For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முத்துப்பேட்டை தர்கா மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்க: வைகோ, இளங்கோவன், வேல்முருகன் கண்டனம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: முத்துப்பேட்டை தர்கா மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Muthupettai Dargah wall demolish: Vaiko, EVKS ElangovanVelmurugan condemned

இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

மத நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழும் முத்துப்பேட்டை அம்மாபள்ளி தர்காவை புத்தாண்டு அன்று நள்ளிரவில் சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்த 150 பேர் உருட்டைக்கட்டைகளோடும், கற்களோடும் சென்று தாக்கியுள்ளனர். இந்தப் புகழ்மிக்க தர்காவுக்கு இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் அனைவரும் நாள்தோறும் வருகின்றனர். பலர் இரவு வேளைகளில் அந்த தர்காவின் தாழ்வாரங்களில் படுத்து உறங்குகின்றனர். இதைச் சகிக்காத பாரதிய ஜனதா கட்சியினரும், மத வெறியர்களும் 150 க்கு மேற்பட்டவர்கள் புத்தாண்டு அன்று நடுநிசியில் தர்கா வளாகத்துக்குள் நுழைந்து தாக்க ஆரம்பித்தவுடன், பயந்துபோன யாத்திரிகர்கள் தர்காவுக்குள் ஓடிச் சென்று கதவை தாழிட்டுக்கொண்டனர். இல்லையேல், பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும்.

உள்ளே நுழைய முடியாத வன்முறைக் குண்டர்கள் தர்காவின் சுற்றுச்சுவரை உடைத்து நொறுக்கி இருக்கிறார்கள். தர்காவின் கண்ணாடி ஜன்னல்களையும், டியூப்லைட்டுகளையும் உடைத்திருக்கிறார்கள். அருகில் இருந்த ஒரு இந்து மதத்தவர் வீட்டையும், ஒரு இஸ்லாமியர் வீட்டையும் சுற்றி அமைக்கப்பட்டிருந்த வேலிகளை நொறுக்கியிருக்கிறார்கள்.

இந்தக் கொடூரமான தாக்குதலை அறிந்து மத வித்தியாசம் இன்றி, இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட ஊர் மக்கள் அனைவரும் தர்காவை பாதுகாக்க விரைந்து வந்தவுடன், வன்முறையாளர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக ஒரு தொகுதியில் போட்டியிட்ட நபரின் ஆதரவாளர்கள்தான் இந்த வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முத்துப்பேட்டையினுடைய காவல்துறை துணை கண்காணிப்பாளரின் அணுகுமுறைதான் இந்த வன்முறை வெறியாட்டத்தை ஊக்குவித்திருக்கிறது. சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்.

தர்கா மீது தாக்குதல் நடத்திய குண்டர்களை தமிழக காவல்துறை உடனடியாகக் கைது செய்து, தகுந்த சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்து குற்றக் கூண்டில் நிறுத்தி, தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும் என்று வைகோ தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"நாகூர் தர்காவுக்கு அடுத்து மிகப்பெரிய தர்கா, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ளது. இந்த தர்காவின் 100 அடி நீள சுற்றுச்சுவரை இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இதில் 50-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மத நல்லிணக்கத்துக்கு பெருமை சேர்க்கும் மாவட்டமாக தஞ்சை மாவட்டம் உள்ளது. அதனை சீர்குலைக்கும் வகையில் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதை அனுமதிக்க முடியாது.

அப்பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஒருவரின் ஆதரவோடு தான் வன்முறைகள் நடந்ததாகக் கூறப்படுகிறது. இது உண்மையானால் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

வேல்முருகன் அறிக்கை:

புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் வெறியாட்டம் போட்ட அந்த கும்பல் இஸ்லாமியர்கள் வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. அத்துடன் இஸ்லாமியர் வழிபாட்டுத் தலமான தர்காவின் சுற்றுச் சுவர் மற்றும் மின்விளக்குகளைத் தகர்த்துள்ளனர்.

இந்துத்துவா கும்பலின் இந்த அட்டூழிய வன்முறைக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். முத்துப்பேட்டையில் அனைத்து சமூகத்தினரும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இதனை சீர்குலைக்கும் வகையில் இந்துத்துவா கும்பல் வன்முறை சம்பவங்களை அரங்கேற்றி வருகிறது. இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டோர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

English summary
Tension prevailed in Muthupettai after the compound wall of a dargah, located adjacent to the famous Andavar Shahul Dawood Kamlil Valyullah Dargah, was demolished by New Year revellers on Wednesday night. Two persons inside the dargah were also injured in the incident. Vaiko, EVKS Elagovan and Velmurugan has condemned this incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X