காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தல்... சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர்!
சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதிலும் நாம் தமிழர் கட்சியினர் பல விதமான போராட்டங்களை முன்எடுத்தனர். கண்டன பொதுக்கூட்டம், ரயில் மறியல் மற்றும் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு சுங்க கட்டணம் வசூலிக்க விடாமல் போராட்டம் நடத்தினர்.
உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ம் தேதி அளித்த தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் போராட்ட களமாகியுள்ளது. கடந்த 3 தினங்களாக தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன.

காவிரி நதிநீர் உரிமைக்கான போராட்டத்தை பல தளங்களில் பன்முகப் போராட்டமாக விரிவடைய செய்வோம். போராட்ட வடிவங்கள் மாறிக்கொண்டே இருக்கட்டும்; களங்கள் மாறிக்கொண்டே இருக்கட்டும்; இலக்கு ஒன்றாக இருக்கட்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதனையடுத்து காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். பூம்புகாரில் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வலியுறுத்தி மறைமலைநகர் நாம் தமிழர் உறவுகள் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டிக்கும் விதமாக சோழிங்கநல்லூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுங்கக்கட்டணம் வசூலிக்கவிடாமல் இவர்கள் நடத்திய போராட்டத்தால் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது. இதே போன்று துரைபாக்கம் சுங்கச்சாவடியையும் முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வலியுறுத்தி வேலூர் மாவட்டத் தலைமை தபால் நிலையத்தை பூட்டு போட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 40பேர் கைது செய்யப்பட்டனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!