்ணீர் விட்டு அழுதார் ராஜலட்சுமி.

விபத்தை தவிர்க்க வேண்டும்

என் மகனால் பலர் பயனடையவேண்டும் என்பதால் உடல் உறுப்புகளை தானம் செய்தேன். என் மகன் இப்போது பலரது உருவங்களில் உயிர் வாழ்கிறான். என் மகனைப் போல யாரும் விபத்தில் உயிரிழக்க கூடாது. கிராமங்களில் அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கண்ணீருடன் கேட்டுக்கொண்டார் அந்த தாய்.

உடல் தகனம்

இந்நிலையில் லோகநாதனின் உடலை பிரேதப் பரிசோதனை செய்து செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணியளவில் உறவினர்களிடம் டாக்டர்கள் ஒப்படைத்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர். இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகு, மாலையில் லோகநாதனின் உடலை பழையனூரில் தகனம் செய்தனர்.

English summary
Loganathan the accident victim was declared brain dead and his family agreed to donate his organs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X